Thursday, December 03, 2009

ஈழ கோரங்கள் 25

பாரிஸில் ( Paris Peace Treaty) 1919 உலக நாடுகள் மொத்தமும் உருவாக்கியதன் சாரம்சம், குடியேறிய நாட்டில் "நிலையாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை " (Nationality) வழங்கப்படவேண்டும்.

1948ல் உருவான "அனைத்துலக மனித உரிமைகள் வாக்குறுதி " (Universal Declaration of Human Rights)  என மொத்த உலக சட்டங்களை  வெறும் காகிதம் போல் கருதிக்கொண்டு காலில் போட்டு மிதித்து இலங்கையை பசுமையாக மாற்ற உதவிய தமிழர்களை நாட்டைவிட்டு துரத்தும் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள்.
ஒவ்வொரு சிங்கள தலைவர்களும் ஆட்சிக்கு வரும் போது அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் எப்போதும் போல "தனது கடமையைச் செய்தது".  ஆனால் அவர்களால் "வழங்கப்பட்ட ஆசிகள்" மொத்த தமிழனத்தையும் இருட்டுக்குள் நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் சவக்குழி வரைக்கும் கொண்டு வந்து தள்ளியது.
தொடங்கும் கலவரமும் இயல்பாகவே தொடங்கும்.
சிங்கள காவல் துறை கைங்கர்யத்தை தொடர்வார்கள்.  சிங்கள இளைஞர்கள் இது போன்ற தன்னல தொண்டுக்கு தயாராய் இருப்பார்கள்.  வந்து கலந்து கொள்ளும் புத்த பிக்குகள் மேற்பார்வை செய்வார்கள்.  இறுதியில் இராணுவம் வந்து முடிவுரை எழுதும்.

முடித்து வைக்கும் போது தமிழனத்தின் எண்ணிக்கை குறைவதோடு, தப்பி பிழைத்த தமிழர்களின் மொத்த சொத்துக்களும் சூறையாடப்பட்டுருக்கும்.

இலங்கை தமிழர்களின் "வாழ்வுரிமை பிரச்சனைகள்"  இந்திய ஊடகங்களில் இன்றைய காலகட்டத்தில் சாதாரண துணுக்குச் செய்தி போல் மாற்றம் பெற்றுள்ளது. அத்துடன் கீழே உள்ள துணுக்குச் செய்திகளையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்.   இந்த கலவரங்கள் அத்தனையும் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்னால் நடந்த சுதந்திரம் பெற்ற முதல் 25 வருடத்திற்குள் நடந்த கோரச்சுவடுகள்.

காரணமும் நடந்த காரியங்களும்.

சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மொழி (1956 ஜுன் 5)

வாகனத்தில் ஸ்ரீ என்ற எழுத்தை அனைவரும் எழுத வேண்டும் (1957 ஜனவரி 1)

தமிழர் பகுதியில் எதிர்ப்பை மீறி தபால் தலை வெளியிட்டது (1961 ஏப்ரல் 18)

போராடிக்கொண்டுருந்த மூன்று தமிழ்கட்சிகளும் ஒன்றாகி அன்று வெளியான புதிய அரசமைப்பு சட்ட தினத்தை துக்க நாளாக அறிவித்த நாள்.

சிங்கள தமிழ் மாணவர்களுக்கு என்று இனவாரியாக கல்வி தொடங்கி அத்தனை இடங்களிலும் (Starndardisation) அளவுகோல் தீர்மானம் கொண்டு வந்த போது எதிர்ப்பைக் காட்டிய தினம்..

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் 1974 ஜனவரி 10 அன்று தமிழ்மொழிக்கு என்று கூட்டப்பட்ட யாழ்பாண மாநாடும், அதை நடத்த விடாமல் உருவான கலவரமும்.

எதிர்த்தால், பேசினால், கூடினால் என மொத்தமும் குற்றம்.  காரணம் அன்றைய சாத்வீக போராட்டக்காரர்கள் உருவாக்கி வைத்துருந்த அத்தனை நல்லெண நடவடிக்கைகளும் சிங்கள தலைவர்களின் பார்வையில் " எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா"  என்கிற ரீதியில் இருந்தது.

நடந்த கலவரத்தில் (1958) நிறைமாதமாக இருந்த பெண்ணின் வயிற்றை கிழித்து வெளியே எடுத்த சிசுவை எறியும் நெருப்பில் போட்ட போது சிங்களன் சொன்ன வாசகம்.
"இதுவும் வளர்ந்து நாளை தமிழ் உரிமை கேட்கும்"

ஸ்ரீ என்ற எழுத்தை வாகனத்தில் எழுதவேண்டும் என்பதை எதிர்த்த தமிழர்களை ஒழிக்க தொடங்கிய கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி கொள்ளை அடித்ததோடு, ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்ததோடு மட்டும் விட்டுவிடவில்லை.  பழக்கக் காய்ச்சிய இரும்பால் ஸ்ரீ என்ற எழுத்தை அவர்களின் நிர்வாண உடம்பில், மார்பில் எழுதி குற்றுயிரும் குலை உயிருமாக சாகடித்தனர்.
மொத்த தமிழ் குடும்பமும் (களுந்துறை) தப்பிக்கும் எண்ணத்தில் அருகில் உள்ள கிணற்றில் இறங்கி தங்களை காத்துக்கொண்டவர்களை கண்டுபிடித்து மேலேயிருந்து பெட்ரோலை ஊற்றி மேலோகத்திற்கு வழிகாட்டினர்.

செழித்து வளர்ந்து இருந்த கரும்புத்தோட்டத்தை தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள அத்தனை தமிழ் குடும்பங்களையும் மந்தை ஆடுகள் போல் ஒன்றாக அழைத்து வந்து எறியும் நெருப்பில் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே தள்ளி அழித்தனர்.

கோயிலில் (பானந்துறை) இருந்த அர்ச்சகரை உள்ளே வைத்து பூட்டி மொத்தமாக பெட்ரோல் ஊற்றி கோயிலுக்கும் தீ வைத்து மகிழ்ச்சியடைந்தனர்

தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக மொழியாக சிங்களத்தை முன்னிறுத்த முற்பட்ட போது உருவான (தந்தை செல்வா தலைமையில் தொடர் மறியல் அறப்போராட்டம்) கலவரத்தை அடக்க சிங்கள இராணுவம் நடத்திய கோரச் சுவடுகளோடு அப்போது வழங்கி வந்த பொது வழங்கல் அரிசியையும் முழுமையாக நிறுத்தினர்.

திருச்சியில் இருந்து பேராசிரியர் நயினா முகம்மது தலைமையில் (1974) யாழ்பாணத்தில் தமிழ் மொழி மாநாடு தொடங்கியது.  50,000 பேர்கள் கூடியிருந்த மண்டப கூட்டத்தில் திடீர் என்று உள்ளே நுழைந்த சிங்கள காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டின் காரணமாக சம்பவ இடத்தில் 9 பேர்கள் பலி.  தப்பிக்க முயற்சித்த பலர் காயத்துடன், மயக்கமுற்று, எழ முடியாமல் தவித்த அத்தனை பேர்களும் அறவழிப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு போராடிக் கொண்டு இருந்தவர்கள்.

துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக இருந்த சந்திரசேகரா என்ற அதிகாரிக்கு அப்போது பதவியில் இருந்த பண்டாரா நாயகாவால் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

புத்தளம் (1976)  பெரிய பள்ளி வாசலில் தொழுகையில் இருந்த முஸ்லீம்களை திடீர் என்று உள்ளே புகுந்த காவல்துறையினர் 7 பேரை சுட்டுக்கொன்றதோடு அதன் தொடர்ச்சியாக புத்தளத்தில் உருவான கலவரத்தில் சிங்கள பிக்குகள் தூண்டுதலோடு அவர்களின் மொத்த சொத்துகளும் சூறையாடப்பட்டன.

கலவரங்களின் உச்சக்கட்டமாக (1977) மொத்த யாழ்பாணமே பற்றி எறிந்தது.

இந்தக் கலவரங்கள் எல்லாம் சிங்களர்களின் சின்னத்தம்பி செயல்கள்.  ஆனால் பெரியண்ணா போல் பின்னால் வரும் அத்தனை கோரங்களும் நமக்கு உணர்த்தும் செய்தி ?

இந்த கோரங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல.  "சிங்களர்களின் நலன்" என்று சொல்லி ஆட்சிக்கு வந்த சீறீமாவோ ஆட்சியில் "ஜனதா விமுக்தி பெரமுணா" என்ற இடது சாரிக்கட்சியை அடக்கி வழிக்கு கொண்டு வர ஆட்சியாளர்கள் நடத்திய கோரத்தாண்டவங்கள் சிங்கள தலைவர்களின் உண்மையான கோர முகத்தை நமக்கு உணர்த்தும்?

இன்று வரையிலும் ஐக்கிய நாட்டு சபையில் இலங்கை தமிழ் மக்களின் குரல் ஒலிக்காதா?  ஏன் சபையில் அங்கம் வகிக்கும் எவருமே இன்றைய இலங்கையை தீர்மானமாய் கண்டிக்க முன்வருவதில்லை என்று அத்தனை மக்களும் திகில் பார்வை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இந்த ஐ.நா சபையில் அன்றே வித்யாசமான முறையில் ஒரு தமிழர் உள்ளே நுழைந்து இந்த "தமிழீழம்" என்ற வார்த்தையை பதிவு செய்ததோடு தன்னுடைய உரையையும் நிகழ்த்திய அற்புதமும் நடந்தது. அந்த தமிழர்?

4 comments:

ஜோதிஜி said...

இந்த நிமிடம் வரைக்கும் தொடர்ந்து வாசித்துக்கொண்டு வரும் அணைவருக்கும் சில ஆச்சரியங்கள். இது மொத்த நம்பிக்கை என்பது எண்ணங்களாக மாறும் என்பதும், "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும்"

1. இரண்டு வருடங்கள் இருக்கிறது. ஆனால் அதற்குள் இப்போது இலங்கையில் வருகின்ற ஜனவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டாகி விட்டது (?)

2. அறிவிக்கப்பட்ட தேர்தல் மூலம் முள்கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது (?)

3. சரத் பொன்சேகா சாதாரண பயணிகள் செல்லும் வழியாகத்தான் சென்று விமானத்தில் பயணிக்க அனுமதி (?)

4. சரத் பொன்சேகா தங்குவதற்கு அலுவலகத்திற்கு இடம் கொடுக்க,மறுக்கப்பட்ட அனுமதி மூலம் கிடைத்த பாடங்கள் (?)

5. இன்றைய கருணா அவசரம் அவசரமாய் தான் சார்ந்து இருக்கும் உருவாக்கி இருக்கும் கட்சியின் மூலம் தமிழ் மக்கள் ராஜபக்சே கட்சிக்கு ஆதரவு திரட்டல்.

6. பிரணாப் முகர்ஜி இலங்கை பயணம். சரத் பொன்சேகா இந்திய பயணம்.

ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் இருக்கிறாதா?
ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு செய்தி இருக்கிறது.

கதவைத் திறந்து காற்றுடன் வெளிச்சமும் வரப்போகின்றது(?)

2010 மார்ச் மாதம் முடியும் போது சில "முடிவுகள்" நமக்கு " சில விசயங்களை " உணர்த்தும் (?)

Unknown said...

மிக அற்புதமான பதிவு ... எனது வேண்டுகோள் எல்லாம் இது போல சுருக்கமாக ஈழத்தின் வரலாறை தரும் படி கேட்டுகொள்கிறேன். ஏன் என்றால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு அங்கே என்ன நடந்தது, நடக்கிறது என்பதே தெரிவதில்லை. கோப்பு வடிவில் (pdf) வடிவில் குடுத்தால் சால சிறந்தது ... தொடர்க உமது பணி...

ஜோதிஜி said...

நன்றி நண்பரே. வணிக நோக்கமில்லாமல் மொத்த தொடர் முடிந்த பிறகு இது குறித்து இந்த கருத்துக்கள் மொத்த மக்களுக்கும் குறிப்பாக ஈழ மக்களுக்கு சென்று அடைய என்னால் ஆன முயற்சிகளை எடுப்பேன்.

லெமூரியன்... said...

\\ 2010 மார்ச் மாதம் முடியும் போது சில "முடிவுகள்" நமக்கு " சில விசயங்களை " உணர்த்தும் (?).......//
உங்கள் எதிர்பார்ப்பே எங்களினுதும்.......அம்மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்தால் ,அதுவே பெரிய வெற்றிதான்...!