Wednesday, June 29, 2011

ராஜபக்ஷே அல்வா வியாபாரி

இப்போது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் போர் வெடித்து விட்டது. இலங்கைக்குள் இருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் ஆள்காட்டிகள் மூலம் அடையாளம் கண்டு கொண்டவர்கள் வரைக்கும் அழித்து முடிப்பதற்கு இலங்கை இராணுவத்திற்கு பெரிய அளவுக்கு ஆயுதங்கள் தேவையில்லை. ஆனால் இப்போது போரை தொடங்கியாகி விட்டது. 

வெளியே சென்று வாங்கவும் கஜானாவில் டப்பும் இல்லை.  2006 ஆம் ஆண்டு சீனாவின் நோரிங்கோ நிறுவனத்துடன் கூடிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க நினைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஏற்கனவே சீனாவிடமிருந்து வாங்கிய ஆயுதங்களுக்கு கடனாக 200 மில்லியன் டாலர் வேறு கொடுக்க வேண்டியுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த கடனைக் கூட திருப்பி கொடுக்க முடியாது.  எனவே தான் ராஜபகேஷ சீனாவை ஆயுத வியாபாரியாக மட்டும் பார்க்க விரும்பாமல் தன் நேச கூட்டாளியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவஸ்யத்தை உணர்ந்தார்

இன்று வரைக்கும் இறுதிக்கட்ட போர் தொடங்குவதற்கு காரணம் மாவிலாறு அணையை விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரச்சனை செய்கிறார்கள்.  இதை நம்பி பாசனம் செய்து கொண்டிருக்கும் தமிழர், சிங்களர், முஸ்லீம் மக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காகவே தொடங்கினோம் என்ற இலங்கையின் கூற்றைத்தான் உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளே இந்த யுத்தத்தை தொடங்க காரணமாக இருந்தார்கள் என்று தான் இன்று வரைக்கும் நம்பப்படுகின்றது.  ஆனால் உண்மை என்பது வேறு?

இதே காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்ததைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தினரால் உள்ளே நடத்தப்பட்டுக் கொண்டிருந்த வன்முறை தாக்குதல்கள் அளவு கடந்து போய்க் கொண்டிருந்தது. இதன் காரணமாக இலங்கை அரசு பிரதிநிதிகளையும், விடுதலைப்புலிகளையும் தனித்தனியாக நார்வே குழுவினர் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் ஜுன் 8 ல் சந்தித்தனர். ஆனால் இந்தியாவின் குறுக்கீடு காரணமாக இருவரையும் சந்திக்க வைக்க முடியாமல் இறுதியில் நார்வேயும் பின்வாங்கியது.

ஓஸ்லோவில் இருந்து விடுதலைப்புலிகள் திரும்பி வந்து கிளிநொச்சிக்கு சென்ற மறுநாள் முதல் இலங்கையின் இராணுவமும், கப்பற்படையும் சேர்ந்து தமிழ்மக்களின் குடியிருப்புகளின் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை தொடங்கியது.  இந்த தாக்குதல் ஏற்கனவே ஏப்ரல் முதலே தொடங்கியிருந்தது. மூதூர் பகுதிக்குள் உள்ளே உணவு, மருந்துப் பொருட்கள் எதுவும் நுழைந்து விடாத அளவுக்கு ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 30 ஆயிரம் பேர்கள் குடியிருப்பின்றி அனாதை ஆக்கப்பட்டார்கள்.  பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், சந்தனவேட்டை, சீனிவாசபுரம், சின்னகுளம், இத்திகுளம், பட்டாளிபுரம் உட்பட 12 கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்த 3000 தமிழ்க் குடும்பங்கள் தண்ணீரில்லாமல் தவித்தன. 

இந்தப் பிரச்சனைகளை சர்வதேச நாடுகளிடம் விடுதலைப்புலிகள் முறையிட்ட போது எந்த தீர்மானமான உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விடுதலைப்புலிகளின் குணாதிசியம் தெரிந்தது தானே? நம்மை நோக்கி இவர்களை வரவழைக்க வேண்டுமென்றால் இது தான் ஒரே வழியென்று மாவிலாறு மதகை விடுதலைப்புலிகள் மூடினார்கள். ஆனால் இதை வைத்துக் கொண்டே உள் அரசியல் சதுரங்க காய்களை ராஜபக்ஷே கவனமாக நகர்த்தி தாக்குதலை தொடங்கினார். இதில் மற்றொரு ஆச்சரியமும் உண்டு.  போர் நிறுத்த கண்காணிப்பு குழு முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டு விடுதலைப்புலிகளின் தளபதி எழிலன் மதகை திறக்கச் சென்ற போது மாவிலாறு அணையை கைப்ற்றுகிறோம் என்று மீண்டும் இலங்கை ராணுவம் குண்டு வீச்சுக்கள் மூலம் விடாமல் தாக்கிக் கொண்டேயிருந்தது. போர் நிறுத்த கண்காணிப்பு குழு தலைவர் பதுங்கு குழியில் மறைந்து உயிர் தப்பினார்.  மொத்தத்தில் விடுதலைப்புலிகள் எதற்கும் ஒத்துவரமாட்டுகிறார்கள் என்பதை உலகத்திற்கு பரப்ப வேண்டும்.  அதே சமயத்தில் உள்ளேயிருப்பவர்கள் ஓட்டு மொத்தமாக ஒழித்துக் கட்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.  அதைத்தான் ராஜபக்ஷே அன் கோ தெளிவாக செய்து கொண்டிருந்தது.

இதே சமயத்தில் ராஜபக்ஷே மற்றொரு காரியத்தையும் செய்து கொண்டிருந்தார்.  பாகிஸ்தான் நாட்டிடம் அதாவது 2006 ஆகஸ்ட் மாத இறுதியில் எங்களுக்கு 60 மில்லியன் அளவிலான ஆயுத உதவிகள் தேவை என்று கோரிக்கை வைத்திருந்தார்.

காரணம் பாகிஸ்தானும் இலங்கையுடன் நெருங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.  வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?  ஏற்கனவே இந்தியாவுடன் இலங்கை போட்டுருநத தடையற்ற சுதந்திர வியாபார ஒப்பந்தம் போல எங்களுடனும் ஒரு ஒப்பந்தம் போட் வேண்டும் என்று மறைமுகமாக கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கை பாகிஸ்தான் அரசால் 2003 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும் கூட அப்போது அது கேட்பாரற்று இருந்து.  இப்போது பாகிஸ்தானும் இலங்கைக்கு உதவ காத்திருந்தது.  காரணம் பாகிஸ்தான் கோரிக்கையின்படி 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அந்த ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுருக்க இபபோது ராஜபகேஷவுக்கு வசதியாக போய்விட்டது.

ஒரு வேளை சீனா சரியான சமயத்தில் உதவாவிட்டால் என்ன செய்யலாம்?  அதற்கும் அடுத்த யோசனை ராஜபகேஷவிடம் தயாராக இருந்தது.  சீனாவின் நட்பு நாடான ஈரானினிடம் போய் நின்றது.  அதாவது தென் இலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைப்பதற்காகவும் கொழும்பு நகருக்கு அருகேயுள்ள சபுகஸ்கந்தா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தினை விரிவாக்கம் செய்வதற்காக கொடுப்பதன் மூலம் ஈரான் அரசு மூலம் தேவைப்படும் உதவியை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. 2007 நவம்பர் மாதம் இது தொடர்பாக ராஜபக்ஷே ஈரான் பயணமானார். எந்தவித டெண்டர் இல்லாமலேயே இவற்றை ஈரானுக்கு வழங்கப்படும் என்ற தனிப்பட்ட உறுதியையும் ராஜபக்ஷே ஈரான் அரசிடம் தெரிவித்தார். 

2007 நவம்பர் 29 அன்று ஈரானுடன் இலங்கை எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இப்போது ராஜபகேஷவின் ஒரே நோக்கம் சீனாவை தன் பக்கம் வரவழைக்க வேண்டும்.  அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் எதிர்ப்பு நாடுகளை தன் பக்கம் கொண்டு வருவதன் மூலம் எளிதாக சீனா தங்கள் பக்கம் வந்து விடும் என்று அவர் நம்பி தொடங்கிய ஒவ்வொரு செயல்பாடுகளும் அவருக்கு இறுதியில் பழமாக மாறத் தொடங்கியது. எந்த அளவுக்கு ராஜபக்ஷே இதில் தீவிரமாக இருந்தார் என்பதற்கு இந்த சினன உதாரணமே போதுமானது.  ஈரான் குறிப்பிட்ட (சபுகஸ்கந்தா சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கம்) தொகையானது அப்போதைய சந்தை நிலவரத்தைக் காட்டிலும் 300 சதவிகிதம் அதிகமாக கேட்டது.  ஆனால் இதற்கு உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் ஒரு பெருந்தொகை இலங்கையின் வளர்ச்சி நிதிக்காக வழங்கப்படும் என்ற ஈரான் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் ராஜபஷே எந்த கேள்வியும் கேட்காமல் ஒத்துக் கொண்டார். 

இதற்குள் மற்றொரு ராஜதந்திரமும் உண்டு.  ஒரு வேளை எதிர்காலத்தில் இந்தியா இலங்கைக்கு எதிரணியில் நிற்கும் பட்சத்தில் இலங்கை மண்ணில் ஈரான் இருப்பது பல வகையிலும் உதவக்கூடும் என்ற கணக்கும் உண்டு. இதே சமயத்தில் ராஜபக்ஷே உறுதியளித்தபடியே சீனா 2006  மே மாதம் 900 மெகாவாட் திறனுடைய அனல்மில் நிலையத்திற்காக கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்த திட்டத்தை ஏற்கனவே இலங்கை அரசு இந்தியாவின் தேசிய அனல் மின் குழுமத்துடன் (National Thermal Power Corporation – NTPC) செய்து கொள்வதாக சொல்லியிருந்ததை மாற்றிவிட்டு இப்போது அதை சீனாவின் கையில் கொடுத்து இந்தியாவிற்கு அசல் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை பரிசளித்தது.

ஆனால் நிரந்தரமாக இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியுமா?

இந்த இடத்தில் இலங்கை ஆட்சியாளர்களின் தில்லாலங்கடி ஆட்டத்தைப் பற்றி சிலவரிகள் மூலம் பார்த்து விடலாம்.

1993 ஆம் ஆண்டு அப்போது இருந்த நரசிம்மராவ் அரசின் எதிர்ப்பை மீறி புத்தளத்தில் அமையவிருந்த அரசு சிமெண்ட் நிறுவனத்தை யாருக்கு விற்றார்கள் தெரியுமா?  பாகிஸ்தானின் தாவாக்கல் நிறுவனம்.  இந்த நிறுவனம் பாகிஸ்தானின் உளவு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்குச் சொந்தமானது

இப்போது சீனாவுக்கு கொடுத்துள்ள அனல்மின் நிலையத்திற்கு ஒரு மாற்று ஏற்பாடு ஒன்றை இந்தியாவிற்கு கொடுக்க வேண்டும் அல்லவா?

இந்த இடத்தில் தான் ராஜபக்ஷேவை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த தானைத்தலைவன். 

எப்படித்தெரியுமா?

2006 ஆகஸ்ட்டில் விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றிய கிழக்கு இலங்கையில் இருந்த சம்பூர் பகுதியை (திருகோணமலைப்பகுதியில் உள்ள பகுதி) இந்தியா வசம் ஒப்படைத்தது. சம்பூர் பகுதியில் 500 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைக்க இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை வைத்தது. இலங்கை மின்சார வாரியமும், இந்தியாவின் தேசிய அனல் மின் கழகமும் இணைந்து நிறுவுவதே இதன் திட்டமாகும்.

இதன் மூலம் என்ன லாபம் என்கிறீர்களா?

இதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இந்தியாவே விடுதலைப்புலிகளிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டும்.  திருகோணமலைப் பகுதி என்றால் இந்தியாவுக்கு சொல்லவா வேண்டும்.  

எப்பூடி? 

5 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
உங்களது கடுமையான உழைப்பு.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்.

நிகழ்காலத்தில்... said...

இந்தத் தொடரில் உங்களின் உழைப்பு அபரிதமானதாக இருக்கிறது ஜோதிஜி...

பாராட்ட வார்த்தைகள் இல்லை..

viki said...

ஆளாளுக்கு வலைப்பூ வைத்துகொண்டு கிறுக்கிவரும் வேளையில்(அடியேன் உட்பட) நீங்கள் எந்த ஒரு பிரச்சனையையும் ஆழமாக விவரமாக தருவது நிச்சயம் நல்ல விஷயம்.இதை தொடருங்கள்.

ராஜ நடராஜன் said...

//2007 நவம்பர் 29 அன்று ஈரானுடன் இலங்கை எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.//

சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு யாராவது காதுல மறுபடியும் ஊதுனா நல்லது.

ஆப்கானிஸ்தான்,ஈராக்,எகிப்து,லிபியா,சிரியா,ஏமன்,பஹ்ரைன்,சவுதி அரேபியான்னு நிறைய மண்டையில போட்டுக்கிட்டதால ஈரான் விவகாரங்கள் தெரிஞ்சிருந்தும் அதனை அஜண்டாவுல கடைசியா வச்சிருக்குது.

சீனாவின் பொருளாதாரம் எகிறும் வரையில் அமெரிக்கா இலங்கை விசயத்தில் தலையீடு செய்யாது என்றே நினைக்கின்றேன்.

படமெல்லாம் போட்டு விளக்கமாகத்தான் சொல்றீங்க.ஆனால் நேற்று மன்மோகன் சிங் புதுசா ஏதோ கதை விடுறாரே!

தாராபுரத்தான் said...

இந்தத் தொடரில் உங்களின் உழைப்பு அபரிதமானதாக இருக்கிறது ஜோதிஜி...

பாராட்ட வார்த்தைகள் இல்லை..