Monday, April 01, 2013

அடித்த அடியும் மருண்ட விழியும்

சென்ற மார்ச் மாதத்தில் திருப்பூரில் உள்ள தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியரின் ஆண்டு விழாவை பார்த்த போது என் பள்ளிப் பருவத்து ஆண்டு விழா என் நினைவுக்கு வந்தது.  நான் தொடக்கப்பள்ளி படித்த சரஸ்வதி வித்தியாசாலையில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் நான் பங்கெடுத்த பல்வேறு விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் வந்து போனது. பள்ளி வாழ்க்கையில் முதல் எட்டு வருடங்கள் எனக்கு கிடைத்த சுதந்திரம் மற்றும் அங்கீகாரம் என்பது வேறெங்கும் கிடைத்தது இல்லை.  விளையாட்டு, விருப்பங்கள் இத்துடன் படிப்பு கலந்த வாழ்க்கை.

ஒன்பதாம் வகுப்புக்காக அருகே இருந்த பெரிய மேல்நிலைப்பள்ளிக்கு மாறினோம். கடலில் கரைத்த பெருங்காயம் போல வாழ்க்கை மாறிப் போனது. எந்த விழாவிலும் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு சூழ்நிலை மாறியிருந்தது.  மீண்டும் கல்லூரி சென்ற போது தான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமைந்தது.  

தற்போது வருடந்தோறும் எங்கள் தேவியர்களின் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சென்று கொண்டு இருக்கின்றேன்.  வீட்டில் ஒருவர் நடனத்தில் ஆர்வத்தோடு பங்கெடுப்பதால் அவர் நிகழ்ச்சியை காண வருடந்தோறும் தகப்பன் என்ற கடமைக்காகவும், அவரின் மிரட்டலுக்கும் பயந்து கொண்டு அங்கே சென்று முதல் வரிசையில் அமர்ந்து கொள்வதுண்டு. ஏதோவொரு வருடம் சில ஆச்சரியங்கள் எனக்கு கிடைக்கும். ஆனால் தற்போது கார்ப்பரேட் தனமாக குழந்தைகள் படிக்கும் பள்ளி மாறிக் கொண்டு வருவதால் வெறும் வேடிக்கையாளனாக பார்த்து விட்டு வந்து விடுவதுண்டு.

முன்பு வருடந்தோறும் பெற்றோர்கள் கூட்டம் ஒன்றை நடத்துவார்கள். கடந்த மூன்று வருடங்களாக அதையும நிறுத்தி விட்டார்கள். 

என் சிந்தனைகள் நோக்கங்கள் எதையும் குழந்தைகளிடம் காட்டிக் கொள்வதில்லை. குறிப்பாக அவர்களின் சிந்தனைகளில் எதையும் வலிய திணிப்பதும் இல்லை. அவர்களுடன் செலவழிக்கும் நேரத்தையும் விட்டுக் கொடுப்பதில்லை.அவர்களின் புதிய சிந்தனைகள் அவர்களை வழிநடத்தட்டும்  என்று நம்பிக்கையோடு இருக்கின்றேன்.

அவர்களின் அன்றாட நிகழ்வில் உருவாகும் சிறிய தவறுகளை சுட்டிக் காட்டுவதோடு சரி.அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறுவதும் இல்லை.

மகள் ஆடும் நடனத்திற்கு அந்த ஒரு நாள் கூத்துக்காக உடைகள் மற்றும் அலங்காரத்திற்காக என்கிற வகையில் ரூபாய் 500 ல் தொடங்கியது. தற்போது ரூபாய் 1300 வரைக்கும் வந்து விட்டது.  காரணம் பேஷன் என்ற வார்த்தை ஒவ்வொரு பெற்றோர்களையும் படாய் படுத்திக் கொண்டிருக்கிறது. முக்கால் நிர்வாணத்தை ரசிக்கும் மனோநிலையில் பெரும்பாலன பெற்றோர்கள் வந்து விட்டதால் கண் இருந்தும் குருடனாகத் தான் இந்த வாழ்க்கை வாழ வேண்டும் போல் உள்ளது.

தமிழ் கலாச்சாரத்திற்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லாத  வாழ்க்கை வாழவே இங்கு பெரும்பாலான மக்கள் விரும்புகின்றார்கள். ஆண்டு விழாவில் குழந்தைகள் ஆடும் ஆடலுக்கு தேந்தெடுக்கப்படும் உடைகள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றது. அந்த பெருங்கொடுமையை மகளின் அதீத ஆசைக்காகவே வருடந்தோறும் தியாகம் செய்து கொண்டு வருகின்றேன்.

இந்த வருடம் என் கோபம் அளவுக்கு அதிகமாக போக வகுப்பாசிரியரிடம் குமுறித் தீர்த்த போது அவர் சொன்ன வாசகம்.  

"ஒவ்வொரு முறையும் நீங்கள் மட்டும் தான் தைரியமாக பல விசயங்களை நிர்வாகத்திடம் சொல்லி சின்னச் சின்ன மாறுதல்களை உருவாக்க காரணமாக இருக்குறீங்க. வேறு எந்த பெற்றோரும் இதை கண்டு கொள்வதே இல்லை" என்று வருத்தத்துடன் சொன்னார்.

என்னுடைய கோபம் என்னவென்றால் அந்த ஒரு நாள் போடும் உடை என்பது வேறு எந்த நிலையிலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாகரிகம் என்ற பெயரில் உள்ளது. இதற்காக வெளி இடங்களில் (கோரியாகிராஃபர்) இருந்து நபர்களை அழைத்து வந்து கண்றாவி உடைகளை அணிவித்து ஆடச் செய்வது தான் உச்சபட்ச கோபத்தை உருவாக்கி விடுகின்றது. 

இந்த முறை பள்ளி முதல்வரிடம் முறையிட பல மாறுதல்கள் உருவானது.  

பள்ளிக்கருகே வீடு என்ற சூழ்நிலையில் பலவிதமான விருப்பமற்ற செயல்பாடுகளுக்கு நாமும் உடந்தையாக இருக்க வேண்டிய சூழ்நிலை தான் மனதிற்கு ஒருவிதமான ஆற்றாமையை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஆங்கில வழிக் கல்வி என்பது என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு விதமான தண்டனை தான்.

காரணம் நான் சந்திக்கும் என்பது சதவிகித பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடங்களை சொல்லிக் கொடுக்க நேரம் இருப்பதில்லை. இருந்தாலும் அவர்கள் படிக்கும் பாடங்கள் புரிந்து கொள்ளும் அறிவும் இருப்பதில்லை.  முடிந்தால் டியூஷன் என்ற பெயரில் வேறொரு இடத்திற்கு துரத்தும் நோக்கம் தான் பெரும்பாலான வீடுகளில் நடைமுறையாக இருக்கின்றது.

சோர்ந்து போய் வரும் குழந்தைகள் மறுபடியும் சோர்வோடு செல்கின்றார்கள்.

விளையாட முடியாத சோகம், விரும்பிய காரியங்களை செய்ய முடியாத தினசரி எந்திர வாழ்க்கை என்பது ஒட்டு மொத்தமாக மனதளவில் எப்போதும் ஒரு கோபத்தோடு வாழ வேண்டிய வாழ்க்கையை அவர்களுக்கு அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்க பிடிவாத குணம் உள்ளவர்களாக மாறத் தொடங்குகின்றார்கள்.

பகிர்தல் இல்லாத போது பாவங்களை நோக்கியே நகர்கின்றார்கள்.

ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ஆங்கிலக் கல்வியை பல்வேறு காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு விரும்புகின்றார்கள். குறிப்பாக ஆங்கிலம் தெரிந்து விட்டால் அகில உலகமும் நம் வசமாகிவிடும் என்ற எண்ணம் எப்படியோ இங்கே விதைக்கப்பட்டு விட்டது?

ஆனால் ஆங்கில கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் பெறும் 3500 ரூபாய் சம்பளத்திற்கு என்ன விதமான அறிவை புகட்டப்படும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.

முதுகு வலிக்க சுமந்து செல்லும் புத்தக பைகள் தான் மிச்சம்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள அதிமுக கட்சியைச் சேர்ந்த சிவசாமி கூட சர்வதேச தரம் என்ற பெயரில் சென்ற வருடம் ஒரு பள்ளியைத் தொடங்கினார்.  தரம் என்பது அதளபாதாளத்தில் இருப்பதாக பெற்றோர்கள் சொல்ல இப்போது விழிபிதுங்கிப் போய் இருக்கிறார்கள்.

இந்த வருடம் திருப்பூரின் சென்னை சில்க்ஸ் நிறுவனமும் தனது கல்வி நிறுவனத்தை தொடங்க இருக்கின்றார்கள். ஆலமரம் போல பல துறைகளில் விழுது பரப்பிய இந்த நிறுவனம் இப்போது கல்வித்துறையில் காலடி வைத்துள்ளார்கள். நிதானமாக வளரும் போக்கை கொண்டவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள் என்று நம்புகின்றேன்.

இங்கு ஏற்றுமதி தொழிலில் வீழ்ந்த, வீழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை நிறுவனங்களும் உடனடியாக தேர்ந்தெடுக்கும் துறையென்பது இந்த கல்வித்துறையாக இருக்கின்றது.  குறுகிய காலத்தில் நல்ல அறுவடையை எடுத்து விடுகின்றார்கள். இங்குள்ள மற்றொரு பள்ளியில் ஆண்டு விழா என்ற பெயரில் ஒவ்வொரு மாணவரும் ரூபாய் ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கட்டாய வசூல் செய்து சாலமன் பாப்பையா வந்து அறிவுரை சொல்லப் போகின்றாராம்.  3000 குழந்தைகளுக்கு மேல் படிக்கும் பள்ளியில் ஒருவருக்கு 1000 ரூபாய் என்றால் கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளவும்.

ஆனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. மன ரீதியாக பெற்றோர்களுக்கும் ஆங்கிலக் கல்வி  என்பது ஒரு தண்டனை போலவே இருக்கின்றது.  எவரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. . 

இங்குள்ள அரசுப்பள்ளியின் கொடுமை வேறு விதமாக இருக்கின்றது.

ஒரு வகுப்பில் 50 முதல் 60 குழந்தைகள் வரைக்கும் அடைத்து வைத்து பாடம் போதிக்கும் அந்த ஆசிரியை நிலமையை நினைத்துப் பார்த்த போது அவருக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. 

சில வருடங்களாகத்தான் இங்குள்ள குறிப்பிட்ட அரசு பள்ளிக்கு வசதியான கட்டிடங்கள் உருவாகியுள்ளது. இங்குள்ள சில முதலாளிகளின் கருணைப் பார்வையினால் நல்ல வசதிகள்  உருவாகியுள்ளது. .

தற்போது திருப்பூர் மாவட்டம் என்ற பெரும் பெயரைப் பெற்றுள்ளது. ஆனால் இங்குள்ள மாவட்ட கல்வித்துறைக்கென இருக்கும் மாவட்ட கல்வி அதிகாரி வரைக்கும் பேசிப் பார்த்த போது அவர்களின் பிரச்சனைகளை அழ மாட்டாத குறையாக சொல்லி செல்பவரிடம் ஆறுதல் கேட்கும் நிலையில்  தான் அவர்கள் இருக்கின்றார்கள்.  

மாவட்ட கல்வி அதிகாரிக்கு ஒரு பள்ளியில் உள்ள வகுப்பறை ஒதுக்கி அவருக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்து இருப்பதை எங்கேயாவது கேட்டு இருக்கின்றீர்களா?

குடியை வளர்க்க உதவும் அரசாங்கத்தில் குடிமக்களின் கல்வி சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி  தெரியப் போகின்றதா என்ன? காமராஜர் என்றொரு மனிதர் இங்கே தோன்றியிருக்காத பட்சத்தில் இன்று முக்கால் வாசி தமிழர்கள் முழு முட்டாளாகத்தான் வாழந்திருக்க முடியும்.

குடும்பத்தோடு திரு தங்கராசு அவர்கள் நடத்தும் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சென்ற போது தேவியர்களை அங்குள்ள குழந்தைகளுடன், அவர்களின் செயல்பாடுகளை கவனிக்கச் சொன்னேன்.

வீட்டுக்கு வந்த போது மூவரும் சொன்ன ஒரு வாசகம்.

"நம்ம வீட்டுக்கு பக்கத்தில் இந்த பள்ளிக்கூடம் இருந்தால் இங்கேயே படிக்கலாம்". என்றார்கள்  

காரணம் தற்போது குழந்தைகள் படிக்கும் பள்ளியை விட்டு கொஞ்சம் தூரத்தில் இருந்த காரணத்தால் முதல் மூன்று வருடங்கள் நான் பட்ட அவஸ்த்தைகள் எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு மிகவும் சிரமப்பட்டேன்.   

டாலர் நகரம் புத்தகத்தில் வரும் ஒரு வாக்கியம்.

நடுத்தர வர்க்கமாக வாழும் போது ஒவ்வொரு சுமையையும் சுகமாகத்தான் கருதிக் கொள்ள வேண்டும்.

எனக்குப் பிடித்த பறை இசை மற்றும் எங்கள் தேவியர்கள் ரசித்த நடனக்காட்சி இது.  







தொடர்புடைய பதிவுகள்

உங்களுக்கு மனமிருந்தால் "மார்க்கம்" உண்டு

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கு :

ஒரு வகுப்பில் 100-க்கும் மேல் - வருடத்திற்கு கட்டணம் ரூபாய் 2000 - (State Board)

ஒரு வகுப்பில் 50-க்கும் குறைவு - வருடத்திற்கு கட்டணம் ரூபாய் 20000 மட்டுமே ! - (Metric Board)

ஊருக்கேற்ப தொகை மாறலாம்... நல்ல தொழில்... சேவை...?-அது அந்தக் காலம்...!

பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க தயார்... "நாளை நீங்கள் இரண்டு பேரும் பள்ளிக் கூடத்திற்கு வரணும்" என்று குழந்தை சொன்னால், முதலில் திட்டு குடும்பத்தலைவிக்கு...! அடி குழந்தைக்கு...! இப்படி இருக்க உங்களை மாதிரியா கோபம் வரும்...?

டியூஷன் அனுப்பினால் தான் மெகா தொடர்களை பார்க்க முடியும்... IPL வேறு தொடங்குகிறது... குழந்தைகள் வளர்ப்பு பற்றி எங்களுக்கு தெரியும்... எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறோம் தெரியுமா...? எங்க குழந்தைகள் எல்லாம் புரிந்து படிப்பார்கள்... சம்பாதிப்பது எல்லாம் அவர்களுக்கு தானே...? பிடிவாத குணம் எல்லாம் எங்க பரம்பரை... பிடிவாத குணம் பற்றி-நீங்க வேறு ஏதோ சொல்றீங்க...?

ஆண்டு விழா - 1000 ரூபாய்... திருப்பூர் பரவாயில்லை...

சென்னை சில்க்ஸ் எங்களிடம் மொத்தமாக வியாபாரம் செய்யும் நிறுவனம்... கல்வியிலும் வியாபாரம் செய்யாமல் இருந்தால் நல்லது... பார்க்கலாம்...

/// குடியை வளர்க்க உதவும் அரசாங்கத்தில் குடிமக்களின் கல்வி சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி தெரியப் போகின்றதா என்ன? ///

அரசாங்கம் செய்யும் அக்கிரமங்களை நாங்கள் எப்படி எல்லாம் தட்டிக் கேட்கின்றோம்... உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்... நண்பர்களிடம் தெரிவிக்கிறோம்... பகிர்ந்து கொண்டிருக்கிறோம்... ஆனால் இவை எல்லாம் குடித்தால் தான் எங்களுக்கு தோணும்... இவ்வளவு வளர்ச்சி இருக்க, நீங்கள் எப்படி அரசாங்கத்தை குறை சொல்லலாம்...? எல்லாம் எம(னு)க்கு தெரியும்...!

/// காமராஜர் என்றொரு மனிதர் இங்கே தோன்றியிருக்காத பட்சத்தில் இன்று முக்கால் வாசி தமிழர்கள் முழு முட்டாளாகத்தான் வாழந்திருக்க முடியும். ///

காமராஜர் ... யார் அவர்...?

குடிகார கபோதிகளை மன்னிக்கவும்... கடவுள்களை ஒரு நாள், தன் குழந்தைகளின் பாட புத்தகத்தில் உள்ள ஏதாவது ஒரு பாடத்தை புரிய வைக்கட்டும்... முடிவில்லை என்றால் விரைவில் குடித்து விட்டு சாகட்டும்...

"என் சிந்தனைகள் நோக்கங்கள்" முதற்கொண்டு "நிறைவேற்றத் தவறுவதும் இல்லை" வரை......... குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

டாலர் நகரம் புத்தக விமர்சனம் எழுதணும் என்றால் எனக்கு சிரமம் தான்... 6 பகுதிகள் தான் முடித்துள்ளேன்... விமர்சித்தால் 6 பகுதிகளை விட அதிகமாக வரலாம்... உதாரணத்திற்கு : இந்தப் பதிவிற்கான சின்ன கருத்துரை மட்டும்... நன்றி...

ஜோதிஜி said...

முதன் முதலாக நீண்டதாக தெளிவான அழகான என்னைப் போல ஆற்றாமை கலந்த கோபத்தோடு உடைய விமர்சனத்தை ரொம்பவே ரசித் தேன்.

ஜோதிஜி said...

புத்தகம் முக்கியமாக மாமனார் படிக்க என்பதை நினைவில் வைத்திருக்கவும்.

Unknown said...

அனைவரும் சூழ்நிலைக் கைதிகளாக மாற்றிக்கொண்டோம். விடுபட மறுகிறோம். விடுபட வெறுக்கிறோம்.

விடுதலை விடுதலை என ஆர்ப்பரிக்கிறோம். ஆனால் ஒரு அடி எடுத்து வைக்க மறுக்கிறோம்.

ஏதேனும் காரணம் தேடி, கூறி ஆங்கில கல்வியை அண்டிப் பிழைக்கிறோம்.

தன்னம்பிக்கை இழந்து, தமிழை ஒழிந்து களைஞரைப் போல "தமிழை வளர்க்க"ப் போகிறோம்.

ஜோதிஜி said...

அழகான உண்மையான விமர்சனம். நன்றி

அகலிக‌ன் said...
This comment has been removed by the author.
அகலிக‌ன் said...

பிறந்த உடனேயே வால் அறுக்கப்படும் எலிகள் பல தலைமுறைகளுக்குபின் வால் இல்லாமலேயே பிறக்கின்றன காரணம் பல தலைமுறைகளாய் வாலுக்கான தேவையே இல்லாமல் அல்லது தேவை இருந்தாலும் பயன்படுத்த வால் இல்லாததும் நாலடைவில் அவற்றின் அணூக்களில் வால் இருந்ததற்கான ஞாபகங்கள் அழிக்கப்பட்டு வால் இல்லாமலேயே பிறக்கின்றன என்கிறது ஆராய்ச்சி. நம் கல்விமுறையும் சுய சிந்தனை உள்ளார்ந்த புரிதலுடனான சுய ஒழுக்கம் (கட்டுப்பாடு) இவற்றை அழித்து மேய்ச்சல் ஆடுகளையும் மந்தை வாத்துக்களையும் உறுவாக்குவதில் முனைப்புடன் இருக்கின்றன. இன்று நாம் சிந்திக்கும் இவ்விஷ்யங்களை அடுத்தடுத்த தலைமுறையினர் சிந்திக்காதவாரு அவர்களின் சுயசிந்தனை அழிக்கப்பட்டிடுக்கும். கோவனம் இல்லாதவன் ஊரில் கோவனம் கட்டியவன் அம்மனத்தான் போல் சிந்திக்கும் ஒரு சிலரும் கிறுக்கன் என போற்றப்படலாம்.

ஜீவன் சுப்பு said...

நம்ம குழந்தைகள் நல்லா பிழைப்பு நடத்தனும்னு நெனச்சா ஆங்கில வழி ஒகே .
நல்லா வாழணும்னு நினைத்தால் தமிழ் வழி படிப்பே சிறந்தது .

அண்ணா ... தாய் தமிழ் பள்ளி தூரமா இருந்தா என்ன ? வீட்ட பக்கத்துல மாத்திகிட்டு , அங்கேயே தேவியர்களை சேர்க்கலாமே..!

ஓராயிரம் பேச்சுக்களையும் , எழுத்துக்களையும் விட ஒரு கிராம் செயல் மேல் என்று எங்கோ வாசித்த ஞாபகம் .

தோன்றியதை கொட்டிவிட்டேன் .அதிகமென தோன்றின் அழித்திடுவீர் எம் கருத்தை .

ஜோதிஜி said...

ஐந்தாவது வரைக்கும் தான் இங்குள்ளது. குழந்தைகள் கடைசி கட்டத்தில் இருப்பதால் இனி வாய்ப்பில்லை. ஆறாவது செல்லப் போகின்றார்கள். ஆனால் வேறுவிதமாக அடுத்த வருடம் செய்ய வேண்டும் என்று இப்பொழுதே யோசித்துக் கொண்டு இருக்கின்றோம்.

ஜோதிஜி said...

ஒரு நீண்ட பதிவு எழுதும் சமாச்சாரம் இது. எளிமையாக சொல்லிட்டீங்க