Tuesday, January 17, 2017

கவர்ச்சி என்னும் ஜிகினா


எழுத்து...

அது ஒரு வரம்... அந்த வரம் எல்லாருக்கும் அமைவதில்லை என்று இப்போது சொல்வதற்கில்லை. இன்று நாம் பார்க்கும்... ரசிக்கும்... கேட்கும்... எதையும் நம் மனதில் தோன்றும் விதத்தில் அழகான பகிர்வாக்க முடியும். பத்திரிக்கைகள் எல்லாமே சிலருக்கு மட்டுமே சாமரம் வீசிய காலத்தில் தன்னுடைய எழுத்துக்குப் பத்திரிக்கையில் அங்கீகாரம் கிடைக்காதா என்று ஏங்கியவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமே இணையம்... இணையம் எழுத்தாளர்களை அதிகம் பிரசவிக்கத் தொடங்கிய ஆண்டு 2009. 

கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆன்மீகம், நகைச்சுவை, தொழில் சார்ந்த பதிவுகள் எனப் பலரையும் களமிறக்கிய ஆண்டு அது. படிக்கும் காலத்தில் பத்திரிக்கைகளில் எழுதி இருந்தாலும் இணையத்தில் நமக்கென ஒரு தளம் அமைத்து எழுத முடியும் என என்னை அழைத்து வந்தவன் நண்பன். நம் பகிர்வுகளைப் பலரிடம் கொண்டு சேர்க்கும் பணியை இணையத் திரட்டிகள் செய்ய, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆகா நம் எழுத்தை வாசிக்கவும் ஆள் இருக்கு எனச் சந்தோஷித்த இணைய எழுத்தாளர்களின் உலகம் விரிய ஆரம்பித்தது. 

எழுத்து... நம்மைச் செம்மைப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.... எழுத எழுத நாமும் எழுத்தைச் செம்மைப்படுத்தி ஆளுமையாவோம் என்பதும் உண்மை. நான் இப்படித்தான்... என்னோட எழுத்துக்கள் இப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் பேசும் பிரபலங்களுக்கு மத்தியில் தொழில் சார்ந்த, மண் மனம் சார்ந்த, சமூகம் சார்ந்த, வாழ்வில் கடந்தவை முதலான எதையும் வாசிப்பவனுக்குச் சுவாரஸ்யமாய்க் கொடுக்க என்னால் முடியும் என ஒவ்வொருவருக்குள்ளும் நம்பிக்கை விதையை இணையம் விதைக்க. இன்று பலர் முளை விட்டு... கிளை பரப்பி ஊடகங்களிலும் சினிமாவிலும் வேர் ஊன்றி வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். 

வாழ்க்கை நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறது... ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிதாய் ஒன்றைப் பெற, நிறைய இழந்து கொண்டிருக்கிறோம். நமக்கு முந்திய தலைமுறை வயலும் வயல் சார்ந்தும் வாழ்ந்த நிறைவான வாழ்க்கையை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாமல் பணம் துரத்தும் வாழ்க்கைக்குள் தஞ்சமாகிவிட்டோம்.

கொஞ்சமேனும் அந்த வாழ்க்கை கிடைத்ததே என்ற சந்தோஷ சாரலுடன்... ஆனாலு நமக்குப் பின்னான தலைமுறைக்கு அந்த வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையும் இல்லாமலேயே போய்விட்டது. இன்றைய தலைமுறையோ கைப்பேசிக்குள் விவசாயம் செய்து விளையாடுகிறது. விவசாயம் மட்டுமின்றி இன்னும் எத்தனை எத்தனையோ இழந்துவிட்டோம். எத்தனை விளையாட்டுக்கள்... எவ்வளவு ஆனந்தம்... சந்தோஷமாய் அனுபவித்த அந்த ஆனந்தங்களை இன்று நினைத்து நினைத்து தேன் மிட்டாயாய் உள்ளத்துக்குள் நிரப்பிக் கொள்கிறோம். 

இன்றைய தலைமுறை இணையத்துக்குள்ளும் செல்போனுக்குள்ளும் சிதைந்து கிடப்பதால் சிறார் காலத்து ஆனந்தத்தை அடியோடு மறந்துவிட்டார்கள். இந்த வாழ்க்கையில் என்ன சாதித்து விட்டுப் போகப் போகிறோம் என்பது நமக்குத் தெரியாது. ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்ற கிராமத்து வழக்குக்குள் நாமும் ஏன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். எனக்குப் பின்னும் நான் பேசப்பட வேண்டும். என் தலைமுறை இப்படித்தான் இருந்தது என்பதை வரும் தலைமுறை அறிய வேண்டும் என்ற நினைப்போடு பயணிப்போமே... அப்படியான பயணத்தில் கிடைப்பவற்றைப் பதிந்து வைக்கத்தான் இணையம் என்னும் இன்பவலை நமக்குக் கிடைத்திருக்கிறதே. 

பார்த்த. கேட்ட, ரசித்த எல்லாம் எழுத்தாகும் போது அதில் நாமும் சமூகமும் வாழ்ந்து கொண்டிருப்போம். இந்தத் தொகுப்பில் நானில் ஆரம்பித்துக் கேள்விகளில் முடியும் 21 கட்டுரைகளிலும் கடந்து வந்தவற்றைத் தாங்கி நிற்கும் எழுத்தை வாசிக்கும் அந்த இடத்தில் நானிருந்ததைப் போல் சந்தோஷம் ஜோதிஜி அண்ணாவின் எதார்த்த எழுத்தில் கிடைத்தது. 

என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு முயன்றால் பத்திரிக்கை என்றில்லை இணையத்திலும் நல்ல எழுத்தைக் கொடுக்க முடியும். தொழில் சார்ந்த கட்டுரைகளால் நம்மை எல்லாம் இன்று ஆட்கொண்டு வருபவர் .

தனது முதல் கட்டுரையில் படிப்பவர்களுக்குப் புரிய, எளிய நடை அமைய 40 கட்டுரைகளுக்கு மேல் ஆனது என்று சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. ஆரம்பத்தில் எழுத ஆரம்பிக்கும் போது வட்டார வழக்குக்குள்தான் நம்மால் பயணிக்க முடியும். எல்லாரும் வாசிக்கும் பொது நடைக்குள் மாறி வர நிறையப் பதிவுகள் தேவைப்படும். எழுத ஆரம்பித்து விட்டால் அது நம்மைச் சுற்றுப்புறத்தை கூர்ந்து கவனிக்க வைக்கும். நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் எழுத்தாகும். எழுத... எழுத... அனுபவங்கள் கற்றுத் தரும் பாடம் வாழ்க்கையை ரசிக்கவும் அனுபவித்து வாழவும் கற்றுக் கொடுக்கும். 

சின்ன வயதில் இருந்து பத்திரிக்கைச் செய்திகளைக் கிழித்து எடுத்துத் துறை வாரியாகச் சேகரித்து வைக்கும் பழக்கம் இருந்தது என்பதையும் அந்தப் பழங்குப்பைகளை எப்போதேனும் எடுத்து வாசிக்கும் போது அதில் நமக்கு ஆத்ம திருப்தியும் சில முரண்களும் கிடைக்கும் என்பதையும் வீடு சுத்தம் செய்தாலும் பழங்குப்பைகளைத் தூக்கிப் போட மனமின்றி மீண்டும் அதனதன் இடத்தில் வைத்து விடுவேன் என்று சொல்வது என் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுதான். 

எவ்வளவுக் குப்பைகள் சேர்ந்தாலும் பரணில் இன்னும் பக்குவமாய்தான் வைத்திருக்கிறோம்... ஏனோ எடுத்துப் போட மனம் வருவதில்லை. சின்னச் சின்னப் பேப்பர்களாய் சேகரித்து வைத்து தூக்கிப் போடாமல் வீட்டில் திட்டு வாங்கும் அனுபவம் இன்றும் என்றும் உண்டு. மாற்றம் ஒன்றுதான் மாறாதது அல்லவா..? 

சின்ன வயது நண்பர்கள் இன்றைய நிலையில் அன்று போல் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கை ஒட்டத்தில்தான் அவரவர் வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள்... மணிக்கணக்கில் கண்மாய்க்கரையிலும் மடையிலும் அமர்ந்து பேசிய நண்பனை இன்று வாடா காலாற நடந்துவிட்டு வருவோம் என்றால் ‘நீ போ... எனக்கு வேலை இருக்கு’ என்று ஒதுங்கிக் கொள்கிறான். அதுவும் அவன் ஊரிலும் நாம் வெளியிடத்திலும் இருந்தால் சொல்லவே வேண்டாம் எங்கிருந்தோ சின்ன மரியாதை வேறு வந்து ஒட்டிக் கொள்கிறது. அன்று இருந்த அந்த நட்பு எங்கே போனது...? 

வாடா, போடாவிற்குள் இருந்த அந்நியோன்யம் என்ன ஆனது..? என்பதையும் சின்ன வயதில் படிக்க என்று வயல்வெளிக்கோ, ஊருக்கு ஒதுக்குப்புறமான கோவிலுக்கோ, கம்மாய்க்கரைக்கோ செல்வது அன்று பலரின் வழக்கம் அப்படிப் படிக்கச் சென்ற இரயில்வே நடைமேடை, அந்த ஆள் அதிகமில்லாத ரயில்வே நிலையம், ஒற்றை மரமென எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். 

குழந்தைகள் அமைவது வரம்.. அதுவும் தேவதைகளாய் அமைந்துவிட்டால் சொல்லவா வேண்டும். அந்தத் தேவதைகளின் பேச்சுக்கள்... சண்டைகள்... இந்தச் சண்டை எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்றுதான் தினம் தினம் நான் இரவு ஸ்கைப்பில் பேசும் போது பெரும்பாலான நேரத்தைக் குழந்தைகளின் சண்டைக்குக் கத்துவதில்தான் செலவிடுகிறேன். அவர்களின் கேள்விகள், அதற்கான விடைதேடல் எல்லாமே நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கும். தனது குழந்தைகளுக்கு இன்னும் சாதிச் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பதைச் சொல்லி, சாதிப் பொங்கலில் சமத்துவச் சர்க்கரை என்னும் கட்டுரையில் மூன்று களங்களாய் மூன்று நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறார். 

இன்று சாதி என்பது வளர்ந்து உயர்ந்து நம்மை வளரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. சாதிக் கொலைகள் இங்கே தவறாமல் நிகழ்கின்றன. சாதிக்க வேண்டிய வயதில் காதலும் காமமும் சாதிக் கொலைக்குள் தள்ளிவிடுகின்றன. 

சாதீயம் பேசும் பலரும் தம் சாதிக்குள் இருக்கும் உட்பிரிவை சரியாகப் பயன்படுத்தி அரசு சலுகைகளைச் சுவைத்தவர்களாய்த்தான் இருப்பார்கள். ஒரு வேலைக்கான படிப்பை படித்து அதில் என்னால் முடியும் என்றாலும் கூடச் சாதியை வைத்தே அதைச் செய்ய முடியுமா முடியாதா என்பதை இந்தச் சமூகம் தீர்மானிக்கிறது. அப்படித் தீர்மானிக்கப்பட்ட ஒருவன் குடும்பம் நடத்த இறந்தவர்களுக்குக் காரியம் பார்க்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறான். 

இன்று அவனின் குடும்பத்து ஒவ்வொரு நேரச் சாப்பாட்டுக்கும் ‘யார் சாவார்?’ என்ற எதிர்பார்ப்பில் என்று சொல்லும் போது இந்தச் சாதீயத்தின் தாக்கம் எப்படிப்படிப்படட்து என்பதை உணர முடிகிறது. 

எல்லாவற்றுக்கும் இறைவன் மீது பழி போடும் மனிதர்கள் குறித்தான பார்வையும் மதவாதத்தை இன்று மார்க்கெட்டிங் செய்து வளர்ப்பதையும் மடாலயங்களுக்கு உரித்தான சொத்துக்களைச் சுரண்டித் தின்பதையும் அவற்றிற்கு வரவேண்டிய வருமானத்தில் இருபதில் ஒரு பங்கு கூட வராததையும் இன்னும் இரண்டு வருடத்தில் மடாலயங்கள் எல்லாம் மறைந்து போகும் என்பதையும் சொல்லிச் செல்லும் ஆன்மீகம் என்பது யாதெனில் கட்டுரைகளும்... தன் காதலின் சின்னமாய்த் தன் பெயரோடு காதலியின் பெயரையும் பொறித்த மரத்தில் காதல் காணாமல் போனது போல் காதலியின் பெயரும் மறைந்து போய் இருப்பதைத் தடவிப் பார்க்கும் தருணத்தில் மகள்கள் தன் பெயருக்குக் கீழே அவர்கள் பெயரைப் பொறித்து வைப்பதை ஆசை மரம் என்னும் கட்டுரையிலும் சென்னையில் இருந்து இரயில் பயணிக்கும் போது கிடைத்த அனுபவத்தைப் பயணமும் எண்ணமும் என்னும் கட்டுரையிலும் இன்று நல்லதோ கெட்டதோ எல்லாவற்றிற்கும் போதையே முக்கியமாகப் போய்விட்ட காலமிது என்பதை விழா தரும் போதையிலும் சொல்லியிருப்பது போல் எல்லாக் கட்டுரைகளும் அன்றாடம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை... மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. 

ஒவ்வொன்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் நம் வாழ்வின் நிகழ்வுகளோடு இணைத்துப் பார்த்து இன்னும் இன்னுமாய் நிறைய ரசித்துப் பயணிக்கத் தோன்றும்… எழுத்து என்பது அதன் நடையால் மட்டும் நம்மை ஈர்ப்பதில்லை… வாழ்வின் ரசனையோடு எழுதும் போது அதன் போக்கில் நம்மைப் பயணிக்க வைத்து நாமும் இவற்றையெல்லாம் கடந்து வந்தோமே… ரசித்து வந்தோமே… என்று எண்ண வைப்பதாலும் நம்மை ஈர்க்கும். என்ன ஒரு ரசனையான எழுத்து இப்படியான ஒரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் எழுத்து அமையப் பெறுவதுதான் உண்மையான வரம் என்று வாசிப்பவருக்குள் தோன்ற வைத்தால் நாம் பயணிக்கும் எழுத்து என்ற பாதையில் மிகச் சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரலாம். அதை உணர வைத்த வாழ்க்கைக் கட்டுரைகள் இவை. 

மகரந்தப் பூக்களாக மலர்ந்திருக்கும் கட்டுரைகள் நமது அறியாமையை ஆங்காங்கே சுட்டிக்காட்டத் தவறவில்லை. உண்மை பேசும் கட்டுரைகள் எழுதுவது என்பது அரிது. இந்தக் கட்டுரைகள் எல்லாமே வாசிப்புக்காகக் கவர்ச்சி என்னும் ஜிகினா பூசாமல் எதார்த்தத்தை மிக அழகாக எடுத்து இயம்புகின்றன. 

வாசித்து... மீண்டும் வாசித்து ஒவ்வொரு கட்டுரையிலும் அவரிடத்தில் என்னை நிறுத்திப் பார்த்து அந்தச் சுகந்தத்தை அனுபவித்தேன். ‘எண்ணம் போல் வாழ்வு’, ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதை விளக்கமாய்ச் சொல்லும் கட்டுரைகள். ஜோதிஜி அண்ணா இன்னும் இன்னுமாய் நிறைய வாழ்வியல் கட்டுரைகள் கொடுக்க வேண்டும் நாம் (சு)வாசிப்பதற்காக…. 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். 

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// எல்லாவற்றிற்கும் போதையே முக்கியமாகப் போய்விட்ட காலமிது என்பதை விழா தரும் போதையிலும் சொல்லியிருப்பது போல் எல்லாக் கட்டுரைகளும் .. //

என்னவொரு ஆழ்ந்த வாசிப்பு...!


தொடரும் நண்பர்கள் கீழே

கவனித்தீர்களா...?

810

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களை அழகாய் வார்த்தையில் வடித்திருக்கிறார்
வாழ்த்துக்கள் ஐயா

Thulasidharan V Thillaiakathu said...

தொடக்கத்தில் தங்களின் எழுத்தைப் போன்ற தோற்றத்துடன் ஆனால் வாசிக்க வாசிக்க நம் குமார் போன்று இருக்கிறதே என்று நினைத்து வந்தால் ஜோதிஜி அண்ணாவின் யதார்த்த எழுத்தில் என்று வந்ததும் தங்களது கட்டுரை அல்ல என்பது தெளிவாகி இறுதியில் வந்தால் எங்கள் ஊகம் மிகவும் சரியே என்று உறுதியாகிவிட்டது! ஆம் பரிவை சே குமார்!!! மிக மிக அருமையாக எங்களில் பெரும்பான்மையோரின், தங்களையும் தங்களின் எழுத்தினைப் பற்றியும் கொண்டுள்ள எண்ணங்களை அப்படியே சொல்லிவிட்டார்! இப்படி எல்லாம் எழுதத் தெரியாத எங்களுக்கு ஆஹா குமார் மிக அழகாக நாம் நினைத்ததை அழகான தமிழில் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டாரே என்று மகிழ்ச்சியடைந்தோம்.

வாழ்த்துக்கள் நண்பரே! வாழ்த்துக்கள் குமார்!

'பரிவை' சே.குமார் said...

என் எழுத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...

பழைய குப்பைகள் குறித்து புத்தரிசி பொங்கல் வைத்து சென்ற அணிந்துரைகளின் மத்தியில் இது பழைய சோறு...

உங்கள் அன்புக்கு நன்றி...

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

ஒருவரின் எழுத்து நடையை வைத்தே யார் எழுதியிருப்பார் என்பது நீங்கள் ஆழ்ந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதை அறியத்தருகிறது. மிக்க மகிழ்ச்சி.

ஜோதிஜி said...

உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் குமார்.

நிஷா said...

அருமையான ஆழமான விமர்சனம்.

அனைத்தும் ஒரு கட்டத்தில் நம்மை மயக்கும் போதை தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் தனபாலன் அண்ணா...
தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் ஐயா...
தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் துளசி சார்...
ஆஹா ஜோதி அண்ணாவின் எழுத்தோடு என் எழுத்தா... அது சரி...
ஒருவரின் எழுத்தை வைத்தே இவர்தான் எழுதியிருப்பார் என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமே... அது தங்களுக்கு வாய்த்திருப்பது குறித்து ஆச்சர்யம்...
தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் அக்கா..
தங்கள் கருத்துக்கு நன்றி.