Monday, December 12, 2016

அரசியல் (கோர) முகம் 2


சீரழிக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடியிருந்தால் ,நானும் ஒப்புக் கொள்வேன் இரும்பு மனுஷி என்பதை ! 

Bagawanjee KA 

நான் பிறந்த ஊரில் பள்ளிப் பருவத்தில் சாராயக்கடை என்று பெரிய எழுத்தில் போட்டிருந்த கடையைத் தாண்டி பல முறை சென்றுள்ளேன். நாற்பது வயதுக்கு மேற்பட்ட வயதுள்ள நபர்கள் டீ கிளாஸில் சின்னக் கூண்டு வழியே தண்ணீர் போன்ற வெள்ளைத் திரவத்தை வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளேன். நான் படித்த பள்ளிக்கூடத்திற்கு அருகே ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரிக்காடு உண்டு. அங்கே கள்ளத்தனமாகச் சாராயம் விற்றுக் கொண்டிருப்பதை நண்பர்களுடன் சென்று தூர நின்று வேடிக்கை பார்த்துள்ளேன். 

கெடுபிடி அதிகமாகச் சைக்கிள் டயர், மற்ற டயர்களில் கடத்தி வரும் போது கடை வீதிகளில் காவல்துறை சோதனை செய்து பிடிப்பதையும் பார்த்துள்ளேன். ஊருக்கு அருகே புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லை தொடங்கும். அங்கே ஒரு ஊர் முழுக்க ஒவ்வொரு குடும்பமும் சாராயம் காய்ச்சுவதே தொழிலாக வைத்துச் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் இரண்டு மாவட்ட காவல்துறையின் கெடுபிடிகள் என்று தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இவை எல்லாமே நான் பத்தாம் வகுப்பு படிப்பதற்குள் சாராயம் குறித்த படிமங்கள்.  

மொத்தத்தில் இருபது வயதுக்குள் 90 சதவிகித பேர்கள் சாராயம் என்பதனை அறியாமல் இருந்த காலகட்டமிது. இவையெல்லாம் 1989க்குள் முடிந்த சமாச்சாரங்கள். 

மொத்தத்தில் இன்று நாற்பது வயதைத் தாண்டிய அத்தனை பேர்களுக்கும் மதுப்பழக்கம் இருந்தாலும் அது நிரந்தரமாக இருப்பதில்லை. தினமும் குடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதில்லை. இது நான் மனதிற்குள் யூகித்துக் கொண்ட புரிதல். ஒரு வேளைத் தவறாகக்கூட இருக்கக்கூடும்.

ஒவ்வொரு முறையும் திருப்பூரில் மதுக்கடைகளைக் கடந்து வரும் போது அங்கே பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்துள்ளேன். பல சமயம் தூர நின்று அவர்களைக் கவனித்துள்ளேன். அங்கே எவருக்கும் எந்தக் குற்றவுணர்ச்சியும் இருப்பதில்லை. எவரும் எவரையும் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது போலச் சமரசம் உலாவும் இடமாக இருப்பதைப் பல முறை ஆச்சரியமாகக் கண்டுள்ளேன். 

தொழில் நகரங்களில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால், வாரச்சம்பளம் என்கிற ரீதியில் பலருக்கும் இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது என்பது கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் நான் பிறந்த ஊரில் கடந்த சில வருடங்களாகப் பார்த்த காட்சிகள் வியப்பூட்டுவையாக உள்ளது. மதுப்பழக்கம் இல்லாதவர்களே இல்லை என்கிற ரீதியில் சிறு நகரச் சமூக வாழ்க்கை மாறியுள்ளது.

இன்று வரையிலும் சாராயக்கடைகள் என்றால் கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர் மேல் குற்றம் சுமத்தி வாக்குவாதம் போல உரையாடலை வளர்த்துக் கொண்டேயிருப்பது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. ஒருவர் அறிமுகம் செய்தார். ஒருவர் வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பார்த்தார். ஆனால் அவையெல்லாம் அடிமட்டம் வரைக்கும் பரவவில்லை. 

ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் பட்டி தொட்டியெங்கும் பரவியது. 

பரவ வைக்கப்பட்டது. இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இதன் விளைவாய்..............

கோவில், பள்ளிக்கூடம், மிகச் சிறிய கிராமம் என்று ஒன்றுவிடாமல் எல்லா இடங்களிலும் தயவு தாட்சணியமின்றி டாஸ்மாக் என்ற கோர அரக்கன் தன் பாதங்களைப் பதிக்கக் குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறத் தொடங்கியது. 

அரசாங்கத்திற்குப் பற்றாக்குறை வருமே என்று பொருளாதாரம் தெரிந்தவர்கள் போலக் கேட்டால் இன்னும் அடி முட்டாள் என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டியது தான். 

சகாயம் கொடுத்துள்ள அறிக்கையின் முக்கியச் சாராம்சமே மதுக்கடைகளை மூடினால் அரசாங்கத்தின் பண வருவாய்க்குக் கனிம வளம், மணல் விற்பனை போன்ற பல விசயங்கள் உள்ளது. ஒவ்வொன்றையும் ஊழலற்று நடத்தினால் மதுக்கடைகளின் மூலம் வரக்கூடிய வருமானத்தை விடப் பல மடங்கு வந்து சேரும் என்பது தான். 

சர்வதேச அரசியல் முதல் மத்திய, மாநில அரசியல் வரைக்கும் மூன்று விசயங்கள் தான் தீர்மானம் செய்கின்றது. 

ஒன்று மது லாபி. மற்றொன்று புகையிலை லாபி. கடைசியாக ஆயுத பேரங்கள்.  இவை மூன்றும் சூழ்நிலைகள் பொறுத்து மாறிக் கொண்டேயிருக்கும்.

இதற்குப் பின்னால் மருந்துத்துறைகள் முதல் பல துறைகள் அணிவகுத்து வருகின்றது. 

இவற்றை எந்த அரசியல்வாதிகளும் கை வைக்க மாட்டார்கள். காரணம் பதவியைப் பறி கொடுக்க நேரிடும். 

ஆனால் ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு இருந்தவர்கள் நினைத்தால் இந்த லாபியை தவிடுபொடியாக்கியிருக்க முடியும். இந்த இடத்தில் தான் இவரின் பிடிவாதம் வந்து நிற்கின்றது. 

எல்லாம் எனக்குத் தெரியும்? என்ற எண்ணமே அவரைக் கடைசியில் 75 நாட்கள் முடக்க வைத்துக் காலம் கேள்வி கேட்டது? உனக்கு என்ன தெரியும் என்று? 

ஜெயலலிதா இறந்த தினம் என்று அறிவிக்கப்பட்ட கடந்த ஐந்தாம் தேதி காலையில் ஒருவர் ஃபேஸ்புக்கில் ஒருவரின் நிலைத்தகவலுக்குப் பதில் அளித்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். 

"எங்கள் வீட்டில் என் அம்மா விதவையாக உள்ளார். என் இரண்டு சித்திகளும் விதவையாக உள்ளார்கள். என் தம்பி குடிநோயாளியாக மாறிவிட்டான். இவரின் சாவுச் செய்தியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். ஏராளமான குடும்பங்களின் தாலி பறிபோகக் காரணமாக இருந்தவர்" என்கிற ரீதியில் பலவற்றையும் எழுதியிருந்தார். வாசிக்கும் போது கோபம், ஆத்திரம், ஆதங்கம் என்று கலவையாக வந்தது. கூடக் கவலையும் இருந்தது. 

ஒரு அமைச்சர் சொன்ன வார்த்தைகள் இன்னமும் கோபத்தை வரவழைக்கக்கூடியது. "நாங்கள் கைப்பிடித்துக் கொண்டு போய் விட்டுக் குடி என்றா சொல்கின்றோம்?" என்று பேட்டியில் சொல்லியிருந்தார். 

எதிர்க்கட்சிகள் என்னன்னவோ செய்து பார்த்தார்கள். ஆனால் எவரும் ஒன்று சேர்ந்து எதையும் செய்யவில்லை. கடைசி வரைக்கும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றவில்லை. இது தான் ஜெயலலிதாவின் அதிர்ஷ்டம் அல்லது தமிழர்களின் துரதிஷ்டம். ஜெயலலிதா தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் தன் திறமைகளின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை விட எதிர் அணியில் உள்ளவர்களின் பலவீனங்களை வைத்தே ஒவ்வொரு கட்டத்திலும் வென்று வந்தார். ஆமாம் இது உண்மை தானே? என்று எதிர் அணியில் உள்ளவர்கள் அப்போது கூட ஒன்று சேர முன் வரவில்லை. 

காரணம் அனைவரின் நோக்கம் ஒரு விசயத்தில் தெளிவாக இருந்தது. எக்காரணம் கொண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. இந்த ஒரு விசயமே ஜெயலலிதா கடைசியில் இராணுவ மரியாதை பெற்று நல்லடக்கம் செய்யக் காரணமாக இருந்தது.

சரி. ஜெயலலிதா தான் தன் முரட்டுப் பிடிவாதத்தில் தான் பிடித்த முயலுக்கு முன்று கால் என்றார்கள். நம் மக்களின் மனோபாவம் எப்படியிருந்தது? 

சாராயக்கடைகளின் முன்னால் வாசலில் நின்று கொண்டு குடித்துவிட்டு வெளியே வருபவர்களின் கால்களில் விழுந்து அய்யா குடிக்காதீர் என்று ஒருவர் கெஞ்சினாரே? அவர் பெயரை இப்போது யாரிடமாவது கேட்டுப் பாருங்கள்? டவரின் மேல் நின்று கடைசியில் இறந்து போனது தான் அவருக்குச் சமூகம் கொடுத்த மரியாதை. வெற்றிவீரர்களாக அவர் பிணத்தை வைத்து அரசியல் செய்தார்களே? 

இன்று வரையிலும் நந்தினி தன் தந்தையுடன் போராடிக் கொண்டிருக்கின்றாரே? இளமையில் வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களைத் துறந்து யாருக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்? மக்கள் மத்தியில் என்ன ஆதரவு இருக்கின்றது? 

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள கடையை மூடுவதற்கு எத்தனைப் போராட்டங்கள்? கடைசியில் வைகோ வின் அம்மா இறப்பு வரைக்கும் கொண்டு போய் நிறுத்தியது. 

சரி அரசியல்வாதிகள் தான் சுயநலத்தோடு இருக்கின்றார்கள் என்பதனை ஒரு பக்கம் எடுத்துக் கொள்வோம். பாதிக்கப்படும் மக்கள் பக்கம் என்ன நடந்துள்ளது? 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் சாரை சாரையாகத் திரண்டு எதிர்ப்புகளைப் பதிவு செய்தார்களே? தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மட்டுமாவது அதிமுகத் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு இருந்தால் போதுமே? என்ன ஆச்சு? 

படிக்க வெறுப்பாக இருந்தாலும் ஒரே காரணம் பணம்.

ஓட்டுப் போட வழங்கப்பட்ட 200,500,1000,2000 என்ற ஒரு தாளுக்காகத் தங்கள் தன்மானத்தை அடகு வைத்ததோடு அடுத்து வரப் போகும் இளையர் சமூகத்திற்கும் மிகப் பெரிய கேடுகளை இந்த மக்கள் மறைமுகமாக உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். 

ஜெயலலிதா தவறு செய்துள்ளார். அதனைத் தெரிந்தே செய்துள்ளார். 

ஆனால் பாதிக்கப்படும் சமூகம் ஏன் எதிர் நடவடிக்கைகளில் இறங்கவில்லை. போராட்டக்குணம் இல்லாமல் போய்விட்டது என்ற ஊசிப்போன வாதத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அளவு கடந்த ஆசைகளும், உழைக்காமல் கிடைக்கும் பணத்தின் மேல் கொண்ட அக்கறையும் தான் தற்போதைய மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது.  

அதற்கு மேலாக ஜெயலலிதா அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தன் மூலம் அவர் செய்தது எதுவும் தவறே இல்லை என்பது போல அங்கீகாரமும் கொடுத்துள்ளார்கள்.  இதற்கு மேல் ஜெ. மேல் குற்றம் சாட்டுவது முறையல்ல. மக்களின் விருப்பத்தை மாநில முதல்வர் என்கிற ரீதியில் அவர் கடமையாற்றிவிட்டு சென்றுள்ளார்.

டாஸ்மாக் என்றதும் அதன் தீமைகளைப் பற்றி நான் எழுத மாட்டேன். தீமை என்ற போதிலும் அதன் பின்னால் சென்று செத்தே தான் தீருவேன் என்பவர்களைப் பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை. தன் வருமானம் என்ன? தன்னைச் சார்ந்தவர்களின் எதிர்காலம் என்னவாகும்? கல்லீரல் கெட்டுப் போனால் எல்லாமே முடிந்து போய்விடுமே? என்ற எண்ணம் இல்லாமல் அன்றாடம் சொர்க்கம் காண நினைக்கும் அவர்களிடம் நாம் போய்ப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. 

ஆனால் கோவில் பிரசாதம் போல வரிசையில் நின்று தள்ளு முள்ளு கணக்காக முண்டியடித்து வாங்க நினைக்கும் கூட்டம் ஒரு பக்கம். குறிப்பிட்ட கிலோ மீட்டருக்குள் இத்தனை கடைகள் என்று சேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட ஜெ. அரசு மறுபக்கம். 

சிலருக்கு பதவியைக் கொடுத்து படுத்து வணங்க வைத்த ஜெ தான் கடந்த ஆறு ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களைத் தெருவில் படுத்துருள வைத்துள்ளது. தன்மானம் தேவையில்லை என்ற புதுக்கூட்டத்தை வளர்க்கக் காரணமாக இருந்துள்ளார். மயக்கத்தில் இருந்தால் போதும் மற்றவையெல்லாம் தேவையில்லை என்ற புதிய சமூகக் கோட்பாடுகளை வளர்த்துச் சென்றுள்ளார். 

இவற்றை எல்லாம் விட நான் எப்போதும் ஆச்சரியமாக நினைப்பது வேறொன்று உள்ளது. ஒரு மதுப்புட்டியை விற்கும் போது அதற்குப் பின்னால் தெரிந்து கொள்ளையடிக்கும் பண விவகாரங்களைப் பற்றி அதிகமாக யோசித்துள்ளேன். 

எந்த மது எப்போது வாங்க வேண்டும்? எந்த நிறுவனத்தில் வாங்க வேண்டும்? எவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? ஒரு பாட்டிலுக்கு எத்தனை ரூபாய் அதிகமாக வைத்து விற்க வேண்டும்? யாருக்குப் பார் கொடுக்க வேண்டும்? அங்கு அனுமதியில்லாத போதும் எப்படி விற்கப்பட வேண்டும்? கூட்டம் அதிகமாகக் கூடும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த மது விற்கப்பட வேண்டும்? எந்த மதுவை புறக்கணிக்கப்பட வேண்டும் போன்ற ஆராய்ச்சிகளில் இறங்கினால் பல  ஆச்சரியங்கள் உங்களைத் தாக்கக்கூடும். 

அது குறித்து நீங்கள் படித்துப் பார்த்தால் தமிழ்நாட்டின் மொத்த மது விற்பனையில் (தனிப்பட்ட) ஒரு மாத வருமானம் என்பது ஆயிரக்கணக்கான கோடிகளைத் தொடும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? 

பாட்டிலில் விலை என்று போட்டிருக்கும் விலையை விடப் பத்து ரூபாய் அதிகமாகத்தான் வாங்குகின்றார்கள். 100 ரூபாய் என்றால் 110 ரூபாய்க் கொடுத்தால் தான் வாங்க முடியும். இந்தப் பத்து ரூபாய் என்பது தமிழ்நாடு முழுக்க விற்கப்படும் அத்தனை மதுப்பாட்டில்கள் மூலம் கிடைக்கும் தனி வருமானம். 

இது எங்கே போகின்றது? 

மேல் மட்ட அரசியல்வாதிகளுக்கு டெண்டர் மூலம் கிடைக்கும் கமிஷன் கிடைப்பது போல அடுத்தக் கட்டம் முதல் அடிமட்டம் வரைக்கும் உள்ள அரசியல்வாதிகளுக்கு இந்த மது வருமானம் தான் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.  இது தவிர மொத்த அதிகார வர்க்கமும் பங்கு பிரித்துக் கொள்கின்றார்கள்.  பல கோடி மக்களின் குடல் கருகும் வாசனை அவர்களை எட்டுவதே இல்லை.

முன்பெல்லாம் மதுவைப் பொறுத்து சோடா அல்லது தண்ணீர் கலந்து குடிக்கும் பலரையும் பார்த்துள்ளேன். இப்போது அப்படியே மாறிக் கொண்டு வருகின்றது. வாங்கிய பாட்டிலை அப்படியே திறந்து மடமடவென்று அங்கேயே குடித்து விட்டு அப்படியே சென்று விடுகின்றார்கள். ஒரு அமிலத்தை அப்படியே குடலுக்குள் இறக்கினால் என்னவாகும்? நாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகின்றது? 

மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரைக்கும் பணம் ஆறாகப் பாய்கின்றது. வாங்கும் மதுவில் தரமில்லை. அதனைச் சோதிக்க வசதியில்லை. மொத்தத்தில் அது குறித்த அக்கறை குடிப்பவர்களுக்கும் இல்லை. தயாரிப்பவர்களுக்கும் இல்லை.

அரசு நிர்வாகம், அதிகாரிகள் தொடங்கி கடைசியில் மக்கள் வரைக்கும் தமிழ்நாட்டில் இது வரையிலும் எந்த முதல்வரும் செய்யாத அளவிற்கு அனைவர் மனதிலும் துருப்பிடித்த மாற்றங்களை உருவாக்கிய இவரை "இரும்பு மனுஷி" என்று சொல்வது பொருத்தம் தானே?

வரலாறு முக்கியம் அமைச்சரே (மின் நூல்)

தொடர்புடைய பதிவுகள்


முந்தைய பதிவுகள்


அரசியல் (கோர முகம்)


19 comments:

Avargal Unmaigal said...

இரும்பு மனுஷி என்று சொல்லுவதை விட இரக்கமில்லா மனுஷி என்றுதான் சொல்ல வேண்டும்

Ravi said...


ஜெயலலிதா ஒரு அசாத்தியமான அரசாட்சியை நடத்தியவர் என்ற இல்லாத ஒரு இமேஜ் ஐ இந்தியா முழுக்க பதிவு செய்தவர்கள் அவரை அம்மாவாக கொண்டாடிய பல்லான கோடி மக்கள் ... அந்த மக்கள் மீது எந்த விதமான கரிசனமும் இல்லாமல் மனசாட்சியும் இல்லாமல் கிட்டத்தட்ட 20 வருடங்களையும் வெறும் gimmic அரசியல் செய்து வீணாக்கியவர் ஜெ ...
நாம் வேரோடு வெறுக்கும் கட்டுமரம் கூட பெயர் சொல்லும் பல பதிவுகளை செய்திருக்கிறார் .அதில் பலவற்றின் மீது ஜெ லேபிள் ஒட்டிக்கொண்டார் (மெட்ரோ ,கோயம்பேடு நிலையம் மாதிரி ). ஜனநாயக மரபுகள் எல்லாம் அடித்து நொறுக்கியதையும் இருக்கின்ற அதிகாரங்களை துஷ் பிரயோகம் செய்ததையும், தன்னிடம் குனிந்தால் போதும் தேசம் எக்கேடு கேட்டால் என்ன என்ற அடிப்படையில் எந்த தகுதியும் இல்லாதவர்களை வைத்து 20 வருட நிர்வாகத்தை சிதைத்தததையும்
ஒரு கம்பீரமான தலைவிக்கான தகுதியாகவும் செய்த தவறுகளுக்கு சிறை சென்றதை போர்க் குணம், Iron Lady, எனவும் சொல்லிப்பழகிவிட்டோம் ...அவர் மிகப்பெரிய intellectual என்று சொல்லும்படியான அரசாண்ட சான்றுகள் என்ன விட்டுச்சென்றிருக்கிறார் என் கண்ணை மூட்டி யோசித்துப்பாருங்கள் .இத்தனை வருடத்தில் ஒரே ஒரு திட்டம் ?????????????????????
.... உடனே மளிகை கடை list (அம்மா உப்பு, அம்மா பருப்பு என்று) மற்றும் ஹோட்டல் கடை list (ஒரு ரூபாய் இட்லி, ஐந்து ரூபாய் பொங்கல் என்று) பட்டியல் இடவேண்டாம்..
இத்தனை வருடத்தில் ஏதாவது ஒரு நல்ல திட்டம், அதாவது தமிழக முன்னேற்றத்திற்கான திட்டம் நிறைவேற்றியுள்ளாரா,,,????.
மற்றவர்கள் செய்த திட்டங்களையும் தனது பெயரில் எந்த ஒரு வெட்கமே இல்லாமல் இது நான் கொண்டு வந்தது என்று கூறுவது / திறந்து வைப்பது (மெட்ரோ ரயில் / கோயம்பேடு /திமுக விரைவில் செய்த பல மின் திட்டங்கள் 2011 / பல பாலங்கள்)

சேது சமுத்திர திட்டத்தை இனி எப்போதுமே நிறைவேறாத படி முடக்கியது யார். வாழும் வரை அவர் தான் எல்லாம், தான் மட்டும் தான் என்று தனக்கு கிடைக்காத புகழ் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்வு மிகுந்த தன்னலத்துடன் வாழ்ந்தாரே தவிர, (ஓ அதை தான் நாம போர் குணம் , இரும்பு மனுஷி – என்று சொல் வைத்து விட்டார்களே) .. தமிழ்கதை பற்றியோ, தமிழ் மக்களை பற்றியோ அல்லது அவர் கட்சியை பற்றியோ எள்ளளவும் கவலை படவில்லை என்பதை அறிவுள்ளவர்கள். சிந்திப்பவர்கள் அறிவர்.

Ravi said...


இப்போது பாருங்கள், அவர் அந்த கட்சியின் மீது அக்கறையுள்ளவர் என்றால் தனக்கு பிறகு கட்சியை வழிநடத்த தேவையான எல்லா ஆயத்தங்களை செய்த்திருப்பார். தான் தான், வேறு யாரும் இருக்கக்கூடாது என்ற ஆணவத்தால் அதுவும் கட்சியை பாடாய் படுத்தப்போகிறது.

எதிர் கட்சியை முழு எதிரி கட்சி, அவர்கள் ஜென்ம விரோதி, அவர்களிடத்தில் யாரும் பேசினாலே அவர்களுக்கு ஆபத்து என்று தமிழக மக்களிடையே ஒரு எதிரி தன்மையையும், ஒற்றுமையின்மையையும் உருவாக்கியது யார்..??? .

இதெல்லாம் இந்த மாயையை நம்பி இருக்கும் மக்களுக்கு தெரியவா போகிறது. ஆணவத்துடன் வாழ்வதை பார்த்து அவர் இரும்பு மனுஷி என்று மக்களும் தான் பெருமை பட்டு கொள்கிறார்களே தவிர இரும்பு எவ்வாறு அதி சீக்கிரத்தில் துரும்பாகியது என்பதை அவர்கள் இந்த ஜென்மத்தில் சிந்திக்க போவதில்லை என்பது மட்டும் உறுதி.

துவண்டு போனதையும் போராடி போராடி உயிர் நீத்தார் என்று தானே சொல்கிறார்கள். அவரோடு இருந்த அமைச்சர்கள் , எம்,எல்,ஏ க்களோ இப்போது சொல்கிறார்களா... இல்லை... ஒட்டு போட்ட, கதறி அழுத்த மக்கள் ரொம்ப புத்தி சாலி மக்கள்..

அம்மா-வை போல அதி புத்திசாலி இல்லை, அம்மா-வை போல அதி திறமைசாலி இல்லை, அம்மா-வை போல அரசியல் சாணக்கியம் யாருக்கும் இல்லை என்று புகழ் பாடும் நீங்கள் .... கொஞ்கம் யோசித்து பாருங்க.: அந்த அதி புத்திசாலி-க்கு யாரை பக்கத்தில் வைத்து கொள்ளவேண்டும் என்று கடைசி வரை தெரியாமல் இருந்தது தான் சாண்று.

அம்மா இறந்த பின்பு அமைச்சர்கள், யாரும் அளவில்லை என்று வருத்தப்படும் மக்கள், கொஞ்சம் இதையும் யோசிச்சு பாருங்க:
• எப்போதும் அடுத்த அமாவாசை வரை தான் அவை பதவி என்கிற நிலைமை-யா உருவாக்கி அதில் ஆனந்தம் அடைத்தது இந்த அம்மா தானே..
• எப்போதும் BENCH தட்டி பொம்மைகள் போல தானே இந்த அம்மா அவர்களை வைத்து இருந்தார், ..
• எப்போதும் வார்த்தைக்கு வார்த்தை “மாண்பு மிகு , புரட்சி தலைவி, இதய தெய்வம்”.. என்று புகழ் பாடிக்கொண்டு தானே இருக்க ஆசை பாட்டர்..

இப்படி எல்லாம் நோக வைத்துவிட்டு .. இறந்தவுடன் அளவில்லை .. அலுது புலம்பவில்லை என்று எப்படி எதிர் பார்கிறீர்கள் மக்களே ?
இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியை ஒரு ராணுவ அமைப்பு போன்று வைத்து இருந்தார் என்று புகழ் வேற .. .. ஆட்டு மந்தை யாக இவளோ நாள் வைத்து இருந்தார் என்று சொல்ல தான் தொன்றுகிறது ..

......இறந்தவர்களை பேசுவது இது நேரமில்லை என்றால் அவரை அடுத்தகணம் மறந்துவிட்டு சசிகலா உட்பட அடித்துக்கொள்கிறதே ஒரு கூட்டம் அதை நினைத்துப்பாருங்கள் ...

இது முடிவெடுக்கும் நேரம் ...தேசம் குப்பையாக கிடக்கிறது ..இனி எந்த ஒரு அரசியல் வாதி மீதும் செண்டிமெண்ட் வைக்கும் புத்தியை அறுத்துப்போடுங்கள் ..

நிகழ்காலத்தில்... said...

டாஸ்மாக் பத்தி கட்டுரை.. உங்களின் ஆதங்கங்கள் அனைத்தும் எழுத்துகளாய்... நல்லா வந்திருக்குது

Unknown said...

ஜோதிஜி, மக்கள் அறியாமையில் முழுவதுமாக மூழ்கி உள்ளனர். இதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது :(

Unknown said...

தலைப்பை அரசியலின் (சோர) முகம் என்று மாற்றினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

இருதயம் said...

நெற்றியடி.....! அறிவு வருமா ...?

Rathnavel Natarajan said...


சீரழிக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடியிருந்தால் ,நானும் ஒப்புக் கொள்வேன் இரும்பு மனுஷி என்பதை ! - நிஜம்.

M.Thevesh said...

திமுக & அதிமுக இரண்டுமே தமிழ்நாட்டின் சாபக்கேடுகள்.

Unknown said...

#அனைவர் மனதிலும் துருப்பிடித்த மாற்றங்களை உருவாக்கிய இவரை "இரும்பு மனுஷி" என்று சொல்வது பொருத்தம் தானே?#
மிகவும் பொருத்தமே,உண்மையில் இரும்பு மனுஷிதான் :)

vic said...

நீங்க கட்சி தொடங்குங்க

திண்டுக்கல் தனபாலன் said...

// தீமை என்ற போதிலும் அதன் பின்னால் சென்று செத்தே தான் தீருவேன் என்பவர்களைப் பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை. // இதை விட டாஸ்மாக் பற்றி என்ன சொல்ல வேண்டும்...?

'பரிவை' சே.குமார் said...

டாஸ்மாக் அழிவு என்று தெரிந்தும் அதன் பின்னே நாம் நகர்வதால்தான் அதனால் கோவில், பள்ளி என எல்லாவற்றின் அருகிலும் வரமுடிந்தது. அரசுக்கு வருவாய் என்ற நிலையில் பலரின் தாலியறுத்தவரின் நிலை 75 நாள் என்ன நடந்தது என்பதே தெரியாமல் சிதரம்பர ரகசியமாய் மெரினாவில் முடங்கிவிட்டது...

இந்தக் கட்டுரை நேற்றே வாசித்துவிட்டேன்... கருத்து மட்டும் இடவில்லை....

RAVINDRAN MARIAPPAN said...

எல்லாம் எனக்குத் தெரியும்? என்ற எண்ணமே அவரைக் கடைசியில் 75 நாட்கள் முடக்க வைத்துக் காலம் கேள்வி கேட்டது? உனக்கு என்ன தெரியும் என்று? This is the fact. ஜெயலலிதா தான் தன் முரட்டுப் பிடிவாதத்தில் தான் பிடித்த முயலுக்கு முன்று கால் என்றார்கள். நம் மக்களின் மனோபாவம் எப்படியிருந்தது?
அளவு கடந்த ஆசைகளும், உழைக்காமல் கிடைக்கும் பணத்தின் மேல் கொண்ட அக்கறையும் தான் தற்போதைய மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. சிலருக்கு பதவியைக் கொடுத்து படுத்து வணங்க வைத்த ஜெ தான் கடந்த ஆறு ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களைத் தெருவில் படுத்துருள வைத்துள்ளது. தன்மானம் தேவையில்லை என்ற புதுக்கூட்டத்தை வளர்க்கக் காரணமாக இருந்துள்ளார். மயக்கத்தில் இருந்தால் போதும் மற்றவையெல்லாம் தேவையில்லை என்ற புதிய சமூகக் கோட்பாடுகளை வளர்த்துச் சென்றுள்ளார். Finely explained about the society and its mentality. Very nice.

ஜோதிஜி said...

நீங்க தான் பொதுச் செயலாளர்.

ஜோதிஜி said...

என் பாதைக்கு கடைசியாக வந்துட்டீங்க தவேஷ். புரிதலுக்கு நன்றி.

ஜோதிஜி said...

எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

ஆழ்ந்த விமர்சனம். நன்றி ரவி. நான் கூட விரைவில் மாற்றம் வரும் என்றே நம்பினேன். இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் இங்கே மாற்றம் என்பது கடினம். மக்களின் எண்ணங்கள் வேறுவிதமாக விகாரமாக மாறிவிட்டது.

ஜோதிஜி said...

இதுவே ஒரு தலைப்பு போல உள்ளதே?