Friday, December 18, 2009

அரசியல் ஞானி

ஆசையை வெறுத்து அடையப் பெற்றது புத்த ஞானம்.  ஆனால் அழிவை கண் எதிரே கண்டு ரசித்து ருசித்து தொடர்ந்து கொண்டுருந்தவர் அரசியல் ஞானி ஜெயவர்த்னே. ஒரு பக்கம் மலையகத் தமிழர்களின் தலைவர் தொண்டைமான்.  அவருக்கு அமைச்சர் பதவி.  அவருடன் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவி.

இது போக தன்னுடைய கட்சி சிஷ்ய கோடிகளான சிங்கள இனவாதிகளான அதுலத் முதலி, சிறீல் மாத்யூ போன்றவர்கள்.  மறைமுக ஆட்சியாளர்களான புத்த பிக்குகள்.  இது போக தன்னுடைய பதவிக்கான அபிலாஷைகள் என்று நான்கு பக்கமும் சுழன்று சூறாவாளியாய் செயல்பட்டுக்கொண்டுருந்தார்.

சிரிக்காத முக லட்சணம் இருப்பவர்கள் அத்தனை பேர்களும் சிந்தனைகள் அதிகம் பெற்றவர்கள் போல் அவருடைய ஒவ்வொரு நிகழ்வுகளும் தமிழர்களுக்கு ஓராயிரம் இடியாய் இறங்கிக்கொண்டுருந்தது.  இத்தனைக்கும் தொண்டைமான், அமிர்தலிங்கம் அரசில் இருந்தனர்.
1977 ஆம் ஆண்டு நடந்த கலவரங்களில் மொத்தத்தையும் இழந்து கொழும்பு அகதிகள் முகாமில் இருந்த மலையகத் தமிழர்களை அவர்களுடைய பழைய வாழ்விடங்களுக்கு அழைத்து வந்து அப்போது தொண்டைமான் சொன்ன வாசகம். " இனி எப்போதும் பூர்வகுடி தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள்".  அதற்கான காரணம் அவருக்கு மட்டும் தெரிந்த ரகஸ்யம்.  ஆனால் கேள்விகள் ஏதுமின்றி அவர்களும் எம்.ஜி.ஆர் போல் அவரை நம்பிக்கொண்டுருந்த காலம்.

" உங்களுக்கு இனி விடிவு காலம் வந்துவிட்டது.  தேர்தல் மூலம் ஜெயவர்த்னே நமக்கு நல்லது செய்யப்போகிறார்" என்றதும் ஐயா சொல்லிவிட்டார் என்று குத்து குத்தென்று குத்த அவரும் அமைச்சராக அலங்கார பதவியில் அமர்ந்தும் விட்டார். 1981 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் மொத்த மலையகத் தமிழர்களையும் குறிவைத்து ஜெயவர்த்னே குண்டர் படை தாக்க அப்போது இரத்தினபுரியில் உள்ள காவந்தை என்ற பகுதியில் ஒரே அறையில் 12 பேர்களை வைத்து பூட்டி எறியூட்டப்பட்ட போது தொண்டைமான் வந்து பார்ப்பதற்கு அவருடைய "பனிச்சுமை" இடம் கொடுக்கவில்லை.

ஆனால் ஜெயவர்த்னே நன்றி மறக்காதவர்.  அப்போது நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்குரிமை என்பது சிங்களர்களுக்கு மட்டும் தான் என்று முகத்தில் அப்பிய கரியை துடைத்துக்கொண்டு தொண்டைமான் அமைதி காத்தார்.  அப்போது ஜெயவர்த்னே சிஷ்யர் காமினி திசநாயகா சொன்ன வாசகம் " நாயில் ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்டுருப்பவர் தொண்டைமான்.  அவர் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டிய அவஸ்யம் இல்லை",

ஆனால் மலையகத்தமிழர்களின் வாழ்வுரிமையை முற்றாக பறித்த ஜெயவர்த்னே குறித்து ஏதும் பேசாமல் மௌனம் காத்த தொண்டைமானை மீறி அப்போது போட்டியிட்ட சிங்கள வேட்பாளர்கள் தோல்வி அடையும் அளவிற்கு மொத்த மலையகத் தமிழர்களும் தங்களுடைய விழிப்புணர்ச்சியை வெளிப்படுத்தினர்.  அப்போது இருந்த 14 மலையக சங்கங்களும் தங்களை காத்துக்கொள்வதில் மட்டும் உறுதியாய் இருந்தனர்.  இதைவிட சிறப்பாக உலக வங்கியிடம் கடன் வாங்கி நட்சா திட்டம் மூலம் மலையக மக்கள் வாழ்ந்த இடங்களையும் தாரை வார்ப்பதும் கண ஜோராக நடந்து கொண்டுருந்தது.

மொத்தமாக அப்போது போராடிக்கொண்டுருந்த ஊதிய உயர்வு மலையகத் தமிழர்களைத் தவிர மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார் ஜெயவர்த்னே. மறுபக்கம் சிங்கள குடியேற்றம்.  தொண்டைமான் தலைவராக ஜெயவர்த்னே தீர்க்கதரிசியாய் ஒவ்வொன்றையும் அவரை வைத்துக்கொண்டே பேச முடியாத அளவிற்கு மிக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுருந்தார்.

மற்றொரு புறம் அமிர்தலிங்கம்.  நடந்து கொண்டுருந்த இனவெறி தாக்குதல்களை நிறுத்தும் பொருட்டு ஊர்க்காவல் படை அமைக்க வேண்டும் என்று ஜெயவர்த்னேவிடம் விண்ணப்பம் கொடுத்தார். அவரும் சிறப்பாக செய்தார்.  சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டும். இத்துடன் ஜெயவர்த்னே செய்த மற்றொரு சிறப்பு, நடக்கும் கலவரங்களில் கொல்லப்படுபவர்கள் நீதி விசாரணை கோர முடியாது.  உறவினர்கள் பிணங்களை பார்க்கக்கூட முடியாது.  தொடங்கியது முதல் மூடும் வரைக்கும் ஊர்காவல் படையினர் தங்கள் கடமையில் கண்ணும் கருத்தாய் இருப்பார்கள் என்றார். பிரபாகரன் எப்படி தன்னுடைய கொள்கை சரி என்று நகர்ந்து வந்தாரோ அதே போல் தொடக்கம் முதல் ஜெயவர்த்னேவும்.

சிங்கள தமிழர்கள் மனக்கசப்பு உருவாகாத (1944) காலத்தில் சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்று தீர்மானத்தை கொண்டு வந்தவர்.

ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) ஆண்டு விழாக் கூட்டத்தில் (1955) சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற தீர்மானத்தை முதன்மையாக முன்மொழிந்தவர்.

பண்டாரா நாயகா (1957) தமிழர்களுக்கு ஓரளவிற்கேனும் உரிமைகள் கொடுக்கலாம் என்று முன்வந்த போது (பண்டா செல்வா ஒப்பந்தம்) இது சிங்களர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் உதை என்று குண்டர்கள் புடை சூழ கண்டி நோக்கி பாத யாத்திரை நடத்தியவர்.

ஆட்சிக்கு வந்ததும் (1977) " சண்டை என்றால் சண்டை. சமாதானம் என்றால் சமாதானம்" புதிய அறைகூவல் விடுத்து சிங்களர்களுக்கு சிக்னல் காட்டியவர்.

பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தங்கள் கட்சியின் உறுப்பினர்களுக்கு பச்சைக்கொடி காட்டியதோடு மட்டுமல்லாமல் அப்போது நடந்த சிங்கள தமிழ் இன துவேச வாக்குவாதத்தை (1981) பல முறை வானொலியில் ஒலி பரப்பி சிங்களர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து திடீர் என்று கலவரத்தை ஏற்படுத்தியவர்.

"குமார் பொன்னம்பலம் தவிர அத்தனை பேர்களும் தமிழீழம் என்ற கொள்கையை கைவிட்டு விட்டனர்"  என்று திடீர் என்று ஒரு புதிய தத்துவம் சொன்னவர்.  கேட்ட சிங்களர்கள் குமார் பொன்னம்பலம் வீட்டை தாக்குவதற்கு பச்சைக்கொடி காட்டியவர்.

" 1975 ஆம் ஆண்டு முதல் 37 காவல் துறையினர்,9 அரசியல்வாதிகள், 13 இராணுவத்தினர்களை தமிழ் பயங்கரவாதிகள் கொன்றுவிட்டனர்.  ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் நீங்கள் கொன்ற தமிழ் தீவிரவாதிகள் எண்ணிக்கை மிக சொற்பம் "

என்று 10. 6, 1983 அன்று வெளிநாட்டு பயணத்துக்கு முன் ஆயுதப்படையினர் முன்னால் உரையாற்றிய வாசகம் மேலே சொன்னது.  அது மட்டுமல்லாமல் " இனி தமிழ் தீவிரவாதிகளை அழிக்க தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவ ஆட்சியை செயல்படுத்தி அவர்களை முழுமையாக அழிக்கும் வரைக்கும் எனக்கு வேறு வேலை எதுவும் இல்லை" என்று அப்போது உருவான கலவரத்திற்கு அடிகோலியவர். இவ்வாறு சொன்னது லண்டன் டெலிகிராப் பத்திரிக்கைக்கு (1983) கொடுத்த பேட்டி.  பயந்த நிருபர் பின்வாங்கியதாக செய்தி.

"கடமையை மட்டும் செய்ய வேண்டும்.  பேச்சு கூடாது.  பலன் வரும்" என்பது பிரபாகரன் வாதம்.

"பேச, ஏன் நீ வாழவும் கூடாது.  மீறப்படும் போது மிதிக்கப்படுவது மட்டுமன்றி நசுக்கப்படுவீர்கள் " என்பது ஜெயவர்த்னே பிரதிவாதம்.  ஆனால் மொத்தமாய் "முடக்குவாதமாய் போனது தமிழர்களின் வாழ்க்கை. அன்று வாதத்தால் பாதிக்கப்பட்ட உடம்பு உறுப்புகளை இறுதி முள்ளிவாய்க்காலில் இராசாயன குண்டுகளில் வந்து நிறுத்தியுள்ளது.
 இப்போது பிரபாகரன் வயது 27ஆனால் ஜெயவர்த்னேவின் அரசியல் அனுபவம் மட்டும் இந்த எண்ணிக்கையை விட அதிகம்.  ஆண்ட சிங்கள தலைவர்களில் இவர் எப்படி வித்யாசமாக இருந்தாரோ அதே போல் தராசு இரண்டு பக்கமும் ஒரே மாதிரி நின்று முள் நேராக நின்றது விதி அல்லது ஆச்சரியம்.  ஜெயவர்த்னேவுடன் நேருக்கு நேர் போட்டியில் மல்லுக்கு நின்ற பிரபாகரன் ஆளுமை குறிப்பிடத்தக்கது.

"வாங்கப்பா உட்கார்ந்து பேசலாம்" என்று ஆட்சியாளர்களும் அன்று அழைக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை. உட்கார்ந்து பேச தயராய் இருந்த அஹிம்சைவாதிகளையும் மதிப்பாரும் இல்லை.  தீர்வும் கிடைத்தபாடில்லை.  தீர்க்கதரிசனத்தை உருவாக்குகிறோம் என்றவர்களும் இன்று வரையிலும் புதிராகத்தான் இருக்கிறார்கள்?

No comments: