Thursday, May 09, 2013

மதிப்பிற்குரிய சூரியனார் அவர்களுக்கு


உங்கள எப்படி கூப்டுறதுன்னு எனக்குத் தெரியல. 

நானும் உத்தேசமா சூரியனார் என்று பொத்தாம் பொதுவா கூப்பிடலாம்ன்னு இந்த கடிதத்தை எழுதுறேன். .

உங்கள் தயவுல வாழும் கோடானுகோடி ஜீவராசிகளில் நானும் ஒருத்தன்.  எங்க வம்சத்ல வந்து போனா நூறு பூட்டனுக்கு பூட்டன உங்களுக்கு தெரிந்துருக்கக்கூடும்.  ஆனா எனக்கு எங்களோட ஆறு தலைமுறை ஆராய்ச்சி செஞ்சு முடிக்கிறதுக்குள்ள வேர்த்து விறுவிறுத்து போயிடுச்சு.  நாலு தலைமுறைக்கு முந்திய ஆளுங்க யாரெல்லாம் இருந்தாங்கன்னு எங்கம்மாக்கிட்டே போய்க் கேட்டா, போய் பொழைக்கிற வழியப் பாருடான்னு முகத்தில வழியும் வியர்வை எரிச்சலோடு முந்தானையில தொடச்சுக்கிட்டே என்னை விரட்டுறாங்க. 

என்னம்மா 20 வருசமா இருந்த வேப்ப மரத்தை காணுமே என்று கேட்டால் நல்ல வெல வந்துச்சு. வித்துட்டேன்னு அசால்ட்டா சொல்றாங்க. 

வீட்டுக்குள்ள இருந்த எந்த மரத்தையும் காணோம். கேணியில இருந்த தண்ணியையும் காணோம். வீதியில இருக்ற கொழாயில எப்ப தண்ணி வரும்ன்னு தவமாய் தவம் இருக்குறாங்க. 

அவங்க கொடத்த தூக்கி வரும் போது எனக்கு வேர்த்து கொட்டுது. . 

பாருங்க உங்களுக்கு கடிதம் எழுத நினைச்ச எனக்கு வார்த்தையில வேர்வை தான் மறுபடியும் மறுபடியும் வந்து விழுகுது.

வீட்டுக்குள்ள தான் வேர்த்துக் கொட்டுதுன்னு தெருவுல போய் கொஞ்ச நேரம் நின்னு பேசலாம்ன்னு பார்த்தா  பேசுறதுக்குள்ள வேர்வை தான் ஆறா ஓடுது.  உடம்பெல்லாம் வேர்த்து கொட்டுது. எந்த மரக்கிளையும் ஆட மாட்டுது. காஞ்சு போன சருகுகளை இலையா வச்சுக்கிட்டு நிக்குது.  திடீர்ன்னு காத்து வரும். கொட்டிக்கிடக்கும் சருகுகளை கூட்டும் போதே பொஞ்சாதி முணுமுணுப்பு தாங்க முடியல.

அதென்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல வறப்பட்டிகாட்டுல பொறந்த எனக்கு அன்னைக்கு உங்களைப் பற்றி சரியா புரிஞ்சுக்காம வெற்று உடம்போடு அந்த புழுதிக்காட்ல தான் கொள்ள காலம் சுத்தி திரிஞ்சுருக்கேன்.  அப்பவெல்லாம் எங்க அம்மா நிறமான செவப்பு தான் எனக்கும் இருந்துச்சு.  பார்க்க ராசா கணக்கா இருப்பேன் சொல்லுவாங்க. 

பொழைக்க வந்த ஊர்ல கூட ஆரம்பத்ல எடுத்த படங்களைப் பார்த்தால் கொஞ்சம் சிவப்பாத்தான் இருப்பது போல தெரியுது.  ஆனா நாலஞ்சு வருஷமா என்னோட புள்ளகுட்டிக கூட நீங்களும் கருப்பு தான் என்று நையாண்டி செய்யுறாங்க. காரணமே நீங்க தான்னு எனக்கு இப்ப தோனுது.  

ஆனா திடீர்ன்னு அதிசயமா எனக்கு கடிதம் எழுதுறே என்று உங்களுக்கு கேட்கத் தோன்றுமே?  

என்ன செய்யட்டும்?  

என்னோட கொடுமையை வேறு யாரிடமும் போய்த் பொலம்பித் தொலைப்பதுன்னு தெரியமாத்தான் உங்களுக்காவது எழுதி வச்சு மனச்சாந்தி அடையலாம்ங்றதுக்காக எழுதுறேன். 

இங்கே சாந்தி அடைய வீதிக்கு டாஸ்மாக்ங்ற சாந்திநிலையத்தை எங்க புரட்சித்தலைவி தொறந்துருக்காங்க.  கொள்ளபயலுக காலையிலே பீர்லதான் வாயே கொப்பளிக்றானுங்க.  ஊத்தப்பல்லு நாத்தம் ஒரு பக்கம்.  இந்த நாத்தம் ஒரு பக்கம். ஆனால் இத்தனைக்கு நீங்க தான் காரணம் ராசா.  கொஞ்சம் அடக்கி வாசிச்சுருந்தா எங்க பயலுக இப்படி ஜில்லு பீரைத் தேடி ஓடியிருப்பாங்களா?  

சொல்லுங்க பார்க்கலாம்.

போன வருசத்த விட இந்த வருசம் வெயில் அதிகம்ன்னு நான் போற சலூன் கடையில எப்போதும் போல பேசிக்கிட்டு இருப்பாங்க. 

நான் காது கொடுத்து கூட கேட்க மாட்டேன். இவனுங்க வெட்டிப் பேச்சுக்கு உங்களை இழுக்குறாங்கன்னு தான் நினைச்சுக்குவேன்.  ஆனால் இந்த வருசம் கொன்னு கொலையெடுத்து விட்டீகளே?  இது நியாமா தர்மபிரபுவே?

ஆனா ஒன்னு ராசா?  இந்த வாட்டி நீங்க கொடுத்த குடுப்புல ஈரக்கொலை வரைக்கும் சூடு பறக்குது.  எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சுட்டு எங்கேயாவது ஓடிடலாம்ன்னு தோனுது.  

அப்டி ஓடுனா கல்லெறிஞ்சு கொன்னேபூடுவாங்கன்னு பயம் வேறு எட்டிப் பார்க்குது?  

எவன்டா இந்த உடைகளை கண்டுபிடிச்சான்னு அவனுங்கள மனசுக்குள்ள வஞ்சுக்கிட்டே இருக்கேன்.  வீட்டுக்கு ஒரு மாதிரி, வெளியே ஒரு மாதிரி நாடகம் மாதிரியே வாழ வேண்டியதாக இருக்கு. 

ஆதிவாசி மாதிரி இலைதலை குலைகளை கட்டிக்கலாம்ன்னு பார்த்தா அதுக்கும் இப்ப வழியில்லை. அதுக்கும் ஏதோவொரு வெளிநாட்டுக்கு காரன்கிட்டே எங்க பிரதமரு ஒப்பந்தம் போட்டுருப்பாரு. 

ஒன்ன மாட்டி அதுக்குள்ள இன்னொன்ன மாட்டி அதை உள்ளே விட்டு அதுக்கு அவுறாம பெல்ட்ட கட்டி வெளியே போய் வீட்டுக்குள்ள திரும்பி வர்றதுக்குள்ள உள்ளே ஒரு ஜீவநதியே ஓடுது.  

எதை அவிழ்ப்பது? எப்படி துடைப்பது?

ஆம்பளைங்க நெலம தான் சங்கடம்ன்னா இப்ப இருக்குற நவீன பொம்பள புள்ளைங்க போடுற உடைகளைப் பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு ராசாவே?  யோசிக்கும் போதே எங்களால் கழட்டி வீசியெறிய முடியும்.  பாவம் அவங்க உடைக்கும் நடைக்கும் படுற பாட்டைப் பார்த்தால் உம்மேல கோவம் கோவமா வருதுப்பா? அவங்களும் முகத்தில எதைஎதையோ தடவித்தான் பார்க்குறாங்க.  எல்லாமே வழிந்தோடுது.  எவர் முகத்லேயும் சிரிப்ப காணோம்.  சிரிக்கும் போது கூட வழியும் வேர்வையை துடைக்கத்தான் வேண்டியிருக்கு.

புரியாம சித்தம் போக்கே சிவன் போக்குன்னு வழியறதை துடைத்துக் கொண்டு வரவேண்டியதாக இருக்கு.  

வெறுங்காலோடு நடந்த காலமெல்லாம் மலையேறி போச்சுப்பா. 

வீட்டை விட்டு வெளியே காலை வைக்க முடியல.  வண்டியில போனா எல்லாத்தையும் மறைச்சுக்க வேண்டியுள்ளது. 

எது எரியும்? எப்ப தெரியும்ங்ற மாதிரி பாதுகாப்பா போய்ட்டு வர வேண்டி உள்ளது?

உங்களுக்கு எங்க அவஸ்த்தை புரியுதா ராசப்பா?  

நிலாவுல கால் வச்சான்ங்றது பழைய கதை. ஆனால் இப்ப செவ்வாய் வரைக்கும் போய்ச் சேர்ந்துட்டோம்லங்றது புதிய கதை.  ஆனால் இன்னும் எத்தனை வருசங்கள் ஆனாலும் உங்ககிட்டே எவனும் வந்து சீண்டிப் பார்க்க முடியாதுங்ற தைரியத்தில தான் எங்களைப் போட்டு இப்படி பாடாய் படுத்துறீங்க?  எங்க புள்ள குட்டிங்க பேரன் பேத்திக எடுக்குற காலத்துலே எங்க பாட்ஷா மாதிரி எவனோ ஒருத்தன் உன்னை அடக்க பாசக்கயித்த ராக்கெட்ல கொண்டு வராமலா இருப்பான்?  

வீட்டுக்குள்ள தினமும் நடக்குற கூத்தெல்லாம் உங்களுக்குத் தெரியுமா பிரபுவே?

வீட்டுக்குள்ள வந்து உடம்பை கழுவலாம் என்று பார்த்தால் ரெண்டு வாளிக்குள்ள முடிச்சுட்டு வாங்கன்னு பின்னால நின்னுக்கிட்டே ஒருத்தி கத்துறா? 

கேணியில குளிச்சுருக்கேன். கம்மாயில குளிச்சுருக்கேன். ஆத்துல குளிச்சுருக்கேன், ஏன் கடல்ல கூட குளிச்சுருக்கேன்.  ஆனா எங்க வீட்ல மாதிரி துடைச்சு குளிக்கிற கலையை கத்துக்க வச்சுட்டீய ராசப்பிரவுவே.

தெருக்குழாயில தண்ணீ வர்றது இல்லையாம்.  வீட்டுக்குள்ள இருக்குற போர்வெல் கூட காத்து வாங்குதாம். குளிக்க ஒரு தடா.  குடிக்க ஒரு தடைன்னு என்னை வீட்டை விட்டு துரத்துறதுலே வீட்டுக்காரிக்கு வேர்த்துக் கொட்டுது.  

உனக்கென்ன இப்பவெல்லாம் ஆறு மணிக்கெல்லாம் டாண்னு சக்கைப் போடு ராசான்னு பட்டையை கிளம்புற.

அப்படா இனி பள்ளிக்கூட தொந்தரவு இல்லாப்பான்னு அக்கடான்னு தூங்ற புள்ளகுட்டிங்க முகத்ல காலையில ஆறு மணிக்கெல்லாம் வேர்த்து கொட்டுது.

காத்தாடி பாட்டுக்கு சுத்திக்கிட்டே இருக்கு.  காத்தும் வந்தபாடில்ல. தூக்கமும் வந்தபாடில்ல.

உங்களோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ராஜமார்த்தாண்டா? 

நீ காட்டு காட்டுன்னு காட்டுற வெளிச்சத்துல எல்லாரும் எட்டு மணி ஆச்சோன்னு அறக்க பறக்க எந்திரிச்சு ஓடி வச்சுற.

குளிச்சு தொடச்சு உள்ளே வந்தா மறுபடியும் குளிக்கிற மாதிரி உம்மோட வேலையை காட்ட ஆரம்பிக்றே.  என்னப்பா இது நாயம்?

வளர்ச்சி வளர்ச்சின்னு வந்து சொல்லி கிராம வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த சனங்க அத்தனை மனசையும் கலைச்சு போட்டுட்டு போயிட்டானுங்க.  பதநீர் குடித்த வாய் இன்னைக்கு இளநீர் குடிக்கக்கூட கௌரவக்குறைச்சலா நினைக்குதுங்க. கஞ்சித்தண்ணியோட சோறு போட்ட கை இன்னைக்கு ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி திங்க நினைக்குதுங்க.  திங்ற நேரம் கொறஞ்சு உடுத்துற நேரம் தான் அதிகமாச்சு.  திங்ற நேரத்தை விட செல்போன்ல பேசுற நேரம் தான் அதிகமாச்சு. சேமிப்பை பத்தி யோசிக்க முடியல.

யாருக்கிட்ட கடன் வாங்கலாம்ங்ற எண்ணம் தான் ஒவ்வொருத்தான் மனசுலேயும் நாள்பூரா ஓடிக்கிட்டேயிருக்கு. 

புட்டாமா பூசி இருக்காண்டீ என்று ஆச்சரியப்பட்டு பேசிய காலம் போய் நீங்க கீரிம் யூஸ் பண்றது இல்லையான்னு கேட்குற நிலைமையில இருக்குறாங்க.  வாழ்க்கைக்கு வசதி என்கிற காலம் போய் வசதிக்கு வாழ்க்கைங்ற மாதிரி மாறிப் போச்சு.  

காட்டு மரமெல்லாம் நாட்டுக்குள்ள வீடாச்சு.  ஆனா வீடெல்லாம் பழையபடி குகையாச்சு.  

ஆதி மனுசன் குகைக்குள்ள வாழ்ந்த மாதிரி தான் நாங்களும் வாழ்ந்துக்கிட்டுருக்கோம்.  

எந்த நேரத்தில எவன் வந்து வீட்டுக்குள்ள வந்து குதிப்பானோன்னு மனசு கெத்து கெத்துன்னு ச்சும்மா அடுச்சுக்கிட்டேயிருக்கு.  பூட்டிக்கிட்டே தான் வாழ்றோம்.

வீட்டுக்குள்ள இருந்த காத்தாடி இருபத்தி நாலு மணிநேரமும் சுத்திக்கிட்டே தான் இருக்கு.  நாகரிகத்திற்காக கட்டிய வீடு முழுக்க சூடு தான் ரொம்பியிருக்கு.  வெளியே வந்தால் முகமெல்லாம் வெம்பி போயி கிடக்கு. எங்கே போனாலும் சூடு தான் கொறையாம இருக்கு..

ஆத்துல தண்ணிய காணோம்ங்றது பழைய கதை. இப்பவெல்லாம் குளத்துல கூட மண்ணைக் காணோம். களியாக இருந்தாக்கூட காசு பார்க்க சுரண்டி வித்துப் புடுறானுங்க. சுரண்டி சுரண்டி வித்தவனுங்க மத்தியில வாழ்ந்தாலும் இன்னமும் கூட உன்னை மாதிரி யாரோ ஒருத்தரு நாயம் கேட்க வருவான்ங்ற நம்பிக்கையில தான் கொள்ள சனம் இங்கே காத்துக் கெடக்குது. உன்னோட பங்காளி மழை இப்பவெல்லாம் எட்டிக்கூட பார்ப்பதில்லை.  எங்களைப் பார்த்தாலே எட்டிக்காய் போல ஆயிடுச்சு போல.

இப்ப பக்தி கண்ணாபின்னாவென்று வளர்ந்துடுச்சு. கூட மழைக்கு கூட யாகம் வளர்க்குறாங்க. ஆனா தவிச்ச வாய்க்கு தண்ணி தர இங்கே ஒரு நாதியில்ல. இதெல்லாம் மேலே இருக்குறவன் பார்த்துக்கிட்டே இருப்பான்ங்றது பழம்பாட்டா ஆயிடுச்சு. கம்பெடுத்தவன் தான் இங்கே தண்டல்காரன். வலுத்தவன் தான் வாழுறான்.

ஆனா ஒன்னு ராசா. நீங்க என்ன வேனும்னாலும் அழிச்சாட்டியம் பண்ணுங்க.  நாங்க பயப்படவே மாட்டோம்.  

எங்களுக்கு  இருக்கவே இருக்கு சன் டிவி.  குத்த வச்சு நாள் முழுக்க அதுக்கு முன்னாடி உட்கார்ந்துகிட்டே இருப்போம்.  நாங்க வெளியே வந்தாத்தானே நமக்குள்ள பிரச்சனை.  கண்டதையும் யோசிச்சா தான் கருமாந்திரம் புடுச்ச அறிவு வேலை செய்யும். அதை அடகு வச்சு தான் நாளாச்சே.

  
இப்படிக்கு 

வெம்பிப்போனவன்.
வெயிலோடு உறவாடு இல்லம்
இளநீர் (அஞ்சல்)
தர்பூசணியூர் (தாலூகா)
தென்னந்தோப்பூர் மாவட்டம்.

மற்ற கடிதங்கள்


10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கேயும் முணுமுணுப்பு...!

ஒப்பந்தம் போட்டாச்சா..?

அண்ணே... மொத்தத்தையும் நீங்களே புலம்பினா எப்படி...? ஆனாலும் சூரியனாருக்கு இத்தனை பட்டங்கள் தந்த உங்கள் நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு... ஹிஹி...

சீனு said...

//எவன்டா இந்த உடைகளை கண்டுபிடிச்சான்னு அவனுங்கள மனசுக்குள்ள வஞ்சுக்கிட்டே இருக்கேன்.// ஹா ஹா ஹா நீங்க தான் தர்மப் பிரபுவே...

// இளநீர் குடிக்கக்கூட கௌரவக்குறைச்சலா நினைக்குதுங்க. // இளநீர் கொள்ள வெல விக்குறாங்க சார்

சூரியனுக்கே சவால் விடும் நக்கல் கலந்த கடிதமா ...

சிறுவர்கள் தண்ணீருக்குள் குதுக்கப் போகும் அந்தப் படத்தை பார்க்க ஏக்கமாய் உள்ளது.. இப்படி குளித்து எவ்வளவு நாளாயிற்று

அகலிக‌ன் said...

"வெயிலோடு விளயாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு பாட்டுப்பாடி ஆட்டம் போட்டோமே" ன்னு பாட்டுபாடிகிட்டே சும்மா ஜாலியா எஞ்சாய் பண்ணுங்க.

http://thavaru.blogspot.com/ said...

நெருப்புக்கு நெருப்பு தான் பங்காளி அன்பின் நீங்க மழைன்னு செல்லிறியோ...:))

ஜோதிஜி said...

பக்கத்து வீட்டு மக்களை கவனித்து வைத்ததை அடுத்து எழுதுகின்றேன். நாம் எம்பூட்டு தேவைலன்னு நினைக்கத் தோனும்.

ஜோதிஜி said...

வாங்க கிராமத்து பக்கம் ஒரு சுற்றுலா போயிட்டு வரலாமா? எங்கே அமெரிக்க நேரத்ல வேலை செய்யுற உங்களைப் போய் எங்கே கூட்டிக்கிட்டு போக முடியும்? நீங்க எல்லாம் வவ்வால் பார்ட்டீங்க.

ஜோதிஜி said...

பங்காளி என்றாலே இப்போது சண்டை சச்சரவு தானே? அதான் அப்படி குறிப்பிட்டேன்.

ஜோதிஜி said...

என்னத்த எஞ்சாய்? ஆனா சென்னை வெயிலுக்கு இங்கே பரவாயில்லைதானே?

Rathnavel Natarajan said...

வேதனையாக இருக்கிறது. தாளவில்லை.

Thoduvanam said...

நாங்க வெளியே வந்தாத்தானே நமக்குள்ள பிரச்சனை. கண்டதையும் யோசிச்சா தான் கருமாந்திரம் புடுச்ச அறிவு வேலை செய்யும். அதை அடகு வச்சு தான் நாளாச்சே.