Sunday, November 29, 2009

காந்தியின் பெயர் மனச்சாந்தி

ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கம் முதல் உருவான சுதந்திர போராட்டங்களும், நாட்டிற்குள் சிறுபான்மையான வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் தங்களுடைய  அடிப்படை வாழ்வுரிமை பாதிக்கப்படும் போது உருவானது தான் இனப்போராட்டங்கள்.

இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஒரு தனி மனிதனால் பாறையில் சிக்கிய விதை வெடித்து கிளம்புவது போல் உருவாவது  துளிர் இலை. அது காலப்போக்கில் தான் வெளிச்சத்தை வந்து எட்டிப் பார்க்கின்றது.

காலப்போக்கில் தான் அதன் வளர்ச்சியானது, கொண்டு எடுத்துச் செல்லப்படும் அறிவு சார்ந்த விசயங்களால் மக்கள் பார்வைக்கு படுகின்றது.  மக்கள் ஆதரவும் கிடைக்கின்றது.

இது வரையிலும் பார்த்த இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வுரிமை போராட்டங்களில் சிங்கள தலைவர்களின் சூழ்ச்சி நிறைந்த முன்னேற்பாடுகளையும், தமிழ் தலைவர்களின் சாத்வீக போராட்டத்தின் மூலம் நடந்த அத்தனை நிகழ்வுகளை பார்த்துக்கொண்டு வந்தோம்.  ஆனால் இலங்கையில் அன்று இரண்டு பிரிவுகளாக வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடி, இந்திய தமிழர்களையும் ஒரே ஒரு நிகழ்ச்சி மொத்தமாக இணையும் சூழ்நிலையையும் உருவாக்கித் தந்தது என்றால் மிகையில்லை.

அன்று தான் மொத்த இலங்கை தமிழர்களின் விடுதலை வேட்கையும், வாழ்வுரிமை போராட்டத்திற்கான உண்மையான பாதையும் புலப்பட்டது.  அதன் பிறகு தான் மொத்த இலங்கை அரசாங்கமும் ஸ்தம்பித்தது.

இதுவரையிலும் தந்திரமாய் நகர்த்திக் கொண்டு வந்த தமிழர்களை இனி எந்திரமாய் நீண்ட நாட்களாக வைத்து இருக்க முடியாது என்று அவர்கள் உணரத் தொடங்கினர்.
மேல்தட்டு வர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டு பண்டார நாயகாவின் மனைவி சிறீமாவோ பண்டாரா நாயகா தந்தை செல்வாவின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் அவர் உருவாக்கிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு தமிழர்களையும் ஒரே அணியில் சேர்க்க உதவியது என்றால் அது மிகையில்லை.

அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த டட்லி சேனநாயகா (ஐக்கிய தேசிய கட்சி), ஜெயவர்த்தனே, சீறீல் மாத்யூ போன்றவர்கள் செல்வா பண்டாரா நாயகா ஓப்பந்தமான  மண்டல தன்னாட்சி என்பதை அனுமதிக்கவே முடியாது என்று பிடிவாதமாக இருந்தனர்.

ஆனால் சீறிமாவோ பண்டாரா நாயகா தந்தை செல்வாவுக்கு தொடக்கத்தில் கொடுத்த வாக்குறிதியை கவனமாக மறந்ததோடு மட்டுமல்லாமல், தன் கணவர் உருவாக்கி இருந்த சிங்களமே ஆட்சி மொழி என்பதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர்.

சிங்கள மொழி மட்டுமே இலங்கை நீதிமன்றங்கள் அனைத்தும் வழக்கு மொழியாக இருக்கும்.

அவருடைய மற்றொரு தீர்க்கதரிசன பார்வை.  தமிழர்கள் வாழ்ந்து கொண்டுருந்த வடக்கு கிழக்கு மகாணங்கள் அத்தனை நீதிமன்றங்களிலும் இதை செயல்படுத்த மொத்த அதிகாரவர்க்கத்தை அனுப்பி பார்வையிடச் செய்தார்.

இவருடைய ஆட்சியில் நடந்த தோட்டத் தொழிலாளர்களை நாடு கடத்திய சீறீமாவோ சாஸ்திரி ஒப்பந்தங்கள் பற்றி பின்னால் வரும் தொடரில் முழுமையாக பார்க்கலாம்.

சீறீமாவோவின் செயல்பாடுகளை எதிர்த்து, 1961 ஆம் ஆண்டு நாடு தழுவிய சத்யாகிரகப் போராட்டத்தை தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி தொடங்க மொத்த தமிழினமும் ஒன்று சேர்ந்தது.  பூர்வகுடி, இந்திய தமிழர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அணைவரும் ஒரே அணியில் திரண்டனர்.  மொத்த தமிழர்களுக்கும் அன்று தேசிய இன உரிமை வேட்கையை விழிப்புறச் செய்தது.  கொழுந்து விட்டு எறிந்த போராட்டங்கள் இலங்கையை மொத்த இலங்கையையும் கலக்கமுறச் செய்தது..

இதன் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கம் ஆட்டம் காணும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது.

1961 ஏப்ரல் 14ம் நாள் தமிழ் ஈழம் பகுதிக்கு என்று தனியான அஞ்சல் தலைகள் வெளியீடும், தனி அஞ்சல் துறைப் பணியும் தொடங்கியது.  மூன்று மாதங்கள் நடந்த அறப்போராட்டத்தின் இறுதியில் மொத்த இலங்கையில் இருந்து தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகள் தனியாக இயங்கத் தொடங்கும் அளவிற்கு மாற்றம் பெறத் தொடங்கின.

இறுதியில் (1961 ஏப்ரல் 18) அன்று நடந்த மறியல் போராட்டத்தை அடக்குகிறோம் என்ற தொடங்கிய சிங்கள இனவெறிக்கூட்டம் கையில் சிக்கிய மொத்த தமிழனமும் குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் குதறி எறியப்பட்டனர்.

சிறீமாவோ பண்டாரா நாயகா ஆட்சி கலைக்கப்பட்டு வந்த ஐக்கிய தேசிய கட்சி. ஆட்சி அமைத்தவர் சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகா.  அப்போது அந்த அரசாங்கத்தில் மிஸ்டர் இரண்டு ஜெயவர்த்தனே.  ஆனால் இந்த ஆட்சி அமைய தாங்கிப் பிடித்தவர்கள் தந்தை செல்வாவின் குடியரசுக்கட்சி.  கூட்டணி புரிந்துணர்வு உருவாக்கும் போது பிரதேச மகாண உரிமை தரப்படும் என்பதன் அடிப்படையில்.  ஆனால் கட்சியில் உள்ள திருச்செல்வம் அமைச்சர் பதவியில் அமர்ந்து இருந்த போதிலும் மாவட்ட சபை மசோதவை பாராளுமன்றத்தில் கொண்டு வரவே முடியாது என்று டட்லி சேனநாயகா அந்தர் பல்டி அடித்து விட்டார்.

அப்போது தான் தமிழ் தலைவர்களின் மனதில் வேறு ஒரு சிந்தனை உருவானது.  ஆமாம் இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு.
நாம் அணைவரும் தனித்தனியாக இயங்கிக்கொண்டு இருப்பதால் ஆட்சிக்கு வரும் அத்தனை சிங்கள தலைவர்களும் நம்மை கருவேப்பிலையாக பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்து விடுகிறார்கள். நாம் அணைவரும் ஒரே அணியில் இயங்க வேண்டும் என்று உருவானது தான் (14  மே 1972) தமிழர் விடுதலைக் கூட்டணி

தந்தை செல்வாவை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி
ஜீஜீ பொன்னம்பலத்தை தலைவராகக் கொண்டுள்ள இலங்கைத் தமிழர் காங்கிரஸ் கட்சி
தொண்டைமான் அவர்களை தலைவராகக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி.

"தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை  வழங்கப்படாவிட்டால் மொத்த தமிழர்களின் விடுதலை மீட்டு எடுப்போம்"   மொத்த தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து அறப்போராட்டத்தை தேர்ந்தெடுத்தனர்.

இவர்கள் மொத்தமாக கொடுத்த ஆறு அம்ச கோரிக்கைகளையும் சிங்கள அரசாங்கம் தூக்கி குப்பைக்கூடையில் போட்டது.  தந்தை செல்வா தான் வகித்து வந்த காங்கேசன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து விட்டு சிங்கள தலைவர்களை எதிர் எதிராக தேர்தலில் நிற்க அழைத்தார்.  மூன்று வருடங்களாக தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த அரசாங்கம் 1975 ஜனவரி அன்று நடத்திய தேர்தலில் மீண்டும் வெற்றிகரமாக தந்தை செல்வா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த தேர்தல் முடிவை இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிக்கையின் கிழக்கு ஆசிய பகுதி செய்தியாளர் திரு. வால்டர்  சுவார்ச் (Walter Swarz) பினவருமாறு குறிப்பிட்டார்.

"காங்கேசன் துறை இடைத்தேர்தலில் திரு. NJV செல்வநாயகம் பெற்ற மாபெரும் வெற்றி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய கொள்கையான தனிநாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகவே இலங்கை முழுவதும் கருதப்படுகிறது".

தேர்தல் முடிவுக்குப் பிறகு தந்தை செல்வா உரையாற்றிய வாசகம்.

"என் மக்களுக்கும் நாட்டுக்கும் அறிவித்துக்கொள்வது இது தான்.  தமிழ் மக்களுக்கு முன்பே உரிமை உள்ளதாக இருந்த ஆட்சி இது.  இப்போது மீண்டும் அதன் இறையாண்மையை மீட்டு எடுத்து செயல்படுத்த வேண்டும்.  மொத்த தமிழர்களின் விடுதலையைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் வெற்றி நமக்கு உணர்த்தி உள்ளது.  இதையே நான் கட்டளையாக கருதுகிறேன்.  அதை நாம் செயல்படுத்திக்காட்டுவோம் என்று உறுதி மொழி ஏற்போம்"

அறவழிப்போராட்டத்தை, காந்திய கொள்கைகளை வைத்துக்கொண்டு போராடிய தமிழர்களின் தந்தையான செல்வா அவர்கள் இறுதியில் தமிழர்களுக்கு "தமிழீழம்" என்பது தான் இறுதி தீர்வாக இருக்க முடியும் என்பதை ஆணித்தரமாக கூறி சொற்பொழிவை நிறைவு செய்தார்.

தாங்கள் பெற்ற அவமானகரமான, அதிர்ச்சிகரமான , அசிங்கமான  போராட்டங்கள் அத்தனையும் பின்னடைவில் கொண்டு வந்து நிறுத்திய போது உணர்ந்து சொன்ன வார்த்தைகள் இது.

இப்போது 1972 என்ற காலகட்டத்தில் நின்று கொண்டு இருக்கிறோம். அன்றைய இளைஞர்கள் ஆயுத மொழி ஒன்று மட்டுமே இந்த சிங்கள அரசாங்கத்திற்கு புரியும் என்ற நோக்கில் இந்த காலகட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முன்னேற்பாடுகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைகள் சரியா தவறா என்பதை பார்ப்பதற்கு முன்னால் 1972 வரைக்கும் நாம் இது வரைக்கும் பார்த்து வந்தது, மொத்த இலங்கை தலைவர்கள், ஆட்சி மாற்றங்கள் மட்டுமே.

ஆனால் இலங்கை சுதந்திரம் அடைந்து கடந்து போன 25 வருடங்களில் மொத்த தமிழர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடந்தது என்பதை அடுத்த பாகத்தில் பார்த்த பிறகு தான் உமா மககேஸ்வரன், பிரபாகரன் தொடங்கிய ஆயுத மொழிக்குள் போக முடியும்.

காரணம் அந்த மொழி சரியா? தவறா? என்பதை நாம் உணர வேண்டுமானால் அடிப்படை அடுத்தட்டு தமிழ் மக்களின் சூறையாடப்பட்ட வாழ்வாதாரங்கள் பற்றிய புரிந்துணர்வு நமக்கு வேண்டும்.  அதன் மூலம் தான் அன்று மொத்த தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை காந்திய வழியில் சென்று போராடிக்கொண்டுருந்த அத்தனை தமிழ தலைவர்களைப் பற்றியும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

சாதக பாதகங்களை நாமே தரம் பாரக்க முடியும்.

(மூன்றாம் பாகம் முடிவு)

No comments: