Saturday, September 01, 2012

திருட அனுமதிக்கும் விளம்பரங்கள்


"உன் தலையில மூளை இருக்கா இல்லை களிமண் தான் இருக்கா?"

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் நம்மைப் பார்த்து ஏதோவொரு சமயத்தில் கேட்டுருக்ககூடும். 

உண்மையிலேயே களிமண் மண்டைக்குள் இருந்தால் எப்படியிருக்கும்? 

யோசித்துப் பார்த்தால் தற்போது நிஜமாகவே சாத்தியமாகிக் கொண்டுருக்கிறது. யோசிக்க வேண்டிய மூளை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறது. களிமண் தான் உள்ளே இருக்குமோ? என்று நினைக்கும் அளவிற்கு மக்கள் தினந்தோறும் புதுப்புது ஆச்சரியத்தை தந்து கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கைக்கு எது அவசியமானது என்பதைத் தாண்டி எது நமக்கு அந்தஸ்த்தை தரும் என்பதாக தேடித் தேடி பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டுருக்கின்றார்கள். விருப்பம் என்பது வெறியாக மாறியுள்ளது.  
 வாங்கி குவிக்கும் பொருட்கள் குப்பையாக இருந்தாலும் சரி வாங்கியே ஆக வேண்டும் என்று அடுத்த முறையும் கடைகளுக்கு படையெடுக்கின்றார்கள்.  படையெடுத்து நாடுகளை பிடித்த காலம் மலையேறிவிட்டது. கடைகளை நோக்கி படையெடுப்பது தான் தற்போது நடந்து கொண்டுருக்கிறது. நுகர்வு கலாச்சாரத்தை புரிந்து கொண்டவர்களும் விதவிதமான விளம்பரங்கள் மூலம் நம்மை வரவழைக்க யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். தரமான பொருட்கள் என்பது மாறி விளம்பரத்தால் வெற்றி என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளோம். .

ஒரு விளம்பரத்தை பார்த்தவுடனே நமக்கு தேவையில்லாத பொருட்கள் கூட தேவையாகி விடுகின்றது. "எதையும் சொல்ற விதமாகச் சொன்னால் வாங்க வந்துவிடுவார்கள்" என்பது மந்திரமாக மாறியுள்ளது. "சொர்க்கத்தில் ப்ளாட் விற்பனை" என்று விளம்பரம் வந்தாலும் முன்பதிவு செய்ய தயாராகவே இருக்கின்றார்கள்..

நம் அடிப்படைத் தேவை தீர்ந்ததும் மாடல் பைத்தியம் பிடிக்கத் துவங்கி விடுகின்றது. மாடல் பைத்தியம் முடிந்ததும் அதிக வசதிகளுக்கு தாவி விடுகின்றோம். ஒவ்வொன்றாக மாற்றும் குணம் இயல்பாக வந்து விடுகின்றது. இந்த குணமே பலரும் கடன் வாங்கி செலவழிப்பது தவறில்லை என்பதில் வந்து முடிகின்றது. கடன் தொல்லையால் குடும்பமே கடைசியில் மண்டையை போட காரணமாகவும் அமைந்து விடுகின்றது. 

பிடித்த நடிகர் சொன்னார்.  விரும்பும் நடிகை போட்டுருப்பது என்று தொடங்கிய இன்று சந்தையில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்குப் பின்னாலும் ஏராளமான நட்சத்திரங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். வண்ண வண்ண நட்சத்திரங்கள் போல் ஜொலிப்பாய் பேசி, ஆடி, நம்பவைத்து நம்மை வாங்க அழைக்கிறார்கள். அவர்கள் நடிக்க வாங்கிக் கொண்ட காசுக்கு கொஞ்சம் அதிகமாகவே கூவ கூவ கடைகளில் சேரும் கூட்டமும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

இன்று தொலைகாட்சிகள் தொடங்கி வானொலி வரைக்கும் சந்தைக்கடை இரைச்சலாகவே மாறியுள்ளது. விளம்பரம் இல்லையேல் வியாபாரம் இல்லை என்பதால் புதுப்புது விளம்பரங்கள் தினந்தோறும் வந்து குடும்பத்தை நோகடித்துக் கொண்டுருக்கின்றது. ஆசைகளுக்கு எல்லையில்லை. எல்லையில்லா வானத்தைப் போல இங்கு எப்போதும் ஏக்கத்ததுடனே வாழ்ந்து கொண்டுருப்பதாலே எல்லாமே தேவையாய் தெரிகின்றது. குறிப்பிட்ட பொருட்களை வாங்கி வந்த பின்பு தான் "ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை" கணக்காய் ஏமாளியாகின்றோம்.

முக்கால்வாசி விளம்பரங்களை அது வாங்கச் சொல்லும் பொருட்களை தனியாக இருக்கும் போது யோசித்துப் பாருங்கள்.  உங்களின் அவசிய தேவைகளை விட ஆடம்பர தேவைகளை அதிகப்படுத்துவதாக இருக்கும்.  

அரிசிக்கு விளம்பரம் தொடங்கி அலங்கரிக்கப்பட்ட கக்கூஸ் ல் போய் உட்காருங்க வரைக்குமான அத்தனை விளம்பரங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும். எல்லா விதமான விளம்பரங்களும் நம்மை நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது. புத்தியை அடகு வைத்து விட்டு புதிதாய் வாங்க கற்றுக் கொண்டுருக்கின்றோம். இன்று தடுக்கி விழுந்தால் ஏதோவொரு நெடுந் தொடரில் தான் விழ வேண்டும். எவரும் விதிவிலக்கல்ல. கடந்த பத்தாண்டுகளில் விளம்பரத்தின் வருவாயை பெருக்க உதவிய அத்தனை பெண்களும் இன்னமும் ஆ.......வென்று பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

ஆனால் நெஞ்சை நக்கி அழவைத்த அத்தனை நடிகர் நடிகைகளும் நகரின் முக்கிய பகுதியில் ஆடம்பர வீடு கட்டி அடுத்தடுத்த மாநிலங்களில் வாங்கிப் போட்டுள்ள சொத்தை பாதுகாக்க பறந்து கொண்டுருக்கிறார்கள். விளம்பர உலகத்திற்கு பெணகளே வரப்பிரசாதம்.  அழகுபடுத்த, மேலும் அழகுபடுத்த, சிவப்பு நிறமாக மாற்ற என்று பெண்களின் சிந்தனைகளை சிறகடிக்க வைப்பதால் கண்டதையும் தடவி தடவி தாவாக்கட்டையில் புண் வந்தது தான் மிச்சமாக இருக்கிறது. இந்த பொருளை தந்தார்கள்? என்று நாம் எந்த நீதிமன்றத்திலும் ஏற முடியாது.  நீதிமான்களும் ஏதோவொன்றை தடவிக் கொண்டுருக்கக்கூடும். 

அடுத்து என்ன வாங்கலாம்?  என்று நீங்கள் யோசிகக வேண்டாம்.  இன்றைய விளம்பரங்களே கற்று தந்து கொண்டுருக்கின்றது.  இப்படித்தான் இன்றைய பெரும்பாலான விளம்பரங்கள் வீட்டின் படுக்கையறை வரைக்கும் வந்து பல்லைக் காட்டி வரவேற்கின்றது.

பணக்காரனுக்கு எப்போதும் கவலையில்லை.  பணத்தை செலவு செய்ய ஏதோவொரு காரணம் வேண்டும். ஏழைகளுக்கு அடுத்த வேளை சோற்றுக்கு ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.  இடையில் மாட்டிக் கொண்ட திருவாளர் நடுத்தரவர்க்கம் தான் இந்த விளம்பரங்களினால் இருப்பதையும் இழந்து விட்டு கதறுகிறார்கள்.  கறை நல்லது என்பது விளம்பர வாசக்ம். கடன் கெட்டது என்பது எதார்த்தம். . 

தற்போது நாம் பார்த்துக் கொண்டுருக்கும் ஒவ்வொரு விளம்பரங்களும் ஏதோவொரு விதத்தில் நம்மை கவர்வதாக இருக்கிறது. தொலைக்காட்சியில் படங்களைப் பார்ப்பதை விட இடையில் வரும் விளம்பரங்களை பார்க்கவே விரும்புகின்றேன். ஆமாம் ரசிக்க மட்டுமே விரும்புகின்றேன். மிக குறுகிய நேரத்தில் சொல்லப்படும் அந்த விசயத்தை யோசித்தவர்களை பாராட்டத் தோன்றும்.  இன்று விளம்பர உலகம் சக்கைப் போடு போட்டுக் கொண்டுருக்கின்றது. சவாலான வேலை.  ஆனால் சரியான வருமானம். 

ஒரு விளம்பர நிறுவனம் சந்தையில் நிலையான இடத்தைப் பெற்று விட்டால் திரைப்பட பிரபல்யங்கள் கூட இவர்களின் வாசலில் நிற்பர்.  குறுகிய கால அறுவடை என்பதை விட அன்றைய உழைப்புக்கு அப்போதே பலன் என்பதால் பலருக்கும் ஏராளமான வருவாயைத் தந்து கொண்டுருக்கின்றது.

தலைமுடி அலங்காரத்தை பாராட்டுவார் என்று எதிர்பார்த்த சிநேகாவிற்கு (நிஜ) கணவர் சம்பார் வாடையை சிலாகித்து பேசுவது.

நீண்ட நாளாக வராமல் இருந்த பறவையை ரசித்துக் கொண்டுருந்த பெரியவர் பறவை போன்ற வாகனத்தில் ஏறியதும் இளம் பெண்களை டாவடிப்பது.

புதிய சாக்லேட் சுவையை சுவைத்ததும் புதிய உலகத்தை காணும் ஆடவர் கூட்டம். ஸ்பிரைட் குடித்தவுடன் பெண் வண்டியில் வந்து உட்காருவது என்று விதவிதமான ரகங்கள். 

ஜோதிகா சொன்ன பிறகு தான் இங்கு பலரும் இதயம் நல்லெண்ணெய் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை நம்பத் தொடங்கினார். அட விளக்கெண்ய்களா? என்று நாம் பேச முடியாது? ஆனால் அத்தனை அபத்தங்களையும் மீறி இந்த விளம்பங்களை ரசிக்க முடிகின்றது.    ஆனால் ரசிப்புடன் நின்று விட வேண்டும்.

பெப்ஸி விளம்பரத்தில் கோடிக்கணக்கான ரூபாயை பெற்றுக் கொண்டு நடிக்கும் அந்த பிரபல்யத்திடம் கேட்டுப்பாருங்க. தினமும் இந்த பெப்ஸியைத்தான் குடிப்பீங்களா? என்று.  முகத்தை வேறு பக்கம் வைத்துக் கொண்டு சென்று விடுவார்.  சொந்த செலவில் எவராவது சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவார்களா? பெப்ஸியில் போட்ட இரும்பே கரையும் போது நம்ம குடல் என்னவாகும்?

விளம்பரம் என்பது ஒரு விதமான மாயை. உங்களை மாய உலகில் சஞ்சாரம் செய்ய அழைத்துச் செல்லும் புஷ்பரக விமானம் போன்றது.  ஆனால் கண்விழித்துப் பார்ப்பதற்குள் கனவு என்று தெரிந்துவிடும். பார்பதற்கு அழகாய் இருக்கும் பல விசயங்களை பார்த்துக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அருகே சென்றால் அணுகுண்டு கணக்காய் நம்  பையில் உள்ள பணத்தை காணாமல் போக்கி விடும். .

ஆனால் இன்று உலகமே விளம்பரத்தை வைத்து தான் தான் வாங்க வேண்டிய பொருட்களையே தீர்மானிக்கின்றார்கள். அதிலும் பிராண்ட் என்ற சொல் இன்று மனிதர்களை யோசிக்க விடாமலேயே செய்துவிட்டது.  எத்தனை பொருட்கள் சந்தையில் இருந்தாலும் குறிப்பிட்ட நிறுவனத்தை தாண்டி உங்களால் வேறு எந்த நிறுவனத்தையும் யோசிக்கவே முடியாது.  காரணம் அவர்கள் உழைத்த விளம்பர உழைப்பின் பலன் இது.

நுகர்வோர்களுக்கு ஆழத்தில் பதிய வைத்து விட்டால் காலம் முழுக்க அறுவடை தான்.  அத்தனையும் அனுபவிக்க நினைக்கும் மனிதனுக்கு தோன்றும் குறுக்கு வழிகள் தான் இறுதியில் சிறைச்சாலையில் கொண்டு போய் சேர்க்கின்றது. 

21 comments:

Paleo God said...

கூகிள் ப்ளஸில் இந்தப் பதிவைப் பற்றி உங்கள் விளம்பரம் அருமை :))

ஜோதிஜி said...

ஷங்கர் .............

அது html code ல் சில வருடங்களுக்கு முன்பு சுடுதண்ணி மாட்டி வைத்த சமாச்சாரங்கள். இதுக்குள்ள போய் கையை சுட்டுக் கொள்ள விரும்பல. அது அப்படியே இருக்கு.

Paleo God said...

மத்திய சர்க்காரின் பிரதிநிதி ஒருவர் எதற்கு விவசாயிகள் 60 விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள், 5% விவசாயம் செய்தால் போதுமே என்று சொன்னதாகப் படித்தேன். அத்தனையும் படித் தேன்.

ஈவேஸ்டுகளை எப்படித் தின்பது என்று வருங்காலத்தில் டெக்னாலஜி கண்டுபிடிப்பார்கள் என்று நினைக்கிறேன். பழைய பாட்டரிகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.

விளம்பரதாரர்களின் மூளை வியக்கத்தக்கது, எந்தெந்த நேரத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இருப்பார்கள் என்று அறிந்து அதற்கேற்ற விளம்பரங்களை தூண்டிலாகப் போட்டு அள்ளுகிறார்கள்.

எந்தப் ப்ரோடக்டையும் குழந்தைகளுக்குப் பிடிப்பது போல விளம்பரம் எடுத்துவிட்டாலும் அது அமோக வெற்றியடைகிறது.

இதையெல்லாம் தடுக்க அம்மா அவர்கள் 8-10 மணி நேரம் பவர்கட் கொண்டுவந்ததையும் சமூக அக்கறையிலேயே பார்க்கவேண்டும் :))

ஜோதிஜி said...

அம்மா யோசிச்சு யோசிச்சு இப்ப முகத்ல இருக்கிற சதையெல்லாம் ரொம்ப தொங்கி போச்சு ஷங்கர். போட்ட மேக்கப் கூட ஒத்துழைக்க மாட்டுது. பயபுள்ளைங்க 40 தொகுதியையும் அள்ளிக் கொடுக்கனும். அப்புறம் இருக்கு வேடிக்கை. தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் வாண வேடிக்கை தான். என்னன்னு மட்டும் கேட்காதீங்க.

அப்புறம் நீங்க கேட்டதுக்கு பதில் எனது காக்க காக்க என்ற பதிவில் விடை இருக்கு. அப்பவே இதைப் பற்றி பேசினோம். நம்ம அதியமான்கிட்ட இதைப் பற்றி பேசி அவருக்கிட்ட வாங்கி கட்டிகிட்டது தான் மிச்சம். அவரும் விவசாயத்தில் இத்தனை ஆட்கள் ஈடுபட தேவையில்லை என்ற கட்சி. இப்பவே ஒருத்தனை ஒருத்தன் அடிச்சு திங்ற மாதிரி ராவுல கனவு வந்து போகுது.

வவ்வால் said...

ஜோதிஜி,

விளம்பரம் செய்தால் எதனையும் விற்கலாம், நீங்க சொன்னப்பலதும் முன்னரே நிஜ வாழ்க்கையில் நடந்துப்போச்சுங்க,

சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருத்தன் அதுவும் அமெரிக்காவில் , நிலாவில் பிளாட் போட்டு வித்துட்டான், வாங்கினது எல்லாம் பணக்காரங்க, அவங்களை சில ஆண்டுகளில் அங்கு அழைத்து செல்ல வசதி வந்துவிடும், அப்போ டூர் போகலாம்னு எல்லாம் சொல்லி ஏமாத்தி இருக்கான், கடசியில் அமெரிக்க அரசு தான் நிலா அரசாங்க சொத்துன்னு சொல்லிடுச்சு :-))

நிஜமாத்தான் நிலாவில் அமெரிக்கா இறங்கியப்பக்கம் அவங்க சொத்து இப்போ ,அமெரிக்கா நிலா முழுக்க அதுக்குன்னு சொன்னதால்,,அப்போ ரஷ்யா கூட இதுக்காக சண்ட ஆச்சாம்,அப்புறம் ஒரு வழியா பாகப்பிரிவினை செய்து அமைதி ஒப்பந்தம் ஆகி இருக்கு.

எதுக்கு இந்தியா உட்பட பல நாடுகளும் நிலாவுக்கு போக நிக்குறாங்கன்னா இடம் பிடிக்கத்தான் :-))

//"சொர்க்கத்தில் ப்ளாட் விற்பனை" என்று விளம்பரம் வந்தாலும் முன்பதிவு செய்ய தயாராகவே இருக்கின்றார்கள்..//

மார்க்கப்பந்துக்கள் எல்லாம் இப்பவே இடம் வாங்கிப்போட்டு இருக்காங்க, சுவனப்பிரியன் தான் சொர்க்கத்தில் ரியல் எஸ்டேட் செய்றார் :-))

இப்போ செவ்வாய் கிரகத்தில ஃபிளாட் போடப்போறாங்களாம் , ஆயுட்கால தவணைத்திட்டம் ஆளுக்கு ஒரு கிரவுண்ட் வாங்கிப்போடலாம் வரிங்களா? :-))

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல் சார்... இன்றும் கூட "வீட்லே ஏதோ புதுசா பெயர் சொன்னாங்க... பெப்சோவோ... என்னவோ.. அந்த பெப்சோ கோல்கேட் பேஸ்ட் ஒன்னு குடுப்பா..." என்று சொல்லும் அளவிற்கு, மக்கள் மனதில் தைத்து விட்டது விளம்பரம்...

(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
Caution : Restore/Backup your HTML, before editing :

(1) Edit html Remove Indli Vote button script

(2) Remove Indli Follow Widget

தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

Anonymous said...



வணக்கம் ஜோதிஜி.

மிக அருமையான, மிக மிக அவசியமான பதிவு.
வாழ்த்துக்கள்.

-காவிரிமைந்தன்

துளசி கோபால் said...

ஒரே விளம்பரத்தை இடைவெளிவிடாமல் தொடர்ச்சியாப்போட்டு களிமண்ணுக்குள் ஏற்றும் வித்தை தெரிஞ்சுவச்சுருக்கே இந்த தொலைகாட்சி சேனல்கள்:(

போதுமடா சாமின்னு ஆகிப்போச்சு.

மார்கெட்டிங் உத்திகள்தான் இப்போ முக்கியம். பொருட்களின் தரத்தையோ இல்லை தேவையையோ யாரும் பார்க்கறதில்லை.

ஆமாம்.... அதென்ன மாடல் வாழ்க்கை?

ப.கந்தசாமி said...

நிறைய விளம்பரங்கள் எனக்கு புரிவதேயில்லை. என்ன பொருளை விளம்பரம் செய்கிறார்கள் என்று தெரியாமல் விழிக்கிறேன். எனக்கு மட்டும்தான் (தலைல களிமண் இருப்பதால்) இப்படியா? இல்லை எல்லோரும் இப்படித்தான் நினைக்கிறார்களா, தெரியவில்லை.

குட்டிபிசாசு said...

சிறுவயதில் விளம்பரங்கள் பார்த்து, அதில் வரும் சோப்புகள் வாங்கிக் கொண்டிருந்தேன். பழைய தூர்தர்ஷன் விளம்பரங்களை தற்போது யூடுபில் பார்த்தால் அந்த காலத்திற்கே போய்விட்டது போன்ற ஒரு நினைவு வந்துவிடும். ரஸ்னா, கோல்ட்ஸ்பாட், லைப்பாய், நட்ராஜ் பென்சில்...இன்னும் எவ்வளவோ! மறக்கமுடியாதவை.

ஜோதிஜி said...

வாங்க குபி (பெயர் நல்லாயிருக்கா?)

சிறுவயதில் துவைக்க ராட்டை சோப்பு, குளிக்க லைபாய். இது ரெண்டு மட்டும் தான் சீக்கிரமா கரையாதுங்றது வீட்டினர் அபிப்பராயம். பவுடரைப் பொறுத்தவரையில் ஏதோவொரு ஒரு பெரிய டப்பா. விளம்பரம் எல்லாம் பார்த்த நினைவே இல்லை. டூரிங் டாக்ஸியில் அரசாங்க விளம்பரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொட்டலாம் கொடுத்த காட்சிகள் தான் நினைவுக்கு வந்து போகுது.

பழனி கந்தசாமி.

புரிய வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்க அந்த பொருளை வாங்கினால் மட்டும் போதுமானது. புரியவில்லை என்றால் காலத்தோடு ஒட்டவிட்லை என்று திண்னைப்பக்கம் தள்ளி வைத்துவிடுவார்கள். சாக்ரத.

டீச்சர்.

துவைக்கும் எந்திரத்தில் உள்ள வசதிகள் ஒவ்வொரு முறையும் மாறிக் கொண்டே இருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வருடத்திற்கு ஒரு முறை அந்த மாடல் பார்த்து மாற்றிக் கொண்டே இருப்பார். இது போல பெரும்பாலனோர் தற்போது எல்சிடி என்று தொடங்கி வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும் இந்த வசதிகள் பொறுத்து மாற்றுகிறார்கள்.

வாங்க காவிரி மைந்தன். மிக்க நன்றி.

தனபால் மிக்க நன்றி. முயற்சித்து தோற்று விட்டேன். எனக்கும் சில நாட்களாக சந்தேகம் இருந்தது. இன்ட்லி தளமும் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது. எனக்கு மட்டும் தானா?

வவ்வுஜி

செவ்வாய் கிரகத்தில் ஒலி அனுப்பி அமெரிக்கன் மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரி என்று செக் செய்து கொண்டுருக்காங்க. நாம செவ் வாய் என்று கவ்விக் கொண்டும் சன் டிவியில் காவிய புதன் என்று மாற்றி கியர் போட்டு முன்னேறிக் கொண்டுருக்கின்றோம். இது போதாதா?

krish said...

அருமை,நன்றி.

Unknown said...

Lays பற்றி முகப்புத்தகத்தில் படித்தது..!

"காற்றை விலை கொடுத்து வாங்கினால்...கொஞ்சம் சிப்ஸ் இலவசம்".

50பைசா கூட தேறாத சிப்ஸ் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கின்றார்கள்.

மஞ்சள்,பால் சந்தனம் சேர்த்த கிரீம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றார்கள், மஞ்சள்,பால், சந்தனம் சேர்த்தா பத்து ரூபாய் கூட வராது! தெரிந்தே ஏமாறுகின்றோம்...

tech news in tamil said...

மிக அவசியமான பதிவு.

தருமி said...

ஆனாலும் இந்த விளம்பரக்காரர்களின் புத்தி ... அடடே ஆச்சரியப்பட/எரிச்சல் பட வைக்குது. சாக்லேட்டை வழிச்சி நக்கும் போது வருவது எரிச்சல்னா, அந்த வயசான கிழவர் ஒரு போன் (எந்த போன் அப்டின்னு ஞாபகமில்லை!!) விளம்பரத்தில வருவாரே .. I simply love him.

ரசிக்கக் கூடிய விளம்பரங்களை எடுப்பது .. எம்புட்டு புத்தி வேணும்.

Paleo God said...

அந்த வயசான கிழவர் ஒரு போன் (எந்த போன் அப்டின்னு ஞாபகமில்லை!!) விளம்பரத்தில வருவாரே .. I simply love him.///

தருமி சார் அது வொடாபோன். எனக்கும் அது மிகவும் பிடிக்கும். என்னா எக்ஸ்ப்ரஷன்... ஆனா இத ஏமாத்தறதுக்கு யூஸ் பண்றதுதான் கொடுமை. இதுல இருக்கற நேர்த்திய சர்வீஸ்ல தரலாம்.

ரவி சேவியர் said...

//தொலைக்காட்சியில் படங்களைப் பார்ப்பதை விட இடையில் வரும் விளம்பரங்களை பார்க்கவே விரும்புகின்றேன். ஆமாம் ரசிக்க மட்டுமே விரும்புகின்றேன். மிக குறுகிய நேரத்தில் சொல்லப்படும் அந்த விசயத்தை யோசித்தவர்களை பாராட்டத் தோன்றும்.//

//பார்பதற்கு அழகாய் இருக்கும் பல விசயங்களை பார்த்துக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அருகே சென்றால் அணுகுண்டு கணக்காய் நம் பையில் உள்ள பணத்தை காணாமல் போக்கி விடும்.//

சரியா சொன்னீங்க நேதாஜீ சார், எனக்கும் டிவி-யில வற்ற விளம்பரங்கள் இரசித்துப் பார்ப்பேன் அத்தோட நிருத்திக்காம எங்க வீட்டுக்காரம்மாகிட்டயும், குழந்தைகள்கிட்டயும், எப்படியெல்லாம் நம்ம மூளை சலவை பன்றாங்கன்னு சொல்வேன் (இல்லன்னா இத வாங்கு அத வாங்குனு நம்மள வாங்கிடுவாங்க இல்ல அதனாலதான்)

ஜோதிஜி said...

ரவி என் பெயர் ஜோதிஜி. ஏற்கனவே நீங்கள் இதே நேதாஜி என்ற பெயரைத்தான் பயன்படுத்தி இருந்தீக.

தருமி

ஷங்கர் இவர் சொல்வது எந்த விளம்பரம் என்று எனக்குத் தெரியவில்லையே?

Jayadev Das said...

\\பெப்ஸியில் போட்ட இரும்பே கரையும் போது நம்ம குடல் என்னவாகும்?\\ நீங்க போட்டுப் பார்த்தீங்களா? அது கரைந்சுதா?

ஜோதிஜி said...

முகநூலில் இது குறித்த ஒரு காணொலி காட்சியை போட்டுள்ளேன்.

Jayadev Das said...

அப்படியே லிங்கையும் குடுக்கிறது............!! Link Please Jothiji...............