Thursday, September 14, 2017

எழுந்து நிற்கலாம் வா?


மேலைநாடுகளில் கல்விக்கூடங்கள் என்பது சிறைக்கூடங்கள் அல்ல. அதுவொரு களம். பயன்படுத்திக் கொள்பவர்களின் திறமையைப் பொறுத்து வளர்ச்சியும் உண்டு. வீழ்ச்சியும் உண்டு. அரசியல் கலக்காத உலகமிது. எந்தக் காலத்திலும் அரசியல் உள்ளே நுழைய முடியாதபடி ஒழுங்குபடுத்தி வைத்துள்ளார்கள். மாறிக் கொண்டேயிருக்கும் உலகை உள்வாங்கிக் கொண்டே மாறிக் கொண்டே வருவதால் மாணவர்களின் தகுதியும் திறமையும் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிட முடியாத உயரத்தில் எப்போதும் உள்ளது. 

அங்கே தனி மனித வாழ்க்கை வசதிகள் என்பது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் பிரதிபலிக்குமே தவிர அது பள்ளி, கல்லூரிக்குள் வந்து நிற்காது. சிறகுகளைக் கத்தரிக்காமல் வானத்தை எட்டிப்பிடிக்க ஆதரிக்கும் உலகமது. மேலைநாட்டுக் கல்விமுறைகளில் மாணவர்களுக்கு விளையாட்டு என்பது கூடுதல் தகுதி. விளையாட்டு மட்டுமல்ல. தனிப்பட்ட திறமைகளைக் கண்டறியும் கூட்டமும் உண்டு. அதனை வியாபாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்வமும் கலந்த கல்வியது. ஆர்வமும் ஆரோக்கியமும் ஒன்றே கலந்து இருப்பதால் மன ரீதியான எழுச்சியும் இயல்பான ஒன்றாக உள்ளது. 

கடவுள் உண்டு இல்லை என்ற கூட்டமும் உண்டு. ஆனால் அறிவியல் அதனை விட நமக்கு முக்கியம் என்ற நம்பிக்கை இருப்பதால் ஒன்று மற்றதுடன் உரசுவதில்லை. 

ஆனால் இங்கே? 

ஒட்டி வைத்த மரத்தில் ஒடிக்கப்பட்ட கிளை போல அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பிட்ட எல்லைக்குள் வளர்க்கப்படும் ஒருவித சோதனைச்சாலை. ஆன்மீகத்தை அறிவியலுடன் கலப்பார்கள். அறிவியலுக்கும் ஆதாரம் தேவையில்லை என்று வாதிடுவார்கள். வரலாறு என்பது சில சமயம் திணிக்கப்பட்டதாக இருக்கும். பல சமயம் நம்ப முடியாததாக இருக்கும். மொத்தத்தில் மாற்றுச் சிந்தனைகள் வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் உருவாக்கப்படும் பாடத்திட்டம் என்பது பல் இல்லாத கிழவனுக்கு வழங்கப்படும் பக்கோடா போலவே இருக்கும். 

படிப்பவனுக்குப் புரியாது. புரிந்தவனுக்கும் குழப்பமே மிஞ்சும். வளர்த்து விடக்கூடாது என்பவர்களுக்கும் இவர்கள் வளர்த்து விடக்கூடாது என்பவர்களுக்கும் இடையே தான் நம் மாணவர்கள் போராடிப் பெற்ற அறிவுடன் தான் இன்று உலகமெங்கும் சென்று வெல்கின்றார்கள். 

இந்தச் சூழ்நிலையில் மாணவர்களின் தனித்திறமையை எங்கே போய்க் காட்டுவது? அதுவும் இங்குள்ள அரசியலில் எல்லாமே விற்பனைக்கு என்ற சூழ்நிலையில் தான் பல மாணவர்கள் கருகிப் போகின்றார்கள். 

இந்திய விளையாட்டுத்துறை என்பது காசு பார்க்கும் கூட்டத்தால் ஆளப்படுவது. குறிப்பிட்ட வட்டம், குறிப்பிட்ட நபர்கள் என்ற எல்லையை உடைக்க முடியாத கூட்டத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் தனி ராஜ்ஜியம் அது. எந்த விளையாட்டின் மூலம் வருமானம் அதிகமாகக் கிடைக்குமோ? அதுவே தேசிய விளையாட்டாகப் பார்க்கப்படுகின்றது. இன்று வரையிலும் ஊதிப் பெருக்கப்பட்ட கிரிக்கெட் முன்பு வேறெந்த விளையாட்டும் பேசப்படுகின்றதா? 

மகளிடம் ஒவ்வொருமுறையும் இங்குள்ள விளையாட்டிற்குப் பின்னால் உள்ள அரசியல் தகிடுதத்தங்களைப் பற்றிச் சொல்வதுண்டு. ஆனாலும் அவர் ஆர்வத்தை மட்டுப்படுத்துவதில்லை. 

மகள் "நான் நாளை இங்கே விளையாடச் செல்லப்போகின்றோம்?" என்று முதல் நாள் சொல்லிவிட்டுச் செல்லும் போது என் மனதில் பல கேள்விகள் வந்து எழும். ஆனால் இந்தச் சமயத்தில் அவரின் விருப்பத்திற்கு ஏன் தடை சொல்ல வேண்டும் என்று அனுமதி கொடுப்பதுண்டு. ஒருவரின் வாழ்க்கையில் கல்லூரிப் பருவத்தை விடப் பள்ளிப் பருவம் தான் முக்கியமானது. நினைவுகளால் வாழ்ந்து பார்க்கக்கூடிய அத்தனை விசயங்களும் பள்ளிப்பருவத்தில் தான் கிடைக்கும். கல்லூரிப் பருவம் என்பது அடிப்படைக் கடமைகளும் சேர்ந்தே இருப்பதால் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. 

பள்ளிப்பருவத்தில் எனக்கான ஆர்வம் புத்தகங்களில் மட்டும் இருந்தது. ஆனால் இவர்களின் ஆர்வம் எல்லாவற்றிலும் கலவையாக உள்ளது. இதன் காரணமாகப் பெற்றோர்களுக்குத் தான் கூடுதல் சுமையாக உள்ளது. நடுத்தரவர்க்க பெற்றோர்கள் சம்பாரிக்கும் பணமென்பது உணவு, உடைகள், தங்குமிட வசதிகளை விடத் தற்போது குழந்தைகளில் கல்விக்குத்தான் பெரும்பங்கு செலவளிக்க வேண்டியதாக உள்ளது. இதற்கு மேல் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்கின்றோம் என்ற பெயரில் ஒவ்வொரு நடுத்தரவர்க்க பெற்றோர்களும் பெரிய வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 

குழந்தைக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? என்பதனை விடக் கற்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் செலவளிக்கும் தொகை கணக்கில் அடங்கா? 
ஒரு பக்கம் பள்ளிக்கூடங்கள் காட்டும் ஆசை வார்த்தைகள். மறுபக்கம் பெற்றோர்களின் தனக்கான "கௌரவம்" என்ற பெயரில் காசைக் கரியாக்கும் தான் தோன்றித்தனம். இவை எல்லாமே மற்ற மாணவர்களை, பெற்றோர்களைப் பல விதங்களில் பாதிப்பு உண்டாக்கவே செய்கின்றது. 

இப்போதைய சூழ்நிலையில் தனியார் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல. தனிப்பட்ட நபர்கள் வரைக்கும் எதையெல்லாம் காசாக்க முடியும் என்ற கலையில் வல்லவர்களாகவே இருக்கின்றார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள். மாதம் எட்டு வகுப்புகள். கணக்குப்பாடம் மட்டும். ஆனால் தொகையோ 5000 ரூபாய். இதே போல ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக என்று பெரிய வன்முறையே நடந்து கொண்டிருக்கின்றது. 

எல்லாவற்றிலும், எப்போதும் காசு பார்க்க மட்டுமே என்கிற சூழ்நிலையில் தான் இங்கே மாணவர்களின் தனித்தகுதிகள் என்பது செல்லாக்காசாக மாறிவிடுகின்றது. 

மகள் படிக்கும் பள்ளியில் நடக்கும் ஒவ்வொன்றையும் அமைதியாக உள்வாங்கிக் கொள்வதுண்டு. பள்ளிக்குப் பெருமை வேண்டும். விளையாட்டு ஆசிரியருக்குத் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும். ஆனால் பள்ளி செய்ய வேண்டிய கடமைகளோ, அதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளோ பெற்றோர்கள் எதிர்பார்க்கக் கூடாது. 

நாம் அழைத்துச் செல்ல வேண்டும். நாமே அழைத்து வர வேண்டும். செல்லும் இடங்கள் தூரமாக இருந்தால் அதற்கெனத் தனிக்கட்டணம். ஒவ்வொரு நிலையிலும் இங்கே காசு தான் பேசுகின்றது. காசு தான் தீர்மானிக்கின்றது. அதிகமாக யோசித்தால் இந்த வாழ்க்கை அலுத்துவிடும். ஊழல் மட்டுமே நீக்கமற நிறைந்திருப்பதால் எதார்த்தம் புரிந்து எந்தப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பலிகிடாவாக்க முயற்சிப்பதே இல்லை. 

'முடிந்தவரைப் படி. முயற்சி எடுத்துப் படி. ஏதோவொரு ஏணியைப் பிடித்துக் கொள். எப்படியாவது தொற்றிக் கொள். ஏதோவொரு இடத்தை அடைந்து விடு' 

இங்கே உள்ள வாழ்க்கை இதுவே தான். 

மாணவர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள், தன்னம்பிக்கை கதையைச் சொல்லி மாணவர்களைத் தளர வேண்டாம் என்று உற்சாகப்படுத்த நினைப்பவர்களுக்கும் கூட இங்குள்ள எதார்த்தம் புரிந்தாலும் ஏன் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டே வென்றவர்களின் கதையைப் பற்றி மட்டுமே விலாவாரியாகப் பேசுகின்றார்கள். எவரும் தோல்விகளைப் பற்றிப் பேசுவதில்லை. தோல்விகள் கற்றுத் தரும் பாடங்களைப் பற்றிக் கலந்துரையாடல் செய்வதில்லை. ஏன்? 

எதற்கு? எப்படி? என்ற வார்த்தைகளே இன்றைய கல்விச்சூழலில் தேவையில்லாத வார்த்தைகளாக மாறிவிட்டது. 

அவர்களுக்குப் பாடம் நடத்தத் தெரியவில்லை? என்ற கேள்வியை நாம் நினைத்துப் பார்த்து இருப்போமா? இன்றைய குழந்தைகள் இந்தக் கேள்வியை எளிதாக முன் வைக்கின்றார்கள். ஆனால் துணிந்து எதிர்த்து நின்று கேட்பதில்லை. வெட்டி வெட்டி வளர்க்கும் போன்சாய் மரங்கள் போலச் சிறிது சிறிதாக அவர்களை மாற்றி நாங்கள் சொல்வதை மட்டுமே செய் என்பதான கீழ்ப்படிதல் நிலையை மட்டுமே ஒவ்வொரு பள்ளிக்கூடமும் உருவாக்கி வைத்துள்ளது. 

எங்கள் வீட்டில் குழந்தைகளுடன் நடக்கும் விவாதங்கள் பள்ளிக்கூடம் சார்ந்த பொது நிர்வாகம் பற்றியதாகவே இருக்கும். பலரின் தகுதியை அதன் மூலம் உருவான விளைவுகளைப்பற்றியே பேசுவோம். ஒவ்வொருவருக்கும் என்ன செலவாகின்றது? என்பதனை பொது விவாதமாக மாற்றிப் பேசுவோம்? ஏன் அரசாங்கம் அரசுப்பள்ளியை வளர்ப்பதில் இருந்து பின்வாங்கியது என்பதனை புரிய வைப்பதுண்டு. காரணக் காரியங்களையும் அதன் விளைவுகளைப் பற்றி முடிந்த வரைக்கும் புரிய வைக்க முயற்சிப்பதுண்டு. 

அரசு பள்ளிக்கூடங்கள் தோல்வியானதற்கு முக்கியக் காரணங்கள் பலவுண்டு. ஆனால் எல்லாவற்றிலும் முதன்மையானது மக்களின் மாறிய பொருளாதாரச் சூழல். 

மேலைநாடுகளில் வர்க்க பேதமுண்டு. நீ வெள்ளை. நீ கருப்பு என்ற இனப்பாகுபாடு உண்டு. இந்த இரண்டுக்குள் நின்று விடும். ஆனால் இங்கே சாதி, மதம், பணக்காரன், ஏழை, கோடீஸ்வரன், அதிகாரம் பெற்றவன் என்று பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சாலைகள் உண்டு. அவரவர் அந்தந்த சாலைகளை விட்டு வெளியே பயணிக்க விரும்புவதே இல்லை. 

தனக்கான அடையாளம் என்பதனை தொடக்கத்தில் சாதி வழியே பார்த்தவர்கள் இன்று தாங்கள் வைத்துள்ள பணம் மற்றும் வசதிகள் வழியே நிரூபிக்க விரும்புகின்றார்கள்.

"என் குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விட்டார்" என்பது பழங்கதை. இன்றோ "என் குழந்தை இந்தப் பள்ளியில் படிக்கின்றார்" என்பதே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. பள்ளி என்பது கௌரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுவது என்று தொடங்கியதோ? அன்றே அரசு பள்ளிகளைத் தீண்டாத் தன்மை வெவ்வேறு வழிகளில் வெளிப்படத் தொடங்கியது. 

அதற்கு மேலும் அரசே வெளிப்படையாகச் செய்யக்கூடிய ஊழல் காரணமாக அரசுப் பள்ளிகளின் தரம் அதலபாதாளத்திற்குச் செல்லத் துவங்கியது. ஆனால் இன்னமும் அங்கங்கே மூச்சைப் பிடித்துக் கொண்டு தரத்தை மேம்படுத்தும் அரசுப் பள்ளிகளை ஆதரிக்க மனமில்லாத அதிகாரவர்க்கம் மறைமுகமாகப் பெற்றோர்களைத் தனியார் பள்ளிக்கூடங்கள் பக்கம் தள்ளுவதைத் தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் பாடத்திட்டம். கற்பிக்கும் முறைகளில் வேறுபாடுகள். இதற்கு மேலாக இந்த மொழியை நீ படித்தே ஆக வேண்டும் என்ற அரசின் ஆணவபோக்கு என்று எட்டுத் திசைகளும் சேர்ந்து மாணவர்களைச் சோர்வடையச் செய்கின்றதோ இல்லையோ பெற்றோர்களின் மன உளைச்சலை இந்த அரசும், அதிகாரவர்க்கமும் அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. 

குழந்தைகளின் பாடப்புத்தகங்களை, பாடத்திட்டங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படித்துப் பார்பபதுண்டு. மிரண்டு போயுள்ளேன். எட்டாம் வகுப்புப் பாடங்கள் நான் கல்லூரியில் படித்த பாடங்கள். எல்லாம் சரி? ஆனால் பாடங்களை நடத்தும் ஆசிரியரின் தகுதி தானே இங்கே முதன்மையாகப் பேசப்பட வேண்டும்? 

பெரிய பள்ளிக்கூடம், பிரபல பள்ளிக்கூடம் என்று எந்த இடத்தில் நம் குழந்தைகளைக் கொண்டு போய்ச் சேர்த்தாலும் அங்குள்ள நிர்வாகத்தின் தன்மையைப் பொறுத்து, பாடம் நடத்தும் ஆசிரியர் வைத்தே ஒரு மாணவரின் சிறப்பு வெளியே தெரியவரும். இவர்களின் மனோநிலையைத் தெரிந்து கொள்ள ஒரு முறை "ஏன்டா உங்கள் பள்ளியில் புதிதாகத் தொடங்கிய சிபிஎஸ்சி எப்படி இருக்கு?" என்று கேட்டேன். 

அப்போது தான் சில உண்மைகள் புரிய வந்தது. 

பெற்றோர்கள் ஆசைப்பட்டுச் சேர்ந்த குழந்தைகள் அடுத்த வருடமே பாரத்தைத் தாங்க முடியாமல் மீண்டும் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்திற்கே வந்த கொடுமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனது குழந்தைகளின் அறிவுத் திறன் என்ன? என்பதையே உணர்ந்து கொள்ள முடியாத பெற்றோர்கள் நடத்தும் வன்முறையாட்டம் இது. 

சிபிஎஸ்சி பாடத்திட்டம் என்பது கடினமல்ல. அது தொடர்ச்சியாகப் பயிற்சியில் கொண்டுவர வேண்டியது. திடீரென்று கடலில் தள்ளி உனக்கு நீச்சல் தெரிந்தால் நீந்தி வா? என்று சொன்னால் நீச்சலே தெரியாதவனின் நிலை எப்படியிருக்கும்? அப்படித்தான் இங்கே அரசு நடத்தும் பரிட்சைகளும், தேர்வுகளும் உள்ளது. 

கோவையில் பணிரெண்டாம் வகுப்புக் கட்டணம் (இரண்டு வருடத்திற்கும் தங்கும் விடுதிக் கட்டணம் உட்பட) மூன்று லட்சம் ரூபாய் என்பதனைக் கேட்கும் போதே திகைப்பாக உள்ளது. அதன் பிறகு கல்லூரி மூன்று ஆண்டுகள். அதன் பிறகே அவருக்கான துறை சார்ந்த படிப்புகள். பத்தாம் வகுப்பு முடித்து இயல்பான கலைக்கல்லூரி பட்டம் வாங்குவதற்குச் சிறப்பான பள்ளி மற்றும் கல்லூரி என்ற பெயரில் ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தபட்சம் ஆறு லட்சம் ரூபாய் செலவழித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். 

ஆனால் இதன் மூலம் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் அந்த மாணவ மாணவியருக்குக் கிடைக்கும் என்பது எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பது தான் இப்போதைய நிதர்சனம். 

பத்துலட்சம் லஞ்சம் கொடுத்து மாதம் 15000 ரூபாய் வேலைக்குச் செல்லும் ஒருவரின் வாழ்க்கைக்கும், ஒரு பட்டப்படிப்பு படிக்க ஆறு லட்சம் ரூபாய் செலவளிக்கும் ஒரு நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கைக்கும் இடையே உள்ளது தான் தமிழ்நாட்டின் உண்மையான அரசியல். 

நாம் தான் உண்மையான அரசியலைப் பேச விரும்புவதில்லை. நாம் தான் பேச வேண்டியதை விட்டு பேசக்கூடாதவற்றைத் தானே இங்கே எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கின்றோம்? 

நாம் பேச வேண்டியதைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோமா? 

(தொடர்ந்து பேசுவோம்............) 


படம் (நன்றி) Henk Oochappan






14 comments:

Amudhavan said...

கல்வி எப்படியெல்லாம் வியாபாரமாகிவிட்டது, அந்த வியாபாரத்தின் தொடர்ச்சி எப்படியெல்லாம் போகிறது என்பது பற்றித் தெளிவாகவே எழுதியிருக்கிறீர்கள்..... இன்னமும் இது எங்கே போய் நிற்கப்போகிறதோ தெரியவில்லை. அது சரி, உங்கள் பதிவுக்கான படங்களில் முடி திருத்தும் படங்களாகவே வந்துகொண்டிருக்கின்றனவே... எதையோ உணர்த்த முயலும் முயற்சியோ?

கரந்தை ஜெயக்குமார் said...

கல்வி வியாபாரமாகிவிட்டது ஐயா
பெற்றோர்களும் ஒரு மாயையிலேயே இருந்து வருகிறார்கள்

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வியாபாரம். அனைத்துத் துறையிலுமே. அது கல்வியையும் விட்டுவைக்கவில்லை. பெற்றோரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள். குழந்தைகளையும் அந்த அளவிற்கு ஆக்கிவிடுகின்றார்கள்.

ஜோதிஜி said...

எனக்கு எப்போதும் பிடித்த தீதும் நன்றும் பிறர் தர வாரா. நம் முகம் தான் நமக்கு அடையாளம். வெவ்வேறு விதமாக வெவ்வேறு இடங்களில் பிரதிபலிக்கின்றது.

ஜோதிஜி said...

மாயை அல்ல. எதிர்காலம் குறித்த பயம். குழந்தைகளை முதலீடு போல பார்க்கக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

ஜோதிஜி said...

தன் தகுதிக்கு மீறி செலவளித்தவர்கள், செலவளிப்பவர்கள் பற்றி அவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்பதனை பல முறை யோசித்துக் கொள்வதுண்டு.

Paramasivam said...

எப்போது கல்வி என்பது வியாபாரம் ஆனதோ அன்றே கல்வியின் தரம் தாழ ஆரம்பித்து விட்டது. நன்றாக விளக்கி உள்ளீர்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல ஆய்வு . கல்வி என்பது வேலை வாய்ப்புக் கானது. எவ்வளவுக்கெவ்வளவு கல்வியைப் பெறுகிறோமோ வாழ்க்கையில் அவ்வளவா வசதி வாய்ப்புகளை பெற முடியும் உடலுழைப்பை தவிர்க்க முடியும் என்ற நடுத்தர வர்க்க மனோபாவமே கல்வியை வியாபாரமாக்கத் தொடங்கியது. அதற்கான முதலீடாக தன் தகுதிக்கு மீறி செலவழிக்க முனைகிறார்கள். நாமக்கல் வகைப்பள்ளிகளில் சேர்த்துவிட்டால் எப்படியாவது மதிப்பெண் பெற வைத்து விடுவாரகள்.என்று சென்னையில் இருந்து ஒருகூட்டமே அங்கு படிக்க செல்கிறது.நீட் தேர்வு அவர்களின் கனவுகளை சிதைத்திருக்கிறது. இது அந்தப் பள்ளிகளை பாதித்துள்ளது. நீட் தேர்வின் சூட்சுமத்தை விரைவில் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் கல்வி நிலையங்களை மாற்றிக் கொள்வார்கள் வியாபாரத்தில் எந்தக் குறைவும் இராது. எத்தகைய கடினத் தேர்வாக இருந்தாலும் பயற்சிகள் மூலம் சிந்தனைத் திறனை மழுங்க அடித்து மதிப்பெண் பெற வைத்து விட முடியும். அதிகப் படியான கல்விதான் எல்லாவற்றிற்கும் தீர்வு என்பதும் ஒரு வகை மூட நம்பிக்கையே. நடுத்தர வர்க்கத்தின் இம் மன நிலை அனைத்து தரப்ப்பினரையும் பாதிக்கிறது.

ஜோதிஜி said...

அற்புதமான விமர்சனம்.நன்றி முரளி

ஜோதிஜி said...

நன்றி

எம்.ஞானசேகரன் said...

உண்மைகளைச் சொல்லும் யதார்த்மான கடடுரை.
//சிபிஎஸ்சி பாடத்திட்டம் என்பது கடினமல்ல. அது தொடர்ச்சியாகப் பயிற்சியில் கொண்டுவர வேண்டியது. திடீரென்று கடலில் தள்ளி உனக்கு நீச்சல் தெரிந்தால் நீந்தி வா? என்று சொன்னால் நீச்சலே தெரியாதவனின் நிலை எப்படியிருக்கும்?//
என் மகளை இபபடித்தான் ஒடிஷாவிற்கு இடம் பெயரும் பொரு்ட்டு மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து சி பி எஸ் சி க்கு மாற்றி அங்கே சமாளிக்கக்கூடிய நிலை வந்த போது மீண்டும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் என பல அவதிகளைச் சந்திக்க வேண்டி வந்தது.

'பரிவை' சே.குமார் said...

மிக அழகான... விரிவான... ஆழமான கட்டுரை அண்ணா.
இன்று கல்வி என்பது சேவை அல்ல.. அது ஒரு வியாபாரம்...
கோடிகளில் சம்பாதிக்க மட்டுமே செய்யப்படும் தொழிலாய் அது மாறிவிட்டது.
இனி கல்விச் சேவை என்பதெல்லாம் வரப்போவதில்லை.