Thursday, June 20, 2013

பிரபல்யங்களின் சாவு

திரைப்பட பிரபல்யங்கள், அரசியல்வாதிகள் இறப்பு குறித்த செய்திகளை படிக்கும் பொழுது என் மனதில் எந்த பாதிப்பும் உருவாவதில்லை.  

ஊடகத்துறைக்கு பிரபல்யங்களின் சாவுகள் என்பது முக்கியமாக இருப்பதால் இவர்கள் இறக்கும் பொழுது பக்கங்களை காட்சிகளை அடைத்துக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். அவரவர் அப்போதைய நிலை வைத்து செய்திதாளில் பக்கத்தை நிரப்புகின்றார்கள்.

பிரபல்யங்களின் மரணத்தை விட பழகியவர்களின் திடீர் மரணம் என்னை பாதிப்படைய வைக்கின்றது.

ந்த நண்பர் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நிறுவனத்தில் வேறொரு துறையில் பணியாற்றினார். சென்ற வருடம் பார்த்த போது சொந்தமாக தொழில் தொடங்குவதாக சொல்லியிருந்தார்.  நான் இருந்த நிறுவனத்தில் சில ஒப்பந்தங்களை வாங்கிக் கொடுத்தேன்.  இடையில் சில முறை பேசியிருப்போம்.  தொழில் சார்ந்த சில சமூக வலைதளங்களில் அவரும் இருப்பதைப் பார்த்தேன். அவரும் வெளி நாட்டு தொடர்புகளுக்காக முயற்சித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.  35 வயதில் ஒரு இளம் தொழில் முனைவோராக எனக்குத் தெரிந்தார். சென்ற வாரத்தில் நண்பர் அழைத்து "உங்க நண்பர் சேகர் சேவூர் அருகே சாலை விபத்தில் இறந்து விட்டார்" என்ற போது மீண்டு வரவே ஒரு வாரம் ஆனது..

சில வாரங்களுக்கு முன் விருதுநகரில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டு கணவன் மனைவி தங்கள் குழந்தைகளுடன் காரில் பழநி கோவிலுக்குச் சென்று விட்டு புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த போது நள்ளிரவில் சாலை விபத்தில் பலியாகிப் போனார்கள்.

இருவருமே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்.பெண் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்.பையன் தொழில் நுட்ப படிப்பு படித்துக் கொண்டிருப்பவர். கோடை விடுமுறை முடிந்து கோவில் தரிசனத்தையும் முடித்து தாங்கள் பணிபுரியும் புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த போது சாலை விபத்தில் மொத்த குடும்பமும் பலி.

பத்திரிக்கையில் படித்த போது கண்ணுக்குத் தெரியாத அந்த மொத்த குடும்பத்தையும் பற்றியே சில நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தேன்.

இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர்கள் இறந்து கொண்டே தான் இருக்கின்றார்கள். அதிலும் சமூகத்திற்கு பலன் உள்ள வகையில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான பேர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  ஆனால் அவர்களின் இறப்பு அவர் வாழ்ந்த அடுத்த மாவட்டத்திற்குக் கூட பல சமயம் தெரியாமல் போய்விடுகின்றது.

சமீப காலமாக பணம் இருப்பவர்கள் கண்ணீர் அஞ்சலி என்ற பெயரில் விளம்பரம் கொடுக்கும் புதிய கலாச்சாரம் உருவாகி இருப்பதால் பலரின் இறப்பு குறித்து தெரிய வருகின்றது.

ஒவ்வொரு சமயத்திலும் இந்தியாவில் நிகழும் ஒவ்வொரு பிரபல்யத்தின் சாவும் நம்முடைய அன்றாட வாழ்க்கையை நேரிடையாக பாதிப்பதால் "எப்படா இந்தாளை தூக்கிக் கொண்டு போய் சுடுகாட்டில் சேர்ப்பார்கள்?" என்பதாக தான் இருக்கின்றது.  

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடைகளை அடைத்தே ஆக வேண்டும். பேரூந்துகளை நிறுத்த வேண்டும்.  கண்ணீர் அஞ்சலி என்று தெருவில் அவர்களின் அல்லக்கைகள் மாட்டி வைக்கும் ப்ளெக்ஸ் போர்டுகளை கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டே செல்ல வேண்டும்.

செத்த புண்ணியவான் நல்லவரா? நாணயமானவரா? என்பதை விட  அண்டியிருப்பவர்களுக்கு என்ன பலன்? என்பதில் தான் அவரின் சாவு முக்கியத்துவம் பெறுகின்றது. கட்சித்தலைவர் இறந்து விட்டால் அடுத்து காத்திருப்பவருக்கு கொண்டாட்டம்.  எவரிடமும் சொல்லாமல் பினாமியை மட்டும் நம்பி போட்டிருந்த முதலீட்டை வாங்கிய பினாமிக்கு அதைவிட கொண்டாட்டம்.

நான் மேல்நிலை வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது டிகே சார் விலங்கியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழாசிரியர் மீனவன் சார் வேகமாக உள்ளே நுழைந்து "டேய் டிகே இந்திரா காந்தி அம்மையாரை யாரோ சுட்டுக் கொன்னுட்டாங்களாம்" என்றார். 

முதல் பெஞ்சில் என்னுடன் அமர்ந்திருந்த சொர்ணம் என் காதைக் கடித்தான். "இன்றைக்கு சங்கர் தியேட்டர்ல புதுப்படம் போட்டுருக்காங்க. காலைக்காட்சி போயிடுவோம். வீட்டுக்கும் தெரியாது. மதியம் சாப்பிடப் போக சரியாக இருக்கும். இன்றைக்கு லீவா என்று கேள்" என்றான்.  

கூறுகெட்ட தனமாக நானும் வேகமாக "சார் இன்றைக்கு லீவா?" என்று கேட்க இரண்டு பேருமே என்னை அடிக்க பாய்நது ஓடி வர  தப்பித்து ஓடியது இப்போது நினைவுக்கு வருகின்றது. 

நான் மட்டுமல்ல. பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் எந்த மாணவர்களும் இந்த மனோநிலையில் தான் இருந்தார்கள், 

இப்போதும் அப்படித்தான் இருக்கின்றார்கள்.  

காரணம் அரசியலுக்கும் நாம் வாழும் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லாமல் உருவாக்கப்பட்டு இன்று அரசியல் என்பது "அயோக்கியர்களின் புகலிடம்" என்பதாக மாற்றப்பட்டு வெகுகாலமாகிவிட்டது. 

மக்களே தான் காரணமாக இருக்கின்றார்கள்.

வீடுகளில், பள்ளிகளில் அரசியல் குறித்து பேச முடியாது என்பதை விட பேசக்கூடாது என்பது தான் சரியான வார்த்தை.  

காரணம் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நேரிடையான சம்மந்தம் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஓட்டு கேட்கும் சமயத்தில் மட்டும் தலைவன் என்ற பெயர் உள்ளவரை கூட்டத்தில் தூரத்தில் இருந்து பார்க்க முடியும். இன்று குறிப்பிட்ட கட்சியில் உள்ள தீவிர தொண்டன் கூட அவன் விரும்பும் தலைவனை அத்தனை எளிதாக பார்த்து விட முடியாது.

நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். இறந்தார்.  

சென்னையில் இருந்த அக்கா வீட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ராஜீவ் காந்தி இறந்தார்.  

அந்த இரவு நேரம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே மாட்டிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திரும்பி வந்து செங்கல்பட்டில் காத்திருந்து அதிகாலையில் சென்னைக்கு சிறப்பு ரயில் மூலம் நின்று கொண்டே மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தேன்.

இதே போல ஒவ்வொரும் அவஸ்த்தைகளுடன் தங்களின் அன்றைய தினத்தினை கடந்து வந்திருப்பார்கள்.

கவிஞர் கண்ணதாசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவிற்கு பிறகு என்னை அதிகம் யோசிக்க வைத்த மரணம் சமீபத்தில் இறந்த பாடகர் டி.எம்.எஸ்.

91 வயதில் இறந்த பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் இறந்ததை முக நூலில் ஒருவர் இப்படி எழுதியிருந்தார். 

"இந்த சமூகம் அவருக்கு என்ன செய்தது?".  

அவருக்கு என்ன செய்ய வேண்டும்? இல்லை டிஎம்எஸ் தான் இந்த சமூகத்திற்கு என்ன செய்தார் என்று யோசித்துப் பார்த்தேன். 

அவரின் தாய்மொழி சௌராஷ்டிரமாக இருந்தாலும் அழகான தமிழை தமிழர்களுக்கு தனது குரலால் அறிமுகப்படுத்தினார். அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக ஒவ்வொரு தமிழர்களின் வாழ்க்கையில் காலை முதல் இரவு வரைக்கும் அவரும் கூடவே வாழ்ந்தார்.  

மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், காதல், கவலை, பாசம், பக்தி, உறவு என்று எல்லா நிலையிலும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் ஊடுருவி இருந்தார். 

பெரியார் தனது 94 வயது வரைக்கும் சோர்வில்லாது தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று "கடவுள் இல்லை. கடவுளை நம்பாதே " என்றார். 

ஆனால் டிஎம்எஸ் ஒரு சின்ன ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து கொண்டு அவர் பாடிய பக்தி பாடல்களின் மூலம் சாமி கும்பிட விருப்பமில்லாதவர்களையும் கோவில் நோக்கி ஓட வைத்தார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை தமிழர்களின் வீடுகளில் இன்னும் பல நூற்றாண்டுகள் கவிஞர் கண்ணதாசனும், டி,எம்எஸ் அவர்களும் வாழத்தான் போகின்றார்கள். 

நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்பட வெற்றிக்கும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் .அவர்களின் திரைப்படம் மற்றும் அரசியல் வெற்றிக்கும் உள்ள பல காரணங்களில்  டி.எம்.எஸ் அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது என்பதை எவரும் மறுக்க முடியாது. 

இதை விட டி.எம்.எஸ் க்கு வேறென்ன பெருமை வேண்டும்? 

சாதாரண மனிதர்களின் சாவு என்பது இழவு வீடு. ஆனால் பிரபல்யங்களின் சாவு வீடென்பது இன்று மக்களைப் பொறுத்தவரையிலும் விரும்பியவர்களை ஒரே இடத்தில் காணக்கூடிய வாய்ப்பு.  

இது வளர்ந்த ஒவ்வொரு பிரபல்யமும் தனது வாழ்க்கையில் அனுபவிக்க கூடிய அவஸ்த்தை இது.  எழவு வீட்டில் கூட நம் புத்திசாலி மக்கள் "சார் நீங்க அந்த வசனத்தை பேசி காட்ட முடியுமா?" என்று கேட்பவர்கள் தான் அதிகம்.  

சமீபத்தில் இறந்த மணிவண்ணன் இறப்பு குறித்து நிறைய தகவல்களை படிக்க முடிந்தது. நாம் தமிழர் கட்சி மூலம் தமிழ்நாடு மூமுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வுகளை பார்த்த போது 50 படங்களை மட்டுமே அவர் இயக்கி இருந்த போதிலும் அவரின் தனிப்பட்ட கொள்கைகள் மற்றும் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் காரணமாக இன்று உலகம் முழுக்க அவரின் மரணத்திற்கு  ஒரு அங்கீகாரத்தையும் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வைத்துள்ளது.  

இவரின் மரணம் குறித்து நான் படித்த சிறப்பான பதிவுகளில் ஒன்று இது.                                            

7 comments:

saidaiazeez.blogspot.in said...

பல சமயத்துலே நம்ம வயதுடையவரின் இறப்பை கேட்கும்போது என் தொண்டைக்குழியில் ஒரு இனம்புரியாத வலி ஏற்படுகிறது. மனதில் be ready என்றும் ஒலிக்கிறது. அப்படி கடைசியாக ஒலித்தது நடிகர் முரளியின் மரணத்தின் போது!
வரும் ஆனா வராது.
ஆனா கரெக்ட்டா வந்துடும்!!!

திண்டுக்கல் தனபாலன் said...

மனதளவில் சிலர் இறப்பதில்லை...

TMS அவர்களின் குரல், குறள் போல இவ்வுலகம் இருக்கும் வரை இருக்கும்...!

எம்.ஞானசேகரன் said...

நெருக்கமானவர்களின் இறப்பு உண்மையில் ஒரு இனம் தெரியாத பயத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. குடும்ப பிரச்னையில் தீக்குளித்துகொண்ட எனது மாமாவை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் போது என் மடியிலேயே இறந்து போன நிகழ்வு இன்னும் நெஞ்சை விட்டுப் போகவில்லை. எம்ஜிஆர், இந்திரா, ராஜீவ் இறந்த சமயம் கிடைத்த அனுபவம் தனி கதை.

எஸ் சம்பத் said...

பிரபலங்களின் மரணத்தில் அதுவும் திரைத்துறையினராக இருப்பின் அங்கு என்ன நடக்கிறது என்பதை பலர் பார்த்ததில்லை. மணிவண்ணன் வீட்டில் ரசிகர்கள் என்ற பெயரில் பல பொது ஜனம் நாகரீகமற்று நடந்து கொண்டதை அருமையாக பதிந்திருந்த பதிவு நீங்கள் ரசித்ததாக சொன்ன அந்த பதிவு

கறுத்தான் said...

//பெரியார் தனது 94 வயது வரைக்கும் சோர்வில்லாது தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று "கடவுள் இல்லை. கடவுளை நம்பாதே " என்றார்.

ஆனால் டிஎம்எஸ் ஒரு சின்ன ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து கொண்டு அவர் பாடிய பக்தி பாடல்களின் மூலம் சாமி கும்பிட விருப்பமில்லாதவர்களையும் கோவில் நோக்கி ஓட வைத்தார்.// அய்யா ! ஒரு தத்துவத்தை உருவாக்கி அதற்காக அமைப்பை கட்டி வேலை செய்து வெற்றியும் பெற்றவர் பெரியார்! கடவுள் மறுப்பு என்பது அதன் ஒரு பகுதியே அப்படிப்பட்ட ஒரு தலைவரை ஒரு துறை சார்ந்த கலைங்கரோடு ஒப்பிடுவது எவ்வாறு சரியாகும் இது தான் தமிழர்களின் பலகீனம் ஆகும்

ஜோதிஜி said...

கறுத்தான்

நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை எழுதும் பொழுதே மிகவும் யோசித்தே எழுதினேன். சில உதாரணங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.

பிரமணர்களின் வீடுகளில் தொடக்கத்தில் ஒலித்துக் கொண்டிருந்த வெங்கடேச சுப்ரபாரதம் கடந்த 25 ஆண்டுகளில் நடுத்தர வர்க்கம் சார்ந்த அத்தனை வீடுகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. இதன் விளைவு இன்று திருப்பதி கோவிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது.

தமிழர்களின் கடவுளான முருகன் கோவிலுக்கு தொடக்கத்தில் பாதயாத்திரை, பங்குனி உத்திரம் போன்ற குறிப்பிட்ட நாட்களில், மாதங்களில் மட்டுமே செல்லும் வழிபாட்டுத்தலமாக இருந்தது. இன்று பழநி என்பது ஒரு சுற்றுலா தளம் போல ஆகிவிட்டது. எந்த தொலைக்காட்சியிலும் பக்தி பாடல்களை காலை நேரத்தில் ஒளி ஒலியின் மூலம் பரப்பாத தொ. காட்சியே இல்லை என்கிற அளவுக்கு.

இதே போல சபரிமலை ஐயப்பன்.

வணிக ரீதியாக மிகப் பெரிய லாபத்தையும் வெற்றியையும் தந்தது இந்த பக்தி சார்ந்த ஒலி ஒளி குறுந்தகடுகள்.

எந்த முருகன் கோவிலிலும் டிஎம்எஸ் பாடல் ஒலிக்காத இடமே இல்லை என்கிற அளவுக்கு நான் பார்த்துள்ளேன். எப்படி கர்ணன் ராஜராஜசோழன் என்ற உருவம் என்பதே நடிகர் சிவாஜி கணேசன் தான் என்று தமிழர்கள் நம்பினார்களோ அதே போலத்தான்.

இது போல நிறைய ஒரு பதிவு அளவுக்கு எழுத முடியும்.

கூடுதலாக ஒரு தகவல். 30 ஆண்டுகளுக்கு முன் எந்த பொதுக்கூட்டம் நடந்தாலும் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பேசிய பேச்சுக்களை கூட்டம் நடப்பதற்கு முன்னால் நாலைந்து மணிநேரம் அந்த பெரிய ஸ்பீக்கர் வழியாக மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதுவே 20 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் எம்.ஜி.ஆர் பேசிய பேச்சுக்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அதுவே மேடைப் பேச்சாளர்கள் பேசிய பேச்சுக்களை ஒலிபரப்பிய பாணி இன்று முற்றிலும் மாறி குத்தாட்டாம் கணக்கான விசயங்களை மேடையில் நடத்திக் காட்டி கூட்டத்தை வைத்திருக்க வேண்டிய அவசர அவசியத்தில் தான் இன்றைய கட்சிகள் இருக்கின்றது.

நிறைய பேசலாம்.

ராஜி said...

இறந்தவர்களாஇ வைத்து கல்லா கட்டுபவர்கள்தான் இங்கு அதிகம்.., அதை உணர்த்தியது உங்க பதிவு.., பகிர்வுக்கு நன்றி