Thursday, January 11, 2018

சில ரகசிய குறிப்புகள் -- விமர்சனம்


நான் ரசித்த "சில ரகசிய குறிப்புகள்" எனும் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் புத்தகம் குறித்தொரு பார்வை... 

யார் ஒருவர் மட்டையுடன் களத்தில் இறங்கி வந்தாலும் அதில் ஒரு ரசனை இருக்கும். சச்சின் களத்தில் இறங்கி வரும் போது மட்டும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்... 

அது போலவே புத்தகங்கள் வாசிப்பது பிடிக்குமெனக்கு. ஆனால் ஜோதிஜி சார் புத்தகம் கையிலெடுக்கும் தருணம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இம்முறையும் அப்படியே இப்புத்தகத்தையும் கையிலெடுத்தேன் "வாடா தம்பி உனக்காகத் தான் இதை நான் எழுதியிருக்கிறேன் என்பது போல் எனை வரவேற்றது இப்புத்தகம்" காரணம் வழக்கமாக வரவேற்கும் கட்டுரையல்ல இம்முறை எனை வரவேற்றது... 

இது ஒரு கதை நாகமணி என்ற சக ரயில்பயணி பகிர்ந்து கொண்ட தன் கதை. 
கதையென்றால் நமக்குக் கொள்ளை பிரியம் அதுவும் சொல்ல போகிறது நமக்குப் பிடித்த எழுத்தாளர் ஜோதிஜி சார் அவர்கள். பாலாசுழையைத் தேனில் முக்கியெடுத்துச் சுவைக்கப் போகும் மனநிலையோடே புத்தகத்தினுள் மூழ்கினேன்... 

நாகமணி எனும் எதிர்பாலினத்தவரிடையேயான தனது உரையாடலை சொல்லும் ஆசிரியர் நமது ஆழ்மனதுடனும் பேசுகிறார். எதிர்பாலினத்தவரிடம் எப்படிப் பழக வேண்டும், எந்தளவு முன்னெச்சரிக்கையாய் நடந்து கொள்வது அவசியம் என எதோ ஒரு வகையில் நம்மிடம் அளவளாவுகிறார். வாசகனுக்கும் தன் சிறந்த பழக்கவழக்கத்தின் மூலம் பாடமெடுக்கிறார்... 

எனது அம்மா பாலியல் தொழிலாளி; என்று நிமிர்ந்த பார்வையும் கலங்கிய கண்களுடன் நாகமணி சொல்லும் இடம் ஒரு நிமிடம் நம்மையும் அவ்விடம் விட்டு நகர விடாமல் தான் செய்கிறாள்... 

தன் அம்மாவைப் பிரிந்து வந்து ஜெயித்த நாகமணி தன் அம்மாவைப் புரிந்து கொள்ளும் தருணம் அம்மா உலகில் இல்லை என்பது வேதனை... 

ஜெயித்த ஒரு பெண்ணின் வாழ்வின் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான் என்பதை அறுதியிட்டுக் கூறுவது அரிது... 

ஆனால் தோற்றுப்போன ஒரு பெண்ணின் பின்னால் நிச்சயம் ஒரு ஆண் தலைகுனிந்தபடியே நிற்கிறான்... 

அதையே நாகமணி மற்றும் அவள் அம்மாவின் கதை ஆண்சமூகத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறது... 

நாகமணிக்கு அவள் அம்மா எழுதிய நீண்ட கடிதம் கதையின் உயிர்; படிப்பவரை நெகிழச் செய்யும் உரை அது... 

www.freetamilebooks.com எனும் இத்தளத்திலிருந்து இப்புத்தகத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் வாய்ப்பு கிடைத்தாலல்ல வாய்ப்பை உருவாக்கிப் படியுங்கள்... 

நிச்சயமாகச் சொல்லலாம் நாகமணி மற்றும் அவள் அம்மா வாழ்க்கை... 

சிலரது நெஞ்சைத் தொடும் 
சிலரது நெஞ்சைச் சுடும்... 

ஒரு எழுத்தாளனால் மட்டுமே தான் கண்டது, தான் ரசித்தது, தன் கற்பனை, தன்னைக் கவர்ந்தது என எதையோ ஒன்றை அடுத்தவருக்குப் பயன்படும்படியாக அடுத்தவர்கள் தன்னை மறந்து, தன் கவலை மறந்து, அதை ரசிக்கும் படியாக, அதை உணரும்படியாக, அதிலிருந்து தன் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினையை எடுத்துக்கொள்ளும் படியாகச் செய்ய வைக்க முடியும். அப்படிப்பட்ட ஆச்சரியமூட்டும் எழுத்தாளராக உங்களுக்கென் சிரம்தாழ்ந்த நன்றிகள்... 

ஒவ்வொரு புத்தகமும் படித்து முடிக்கும் தருணம் நெஞ்சு இனிக்க வைக்கும் அல்லது நெஞ்சு கனக்க வைக்கும். இப்புத்தகமோ வேகமாக வாகனத்தில் சாலையில் செல்கையில் கோரவிபத்தொன்றை கண்டு கை கால் நடுங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடர்வோமே அப்படியொரு அனுபவத்தை ஒத்து இருந்தது நாகமணியின் கதையைத் தொடர்ந்து அடுத்தப் பகுதியாக "போதிமரத்தை" படிக்கத் துவங்குகையில்... 

ஒரு கதையோ, கட்டுரையோ, கற்பனையே என எதுவாக இருந்தாலும் அங்கே அதைச் சொல்லும் எழுத்தாளன் மறைந்து அக்கதாப்பாத்திரங்களோ, அக்காட்சிகளோ அல்லது சொல்லும் விசயமோ மனதை ஆக்கிரமித்துக் கொள்ளுமாயின் அங்கே அந்த எழுத்தாளன் ஜெயிக்கிறான். ஜோதிஜி சாரும் ஜெயித்துகொண்டே இருக்கிறார் ஒவ்வொரு முறையும்... 

"போதிமரம்" இந்தத் தலைப்பே எத்தனை வலிது. புத்தனுக்கு ஞானம் கிடைத்தது போலத் தனக்கு ஞானமும் தன் தேவதைகளான தேவியரிடமிருந்தே கிடைக்கிறது என்பதைச் சொல்லும் தலையாயத் தலைப்பு... 

தன் இயல்பு மாறாத எளியக் குடும்ப வாழ்க்கையில் தன்னுடைய மூன்று தேவதைகளான தேவியரிடையே தான் படும் பாட்டையும் அவர்களிடமிருந்து கிடைக்கும் அள்ள அள்ளக் குறையா அன்பையும் எளிய மொழியில் அழகு நடையில் சொல்கிறார். தலைமுறை இடைவெளியைச் சொல்ல தன் அப்பாவுடன் தனது நினைவலைகளையும் தனது மகள்களுடன் தனது சுகமான அனுபவத்தை நம்மிடம் சுவையாகப் பகிர்ந்து கொள்கிறார்... 

வாசகர்கள் சிலர் இவரைப் பார்த்துப் பொறாமைப் படக்கூடும்; சிலர் எப்படிக் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதைப் படிக்கக் கூடும். தன் எழுத்தினூடே தன் அனுபவத்தில் கிடைத்ததைத் தன் வாசகனுக்குச் சொல்வது தானே எழுத்தாளனின் கடமை. ஒரு எழுத்தாளனாய் தன் பணியைத் திறம்படச் செய்திருக்கிறார் ஜோதிஜி திருப்பூர்... 

சில புத்தகங்களைப் படிக்கையில் மட்டும் இதை எழுதினவரை ஒருமுறையேனும் பார்த்துவிடும் ஆசைவருவதுண்டு இந்தப் போதிமர தொடரைப் படித்து முடிக்கையில் இக்கதையில் நமை கொள்ளை கொள்ளும் அப்பாவுக்குப் பாடம் சொல்லும் தேவியர்களையும் பார்த்துவிடும் ஆசை வந்ததை மறுப்பதற்கில்லை... 

"என்னைப் பற்றி" என்ற தலைப்பின் கீழ் தனது சொந்த குடும்ப வரலாற்றுத் தேடலை மிக அழகாகத் தனக்கே உரிய பாணியில் சுவைப்படச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இதைப் படித்தவர் மனதில் தங்களது குடும்ப வரலாற்றையும் தேடும் எண்ணம் துளிர்விடும் என்பதில் ஐயமில்லை. நிச்சயம் இப்புத்தகத்தைப் படித்த பலர் தேடியிருக்கக்கூடும்... 

கையிலெடுத்த புத்தகத்தை ஒற்றை மூச்சில் படித்து முடிக்க வைப்பது தானே ஒரு எழுத்தாளனின் வெற்றி. ஒரு எழுத்தாளராய் வாசகனான எனை நீங்கள் வென்றிருக்கிறீர்கள். எப்போதும் உங்களுக்கெனப் பிரியமும் நன்றியும்... 

இப்புத்தகம் என் கைக்குவர காரணமான ebook மின்னூல் குழுமத்திற்குமென் சிரம் தாழ்ந்த நன்றிகள். கடல் கடந்த தேசத்தில் இருந்துகொண்டும் சிறந்த இப்படிப்பட்ட படைப்பை படித்து ரசிக்க முடிகிறதென்றால் அதற்கு உங்கள் தன்னலமற்ற சேவையே காரணம். நீங்கள் சத்தமின்றித் தமிழுக்குச் சிறந்தவொரு தொண்டு செய்து கொண்டிருக்கிறீர்கள். தலைமுறை தாண்டியும் உங்கள் உழைப்பு நிலைத்து நிற்கும். பிரதிபலன் பாரா உங்கள் உழைப்பு அப்போதும் பேசப்படும். 

நீங்கள் சேர்த்து வைப்பது வெறும் புத்தகங்களையல்ல, உங்கள் சந்ததிகளுக்குப் புண்ணியத்தையும் தான்... 

புத்தக ஆசிரியரான ஜோதிஜி சாருக்கும், இக்குழுமத்திற்கும் என் நன்றியும் வணக்கமும்... 

நேரம் இருப்பவர்கள் படியுங்கள் சிறந்தவொரு படைப்பை ரசித்ததாய் நீங்களும் உணர்வீர்கள்... 

அன்புடன், 

H. ஜோஸ்... 

Tuesday, January 09, 2018

ஆன்மீக அரசியல்ஆன்மீக அரசியல் என்றால் என்ன?

தீபம் காட்டும் அய்யருக்கு நூறு ரூபாய் போட்டு விட்டு கோவிலை விட்டு வெளியே வரும் போது அங்கே கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து நாடு முழுக்க சோம்பேறிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று நாட்டைப் பற்றி கவலைப்படுவது.

+++++++++

திருப்பூரில் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு சாயப்பட்டறைகள், சலவைப்பட்டறைகள் முழு வீச்சாக 700 க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கிக் கொண்டிருந்த போது திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள். கட்டுமஸ்தான தேகம் உள்ள அவர்கள் சாயப்பட்டறைகளில் பணிபுரிந்தனர். ஒடுக்கப்பட்ட, சொந்த ஊரில் வாழ வழியில்லாதவர்களின் வருமானத்திற்குத் திருப்பூர் உதவுவதாக இருந்தது. 

திருப்பூர் எல்லைப் புறத்தில் உள்ள சிறிய திரையரங்கங்களில் நிச்சயம் விஜயகாந்த் படம் தான் ஓடிக் கொண்டிருக்கும். எம்.ஜி.ஆரின் பழைய படங்களுக்கு எப்போதும் எந்த அளவுக்குக் கூட்டம் சேருமோ அதைப் போலவே விஜயகாந்த் படங்களுக்கும் மதிப்பு இருந்தது. 

இன்று வரையிலும் தொலைக்காட்சியில் விஜயகாந்த் படங்களைப் பார்க்கும் போது அவர் பேசும் நீண்ட வசனங்களையும், அவர் படிப்படியாகத் தன்னை மாற்றிக் கொண்டே வந்த வித்தைகளையும் ஆச்சரியமாகக் கவனிப்பதுண்டு. பதிவில் விஜயகாந்த் அதிர்ஷ்டக்காரர் என்று எழுதினேன். எவரும் யோசிக்க முடியாத அளவிற்குப் பா.ம.க கோட்டைக்குள் புகுந்து பிடரியை உலுக்கியது முதல் ஆச்சரியம். பத்துச் சதவிகிதம் ஓட்டு என்பது பழம் தின்று கொட்டை போட்டவர்களைப் பயப்பட வைத்தது. கடைசியில் என்ன ஆனது? 

"என் கணவன் கள்வன் அல்ல" என்று நீதி கேட்ட பெண்மணி அந்தக்காலம். "முதலமைச்சரின் மனைவி என்று என்னைச் சொல்ல வேண்டும்" என்று அண்ணியார் போராடியது, போராடிக்கொண்டிருப்பது இந்தக் கால அரசியல் அவலமாக முடிந்தது. அவரும் காரணம். அவரைச் சுற்றியுள்ளவர்கள் முக்கியக் காரணம். அதைவிட அவரின் பழக்கவழக்கங்கள் முக்கியக் காரணம். ஒருவர் வளரும் போது சிலவற்றை விட வேண்டும். சிலவற்றை ஒதுக்க வேண்டும். பலவற்றைப் பொறுத்துக் கொள்ளப் பக்குவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

அவருக்கும் உயிர் பிழைத்திருக்கச் சிங்கப்பூர் தான் உதவிக் கொண்டிருக்கின்றது. இப்போது ஆன்மீக அரசியல் பேசுபவரை இப்படிப் பேச வைக்கக் காரணமாக இருந்ததும் சிங்கப்பூர் மருத்துவர்கள் தான். ஒன்றிரண்டு பழுதானால் ஆரோக்கியக் குறைபாடு. உடம்பு முழுக்க ஓவர் ஆயில் சர்வீஸ் செய்வது என்பது அதுவரையிலும் கற்ற வித்தைகள், காட்டிய வித்தைகளும் தந்த அன்புப்பரிசு. 

பணம் வரும் போது அது மனிதர்களின் ஆரோக்கியத்தை விலை பேசும். கூடவே பதவி வந்த பின்பு தனி மனித ஆரோக்கியம் பொதுச் சொத்தாக மாறிவிடும். சுதாரித்துக் கொண்டவர்களும், பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்களும், எதார்த்தத்தை உணர்ந்து கொண்டவர்களுக்கும் உண்டான உலகம் அரசியல் உலகம். 

கள அரசியல் என்பது வேறு. அதன் மூலம் அடையப் போகும் பதவிகள் மூலம் செய்ய வேண்டிய நிர்வாக அரசியல் வேறு. மாநில அரசியல் வேறு. அதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டிய இந்திய அரசியல் வேறு. இத்துடன் ஒவ்வொரு நிமிடமும் இப்போது வந்து சேரும் உலக அரசியல் என்பதனை புரிந்து கொள்ள நிறையவே பக்குவம் தேவை. அதிக அளவு நிதானம், சமயோசித தந்திரங்கள் தேவை? 

கலைஞரை வெறுக்க ஆயிரம் காரணங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடும். ஆனால் "தன்னைத் தக்க வைத்துக் கொள்ள" என்ற கலையை அவரிடமிருந்து தமிழக அரசியலில் இருந்து வேறு எவரும் அவரைப் போலக் கற்றுத் தந்துவிட முடியாது. அதனால் தான் செயல்படாமல் இருந்தாலும் கோவில் போலக் கோபாலபுரம் செல்கின்றார்கள். 

ரஜினியும் விதிவிலக்கல்ல. 

ஏ1 குற்றவாளியைத் திறமைசாலி, தைரியசாலி என்று ஊடகங்கள் தான் முன்னிறுத்தியது. இன்னமும் அந்தப் பிம்பம் உடைந்துவிடக் கூடாது என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவும் செய்கின்றது. அதே போல ரஜினிக்கு சிறந்த ஆன்மீக வாதி என்று பட்டம் மூலம் பறக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றது. 

ஆன்மீகம் என்பது மக்களுக்கானது என்றால் அது கோவில், சாமி, அவரவர் மனதோடு முடிந்து விடும். அதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்காது. இருக்கவும் முடியாது. ஆனால் இப்போது மற்ற மதங்களில் இருந்து இந்து மதம் வரைக்கும் மதக் காப்பாளர்கள் கையில் அரசியல் சிக்கத் தொடங்கிய போதே எதைத் தொட்டால் சலசலப்பு அதிகமாகும் என்பதனை கருத்தில் கொண்டே ரஜினிக்குப் பின்னால் உள்ளவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் ரஜினி காலடி எடுத்து வைத்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

உணர்ச்சி வசப்படுபவர்கள், மற்றவர்கள் எழுதிக் கொடுத்த வசனங்களை வாசித்து, சொல்லிப் பழகியவர்களுக்கு எந்தப் பதவி எந்தக் காலத்தில் கிடைத்தாலும் அவர்களால் சிறந்த நிர்வாகியாக ஆக முடியாது என்பதனை கடந்த காலத் தமிழக அரசியல் உணர்த்தியுள்ளது. அப்படியே பதவி வந்தாலும் களத்தில் இறங்கி தன்னை மாற்றிக் கொண்டு, எதார்த்தம் புரிந்து, தன்னை மெருகேற்றிக் கொண்டவர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உள்ளனர். 

சுகவாசி வாழ்க்கைக்கு அடிமையானவர்கள் கள எதார்த்த அரசியலுக்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதனையும் தமிழக அரசியலில் துண்டைக் காணோம். துணியைக் காணோம் என்று ஓடிய மற்ற நடிகர்கள் பல முன் உதாரணங்களை நமக்குக் காட்டியுள்ளனர். காரணக் காரியங்கள் அடிப்படையில் மற்றொரு அடிமையாக வேண்டுமானால் சொன்னதைச் செய்யும் கூலியாகச் செயல்பட முடியும். 

பாவம் ஆன்மீகம். 

உங்கள் ஆசைக்குப் பல கோடி மக்களின் நம்பிக்கைகளை அரசியல் மூல தனம் ஆக்காதீர்கள் ரஜினி. குடியையும், புகைப்பதையும் தமிழக இளைஞர்களுக்குக் கற்றுத் தந்தவர் நீங்கள். அரசியல்வாதிகள் கைவிட்ட அவர்களை இப்போது அவரவர் எளிய நம்பிக்கைகள் தான் அவர்களை வாழ்வதற்கான காரணங்களைப் புரிய வைத்து இயக்கிக் கொண்டிருக்கின்றது. ஆதனால் தான் இன்னமும் இந்தியா துண்டு துண்டாக உடையாமல் இருக்கின்றது. 

உங்கள் ஆன்மீக அறிவை உங்கள் வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்குப் புரியவைத்து அவர்களை முதலில் நல்வழிப்படுத்துவதில் இருந்து தொடங்கலாமே? உங்கள் மனைவிக்கு அரசாங்க சொத்துக்கு ஆசைப்படாத ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுக்கலாம். வாடகை கொடுத்தால் தான் அடுத்தவர் சொத்தை அனுபவிக்க முடியும் என்ற அடிப்படை அறிவை கற்றுக் கொடுக்கலாம். அப்பாவின் புகழையாவது கவனத்தில் எடுத்துக் கொண்டு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனமாக இருங்கள்? என்ற அறிவுரைகளை இரண்டு மகள்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். 

ஆன்மீகம் என்பது அரசியல் அல்ல. அது ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்கம். 

அவரவர் மதம், அவரவர் நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு உண்டானது. 

வெளிச்சத்தில் இருந்து பழகியே வந்த உங்களுக்கு அந்தரங்க அறைகளில் வெளிச்சம் பாய்ச்சுவது தவறென்பதைக் காலம் புரிய வைக்கும். 

04/01/2018  ( முகநூல் குறிப்புகள் )

Sunday, January 07, 2018

ஆசிரியர் சம்பளம்? காவல்துறை சம்பளம்? சில குறிப்புகள்


ஒரு பக்கம் அவல முகம். 

சென்ற வாரத்தில் ஒரு நாள் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சந்தின் வழியாக வண்டியில் வந்து கொண்டிருந்தேன். திரும்ப வேண்டிய சந்தின் ஓரத்தில் பலரும் நின்று கொண்டிருந்தனர். உள்ளடங்கிய பகுதியில் ஒரு காவல் துறை வாகனமும் சில காவலர்களும் நின்று கொண்டு எப்போதும் போலச் சோதித்து அவர்கள் வருமானத்தைச் சாதித்துக் கொண்டிருந்தனர். என்னை நிறுத்து என்று அழைக்கவில்லை. ஒரு மணி நேரம் அந்த இடத்தில் நின்று இருந்தாலும் அங்கிருந்த நபர்களில் ஒருவருக்கு 300 ரூபாய் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும் முப்பது நபர்களின் மூலம் அவர்கள் பெற்ற தொகை பத்தாயிரம் ரூபாய்க்கு அருகே வந்திருக்கும். 

மறு பக்கம் ஆச்சரிய முகம். 

திருப்பூரில் கடந்த ஆறேழு மாதங்களாகச் சாலை பராமரிப்புக் கேவலமாக உள்ளது. தினந்தோறும் அலைய வேண்டிய வேலையில் உள்ளவர்களின் முதுகு நிச்சயம் பெயர்ந்து விடும். தினமும் எதையும் உள்ளே ஊற்றிக் கொண்டோ அல்லது வலிக்குத் தடவிக்கொண்டோ தான் தூங்க முடியும். கவுன்சிலர் இருந்தால் கூட மக்கள் பேச முடியும். இப்போது அதற்கு வாய்ப்பும் இல்லை. ஆனால் இந்தக் கொடுமையில் பல இடங்களில் உருவாகும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் பல காவல் துறையைச் சேர்ந்த நண்பர்களைக் கவனித்துக் கொண்டே வருகின்றேன். நான்கு புறமும் காட்டாறு அருவி போல வந்து பாயத் தயாராக இருக்கும் பொது மக்களின் வேகத்தைக் குறைத்து, நிறுத்தி, சீர் செய்யும் தொடர்ச்சியான அவர்களின் பணியும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மனதிற்குள் போட்டுப் பார்த்தேன். 

கலைஞர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கூட ஆசிரியரும் இன்று கோடீஸ்வராக இருக்கின்றார்கள். ஆனால் ஆசிரியர்களை விடப் போக்குவரத்துக் காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் அதே அளவுக்குச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். நாள் தோறும் மொத்த புகையையும் சுவாசித்து, படிப்படியாக ஆரோக்கியம் இழந்து, வேலை செய்யும் முழுமையான நேரத்தில் ஒரு துளி கூட நகர வாய்ப்பில்லாத வாழ்க்கை அது. 

+++++++++++++

ஒரு துறையைப் பற்றி எழுதும் போது அதனைப் பற்றி விமர்சனப் பார்வையில் தான் அணுக முடியும். நம் குடும்பத்தில், உறவினர்களில், நண்பர்கள் வட்டத்திலும் அதே துறையில் பணியாற்றக்கூடும். அவர்களின் தனிப்பட்ட சங்கடம் என்னை வருத்தமடையச் செய்தாலும் நான் பார்க்கும் சமூகத்தை என் பார்வையில் என் மொழியில் எழுதிவிடவே விரும்புகிறேன். 

விதிவிலக்குகள் இருக்கலாம். 

ஏன் ஆசிரியர்கள் மேல் கோபம்? இது நேற்று என்னை நோக்கி வந்த கேள்வி? 

எங்கள் குடும்பத்தில் ஒருவர் ஆசிரியராக நுழைந்து தலைமையாசிரியராக இந்த மாதம் முடிவில் பணி ஓய்வு பெறப் போகின்றார். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அவர் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உள்ளடங்கிய கிராமத்தில் இருந்தது. பள்ளிக்கூட, கல்லூரி விடுமுறையில் அவர் பணியாற்றிய பள்ளிக்குச் சென்றுள்ளேன். 

தமிழ்நாட்டில் மூன்று இடங்களுக்கு மாறி இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பணியாற்றி அவர் தலைமையாசிரியராக ஆசிரியர் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சகோதரி என்று நிலையைத் தாண்டி தற்போதைய கல்விச்சூழல், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று பலவற்றைப் பேசுவோம். 

அவர் இறுதியில் முடிக்கும் ஒரே விசயம் ஆசிரியர்களுக்கு "இவ்வளவு சம்பளம் தேவை இல்லை" என்பார். 

என்னுடன் இளங்கலை படித்த நண்பர் முதுகலை முடித்து அவனும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ப்ளஸ் டூ ஆசிரியராக உள்ளே நுழைந்து இப்போது திருச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் தான் பணியாற்றி வருகின்றார். அவர் முதுகலை, கல்வியியல் பட்டங்கள் பெற்று வேலை கிடைக்காமல் முதலில் திருப்பூர் வந்து தான் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த வேலையில் தான் இருந்தார். அவர் ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் முதலில் தனக்குக் கிடைத்த சம்பளத்தைப் பார்த்து திருப்பூர் மீண்டும் வந்து விடலாமா? என்று யோசித்தவர் தான். இப்போதும் வாரம் தோறும் உரையாடிக் கொண்டு தான் இருக்கின்றார். அவர் சென்ற வாரம் சொன்னது "நான் வாங்கும் சம்பளத்திற்கும் என் வேலைக்கும் தொடர்பே இல்லை. உண்மையிலேயே ஆசிரியர்கள் சம்பளம் மிக மிக அதிகம்". 

காரணம் அவருக்குத் தெரியும் திருப்பூரில் பத்தாயிரம் சம்பளத்திற்கு ஒருவர் எந்த அளவுக்குக் கடின உழைப்பு செலுத்த வேண்டும் என்பதனை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். 

மற்றொரு உறவினர் மத்திய அரசில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். அவர் மனைவியும் மேல் நிலைக்கல்வி ஆசிரியராக இருக்கின்றார். தினமும் நாற்பது கிலோமீட்டர் பயணித்துப் பள்ளிக்குச் செல்கின்றார். அவர் இயல்பிலேயே சுகவாசி. பணி குறித்துப் பேசும் போதெல்லாம் டார்ச்சர் அதிகம் என்கிறார். 

வாசிப்பு முதல் கண்டதும் கேட்டதும் பழகியதை வைத்துப் பார்க்கும் போது ஆசிரியர்கள் குறித்த தற்போது என் சிந்தனையில் இருப்பவை. 

1. இராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்தவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளால் இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளியில் புத்துணர்ச்சி பெற்றது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைத்தது என்று கூறிவிட முடியாது. 

2. குறிப்பிட்ட வகுப்பு வரைக்கும் ஆல் பாஸ் என்ற அரசின் கொள்கை மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கவில்லை.. அரசு மூலம் வழங்கப்படும் இலவச பொருட்கள் மாணவர்களை அரசுப் பள்ளிகள் பக்கம் இழுத்துக் கொண்டு வரவில்லை. வராக்கடன் தொகையை அரசு வெளியிடாவிட்டாலும் நாங்களே வெளியிடுவோம். முதலில் வங்கிகளைச் சீரமைக்க வராக்கடன்களை வசூலிக்க வேண்டும். என்று வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு போராடிப் பார்த்துள்ளேன். இதுவரையில் ஆசிரியர்கள் போராடிய எந்தப் போராட்டத்திலும் மாணவர்கள் நலன் சார்ந்தோ, மாறாமல் இருக்கும் பாடத்திட்டங்கள் குறித்து அக்கறைப்பட்டுப் போராட்டம் நடத்திப் பார்த்ததாக நினைவில்லை. 

3. மாணவர்களைத் திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது என்ற கட்டளை ஆசிரியர் மாணவர்கள் உறவில் பெரிய விரிசலை உருவாக்கியுள்ளது. மாணவப் பருவத்தைத் திசைமாற்றியுள்ளது. ஆசிரியர்களின் அக்கறையின்மையை அதிகப்படுத்தியுள்ளது. 

4. ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் பிற வேலைகள் கூடுதல் பணிச்சுமை என்றால் அதனை விட இன்னமும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நடைமுறைகளைக் கட்டி அழுது கொண்டிருப்பது கல்வித்துறையை முன்னால் நகர முடியாத அளவுக்கு உள்ளது. கல்வித்துறையில் உள்ள ஊழல் குறித்து எவரும் அக்கறைப்பட்டுக் கொள்வதில்லை. இது அரசியல்வாதிகளை மட்டும் சார்ந்தது மட்டுமல்ல. ஆசிரியர் எடுக்கும் கடன் தொகை பெறக்கூட அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட சதவிகிதம் லஞ்சம் கொடுத்த பின்பே அந்தத் தொகையைப் பெற முடியும். கீழ்நிலை வரைக்கும் நாற்றமடிக்கின்றது. 

5. இப்போது ஆசிரியர் மாணவர் உறவென்பது பாசத்துடன் அணுகுவது அல்ல. பயத்துடன் அவரவரை பாதுகாத்துக் கொள்வது போலவே உள்ளது. 

6. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஒரே ஆசிரியர் கணிதம், அறிவியல் பாடங்களுக்குப் பாடம் எடுத்து பாதிக்கு மேற்பட்டவர்களை நூற்றுக்கு நூறு எடுக்க வைத்துள்ளார். பல இடங்களில் மாணவர்கள் குறைவாக இருந்தும் அளவுக்கு மீறி ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். அதிக மாணவர்கள் இருக்கும் இடங்களில் அரசு, ஆசிரியர்களை நியமிக்காமல் காரணங்களைச் சொல்லி தட்டிக்கழிக்கின்றது. 

7. சம்பளத்தைத்தாண்டி அர்ப்பணிப்பு உணர்வு என்பது ஆசிரியர் பணியில் தலையாயக் கொள்கை. காரணங்கள் எத்தனை இருந்தாலும் எதிர்காலச் சமூகத்தை உருவாக்குபவர்கள் ஒவ்வொரு ஆசிரியருமே. ஆனால் உங்களுடன் பணியாற்றுபவர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் என்று அவர்களின் தரத்தை பட்டியலிட்டுப் பாருங்கள்? 

தான் வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாக என் உழைப்பைக் காட்டியுள்ளேன். ஒரு மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால் கூட என் மனம் வருந்தும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பணியாற்றும் பள்ளியில் தான் என் மகன், மகளையும் படிக்க வைக்கின்றேன். எவரையும் தனியார் பள்ளியில் படிக்க வைப்பதில்லை? போன்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். 

உங்கள் மனசாட்சி உண்மையைப் பேசும்?

07/01/2018  (முகநூலில் எழுதிய குறிப்புகள்)