Tuesday, February 14, 2017

குழந்தைகளே அப்பாவாகி


திருப்பூர் “தேவியர் இல்லம்” என்கிற வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவந்த திரு ஜோதிஜி என்கிற ஜோதி கணேசன் இணையத்தின் மூலம் மனதை தொட்ட ஒரு நல்ல நண்பர் . பிறரின் எழுத்துக்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதில் அற்புதமான நண்பர் அவர். ஜோதி என்ற பெயருக்கேற்றவாறு தன் எழுத்துகளின் மூலம் பிரகாசிப்பவர் மட்டுமல்ல தன் கருத்துகளால் மற்றவர்களின் சிந்தனையில் வெளிச்சத்தை ஏற்படுத்துபவர்.. 

கத்தியைத் தீட்டாதே உன் புத்தியை தீட்டு என்பார்கள் ஆனால் இந்த அவசர உலகில் புத்தியை தீட்டதெரியாதவர்கள் பலர், அப்படிப்பட்டவர்களின் மழுங்கிய புத்தியை தன் சிந்தனை மற்றும் கருத்துளால் தீட்ட உதவுகிறார் . 

வலைத்தளம் மூலம் இணையமக்களால் அறியப்பட்ட இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார் அதில் புத்தக வடிவில் வந்த டாலர் நகரம் விகடனில் புத்தக விமர்சனமாக வந்து சிறப்பான பெற்றதுமட்டுமல்லாமல் சிறப்பான பத்துப் புத்தங்களில் இதுவும் ஒன்று என்று நிலையைப் பெற்றுள்ளது.. 

மின் நூலில் மிக அதிக அளவு தரவிறக்கம் செய்யப்பட்ட நூலில் இவரது நூலும் ஒன்று என்பதே இவரின் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் எனலாம். 

இணையத்தில் நல்லவைகளை எழுதுகின்றோம் என்றுக் குப்பைகளை எழுதி குவித்துக் கொண்டிருக்கும் வேளையில் நன்றாக எழுதிப் பதிவிட்டு அதற்குப் பழைய குப்பைகள் எனப் பெயர் வைத்திருக்கிறார் ஜோதிஜி. பழைய குப்பைகள் என்ற பெயரில் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்து இருக்கும் இந்நூலில் இவர் சொல்லும் கருத்துக்கள் மிகத் தெளிவாக எளிமையான சொற்களில் தர்க்க முறைக்கு மாறுபடாது தன் சொந்த வாழ்க்கை அனுபவத்துடன் பல உதாரணங்களோடு , படிப்பவர் உள்ளத்தில் ஊடுருவி அவர்கள் உணரும்படி இவர் எழுத்து அமைந்திருக்கிறது. 

பல்வேறு நிகழ்வுகளில் கூர்மையான பார்வைகளையும் கருத்துக்களையும் வைக்கும் நேர்மையாக வைக்கும் ஜோதிஜி அவர்களின் பல பதிவுகளில் பெரும்பாலான இத்தன்மைகள் வெளிப்படுமாறு இத்தொகுப்பு நூல் அமைந்திருக்கிறது.

படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் சிறு உணர்வையாவது ஏற்படுத்த வேண்டும் அந்த வகையில் இந்தக் கட்டுரை தொகுப்பில் எல்லாக் கட்டுரைகளும் மனதை வருடி நமது நினைவுகளைக் கிளறிவிட்டு சிந்திக்க வைக்கிறது .

விரோதிபோலப் பார்த்த அப்பாவைப் புரிந்து கொள்ள வைத்து, அவரின் மீதான மரியாதை பிம்பத்தை ஏற்படுத்தியது குழந்தைகளின் காலடித்தடம் என்று சொல்லி செல்லும் இவரின் வரிகள் .அப்பாவைப் புரிந்து கொள்ளத் தான் அப்பாவாக மாறிய பிறகுதான் புரிந்து கொள்ள முடிகிறது என்று சொல்லி செல்வது மிக உண்மையாகவே இருக்கிறது. குழந்தைகளே அப்பாவாகிப் பல வாழ்க்கை பாடங்களை இவருக்குக் கற்று தந்து கொண்டிருக்கிறார்கள் இவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிள்ளைகள்தான் உண்மையான பாடங்களைக் கற்றுத் தருகிறார்கள்.

சாதரண மனிதர்களியில்ருந்து சாதனைப் புரிந்துவர்களிடம் கேட்டால் தங்கள் சாதனைக்கு அம்மாகாரணமெனச் சொல்லும் அவர்கள் அந்தச் சாதனைக்கு விதையாகிய அப்பாக்கள் பற்றிச் சொல்லுவதில்லை என்று சொல்லுகிற போது மனதில் சுறுக்கென ஏதோ ஒன்றிக் குத்துவது போலத்தான் இருக்கிறது .
ஜோதிஜியின் கட்டுரைகள் தலைமுறை இடைவெளிகளால் சிக்கி கிடக்கும் குடும்ப உறவுகள், சாதி மத அரசியல் மற்றும் பண்பாட்டு மதிப்பீடுகளை எடுத்துரைக்கின்றன,

கடுமையான நடையோ, அலங்கார நடையோ, செயற்கையான மொழிநடையோ இல்லாமல் எளிய நடையில் அழகாகவும் இனிமையாகவும் இந்தக் கட்டுரை தொகுப்பு வந்திருக்கிறது, 

இந்தப் புத்தகத்தைப் படித்து என் மனதில் எழுவதை இங்கே சொல்லிவிட்டேன். நிச்சயம் இதைப் படிக்கும் பலரின் மனதில் சிந்தனைகள் கிளறப்படும் என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.

வாழ்க வளமுடன் 
அன்புடன் 
மதுரைத்தமிழன் ( http://avargal-unmaigal.blogspot.com/ )
U.S.A.



6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வாழ்த்துகள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மதுரைத்தமிழனின் அழகான விமர்சனம் கண்டேன். பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல விமர்சனம் மதுரைத் தமிழன்/சகோ! பாராட்டுகள்! வாழ்த்துகள்!

Rathnavel Natarajan said...

அருமை. வாழ்த்துகள்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி! தரயிறக்கம் செய்கின்றேன் மின்நூலை!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா