Wednesday, February 08, 2017

இங்கே புனிதம் என்று ஏதுமில்லை.


நாற்பது வயது வரைக்கும் வாழ்க்கையை வாழ்கிறோம். அதன் பிறகு வாழ்ந்த அந்த வாழ்க்கையை அசைபோட்டபடி மீதமிருக்கும் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறோம் என்கிற தொனியே ஜோதியின் அனுபவப்பயணம் சொல்லிச்சொல்கிறது. தன் எழுத்துப் பயணத்தை ஆரம்பப்புள்ளியாய்க் கொண்டு ஆரம்பிக்கிறது கட்டுரையின் பயணம்.

அங்கிருந்து வாசிப்பு, எழுத்துவழி வாழ்வனுபவத்தைப் பின்னோக்கிப் பார்த்து நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்குமாய் இயங்குவிதிகளோடு பொருத்திப்பாக்கிறது. வாசிப்பில், அன்றாட நிகழ்வுகளின் நிகழும் தன்மைகளில் அவர் மனதின் கேள்விகள் சமூக, சுயவிசாரணையாய், அரசியல், ஆன்மீகச் சிந்தனையாய் சிக்கலான முடிச்சுகளை அவிழ்த்துப்போட்டு மனம் நிர்வாணமாய் நிற்க முனையும் முனைப்பு அங்கலாய்க்கிறது.

துன்பங்களின் நடுவே நிர்க்கதிக்கும், அலைபோல அலையும் சிந்தனைகளின் நிதர்சனங்களுக்கும் நடுவே ஊடாடும் மனம் துடுப்பிழந்த படகு போன்றது. துயரங்கள் தொடர்வதில்லை. அனுபவங்களும் முடிவதில்லை. அவை ஒருவரை அனுபூதியாக்குகிறது. உழைப்பு, விடாமுயற்சி, வாசிப்பு, விவேகம் கஷ்டங்கள், விமர்சனங்கள் தாண்டி எல்லாக்கோணங்களிலும் யோசிக்கும், ஆராயும் பண்பு ஜோதியிடம் உள்ளதாய் நான் நினைப்பது. ஜோதிஜிக்கும் எனக்குமான அரசியல் கருத்துமுரண்பாடுகள் பெரும்பாலும் ஈழப்போராட்டம் சார்ந்தவை. அதுகுறிதான பேச்சில் சொல்லிக்கொண்டது,

போர்வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கற்றுக்கொண்டது என் அனுபவப் புரிதல். இரண்டாந்தரத் தரவுகளான வாசிப்பின் வழி பெற்றுக்கொண்ட வாசிப்பு அனுபவம் ஜோதியின் எழுத்து. இவ்வாறாக இரு வேறுபட்ட மனிதர்களின் வாழ்ந்துபட்ட அனுபவமும் வாசிப்பும் ஒரே நேர்கோட்டில் சந்திக்காத முரண்பாடுகள், தர்க்கங்கள் எங்களுக்குள் உண்டு. ஈழப்பிரச்சினை குறித்த ஜோதியின் அரசியல் எழுத்து எனக்கும் அவருக்குமான வெவ்வேறு தளங்களில் பேசப்படவேண்டிய கருப்பொருள். அரசியல் விமர்சனம் என்றால் ஜோதிஜி நடுநிலையில் எழுதவேண்டுமென நினைப்பவர் அவர் எழுத்து சார்ந்து.

குடும்பம் தவிர்ந்த மற்றைய விடயங்களான அரசியல், சமூகப்பார்வை குறித்த எழுத்தில் ஜோதிஜியின் பிரதிபலிப்பு எதிர்மறை அனுபவத்தொனியாக எதிரொலிக்கிறது! சந்தைப்பொருளாதார ஜனநாயகத்தில் மனமும் வாழ்வும் பொருள்சார் சிந்தனைகள், உடைமைகள் வழி கட்டியமைக்கப்படுகிறது. கண்ணாடி போல் கையாளப்படுகிறது. அது சில நேரங்களில் தேடல்களின் வழி அவரவர் சுயங்களாலும், சில நேரங்களில் நம்மை ஆளும் சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகளாலும் உடைக்கப்படுகிறது. அல்லது அதுவே நம் வாழ்வின் அர்த்தப் பிரதிபலிப்பாகிறது. இதன் சாதகபாதங்களை ஏன் ஜோதிஜி அதனதன் அளவுகளில், தன்மைகளில் சொல்லவில்லை!

கருத்துகளானால் வாதிடலாம். அடுத்தவர் அனுபவத்தை விவாதிக்க முடியாது. புரிதல்கள் தவறென்றால் சுட்டலாம். இங்கே புனிதம் என்று ஏதுமில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் அனுபவவழி வாழ்ந்து முடிக்கப் பழகிக்கொள்வதே முடிந்த முடிவு.

தன்னைத்தானே புரிந்துகொள்ளும்  உள்மனத்தேடலில் இறையியல் ஆன்மீகத்தை வழிவகையாக்கிக் கொண்டுள்ளார். தன் குடும்பம் சார்ந்தும், தான் வாழும் சமூகம் சார்ந்து எழுதும்போதோ தக்கன பிழைக்கும் பொருளுலகம் சார்ந்து இயங்குகிறது சிந்தனை.

அக புற உலகங்களின் மெய்யுண்மைகள் ஆள்கிறது ஜோதிஜி மனதை, எழுத்தை என்பதாய் எனக்குப் புலப்படுகிறது.  

ரதி
கனடா


4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எழுத்தைப் பற்றிய அருமையான மதிப்பீடு. வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

தங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?! நல்ல மதிப்புரை! வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் said...

மிகச் சிறப்பான மதிப்புரை...
வாழ்த்துக்கள் அண்ணா...