Friday, September 17, 2010

நியூசிலாந்து -- துளசி கோபால் புத்தக விமர்சனம்.

இரண்டு பாகமாக இதுவரையிலும் நியூசிலாந்து குறித்து பொதுவான் விசயங் களைப் பார்த்தோம். இப்போது மொத்தமாக புத்தக விமர்சனமும் நியூசிலாந்து உருவான தலபுராணமும்..

நாம் பெருமைபடக்கூடிய மற்றும் பொறாமைடக்கூடிய நாடாக இருப்பதால் நீள் பதிவாக இருப்பதில் தப்பில்லை.

ஹேமா சமீபத்தில் சொன்ன ஒரு விடயம்.. " நாடுகள் மற்றும் அது சார்ந்த நடை முறை பழக்க வழக்கங்களைப் பற்றி படிப்பதில் தான் இப்போது ஆர்வம் அதிகமாக இருக்கிறது.  காரணம் சரித்திரம் பல விசயங்களை எனக்கு புரிய வைக்கிறது "  என்றார்.
இந்த நியூசிலாந்தின் தல புராணத்தைப் பற்றி படிக்கும் போது அவர் சொன்ன விசயங்கள் தான் நினைவில் வந்தது.  காரணம் இன்றைய நியூசிலாந்து சொர்க்கம் போல் இருக்கிறதே என்று அங்கலாய்ப்பவர்கள் இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் நம்ப முடியாத அளவிற்கு   நமக்குத்தந்துள்ள இத்தனை வரலாற்றுத் தகவல்களை படிக்கும் போது "இந்த சொர்க்கம் சும்மா வரவில்லை" என்று நினைக்கத் தோன்றுகிறது. 

நூலாசிரியருக்கு அமைந்த அதிர்ஷட வாய்ப்பான பார்த்த நூலகப் பணி என்பது
பலவிதங்களிலும் படிப்பவர்களுக்கு தவமில்லாமல் கிடைத்த வரம் போல உதவியாய் உள்ளது.

1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகமா கடல்பயணத்தின் மூலம் இந்தியாவைக் கண்டு கொண்ட பிறகு தான் தூர தேசங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாடுகளுக்கும் செல்ல வேண்டும் என்ற உந்து சக்தி உருவாக ஆரம்பித்தது.  ஒரே காரணம் வியாபாரம் மற்றும் அதிக லாப ஆசைகள் கொண்ட நேரிடையான கொள்முதல். 

16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்ததும் பக்கத்தில் ஈழத்திற்குள் சென்றதும் இதன் அடிப்படையில் தான் நடந்தது.  இந்த கதை தான் நியூசிலாந்திலும் நடந்துள்ளது.

1200 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து என்று இன்று அழைக்கப்படும் நாட்டிற்குள் உள்ளே வந்தவர்களின் பெயர் பாலினீஷீயன்கள்.   உள்ளே நுழைந்தவர்களின் வாழ்க்கைக் காலம் 30 முதல் 40வரைக்கும் இருந்தாலும் குழுவாக அங்கங்கே பிரிந்து வாழ்ந்து கொண்டு எளிதாக எங்கும் எளிதில் நகர்ந்துவிடக் கூடியதாய் உள்ள வகையில் அமைந்த வீடுகளை கட்டிக் கொண்டு வாழத் தொடங்குகிறார்கள். 

இதற்கு முன்னால் உள்ள புராணங்கள் புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதற்குப் பிறகு தான் நம்ம ஏழரை பகவான் ஆங்கிலே யர்கள் உள்ளே வருகிறார்கள். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு முன்பு வாழ்ந்த வர்களின் ஆயிரம் வருட வாழ்க்கையில் போட்டிகளும் பொறாமைகளுடன் வேறொன்றும் இருந்தது.  அது தான் சென்ற வாரங்களில் நியூசிலாந்தை புரட்டிப்போட்ட பூகம்பம் மற்றும் இதன் இலவச இணைப்பாக எரிமலைத் தாக்குதல்.
மூடநம்பிக்கைகள் என்பது இன்றைக்கு தான் உருவானதா?

இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல உலக நாகரிகம் வளர வளர பஞ்சபூதமான நீர்,நிலம்,காற்று,ஆகாயம்,வாயு போன்றவற்றை வணங்கிக் கொண்டுருந்த மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் நிறைய மாறுதல்கள் உருவாகத் தொடங்கியது. தொடக்கத்தில் உருவான எரிமலைக் குழம்பு மொத்தத்தையும் புரட்டிப் போட்டு விட உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த பழங்குடியினர் மிக எளிதாக ஒரு முடிவுக்கு வந்தனர்.

இதற்கு காரணம் நாம சூன்யக்காரின்னு சொல்லிக்கிட்டுருக்க ஹினோபாவ் (பாய், துணி முடைவதில் ரொம்ப கெட்டிகாரி) தான் காரணம்ன்னு ஏற்கனவே உள்ளே வைத்துக் கொண்டுருந்த பொறாமையால் எளிதாக ஒரு முடிவுக்கு வந்து ஊரை விட்டு துரத்தி விட்ட பிறகு தான் உள்ளே இருந்த பெண்களுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.  

காரணம் வேறொன்றுமில்லை.  நம்ம ஹினோபாவ் பார்க்கிறதுக்கு 60 கிலோ தாஜ்மஹால் ஐஸ்வர்யா போல் கண்களில் லென்ஸ் பொருத்தமலே சும்மா அம்சமா இருப்பாங்க.

உலகத்தில் நாகரிகம் தோன்றியதற்கு முக்கிய காரணம் பொறாமை.  மாற்றுக் கருத்து உண்டா? இந்த பொறாமை உருவாக்கியதே ஆசைகள். இந்த ஆசைகள் உருவாக உருவாக வளர்ந்த விஞ்ஞானத்தின் காரணமாக இன்று ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நீங்கள் இதை படித்துக் கொண்டு இருக்கீங்க.......

இப்படித்தான் இந்த நியூசிலாந்தின் தொடக்ககால தலபுராணத்தை வெகு சிரத்தையாக நுலாசிரியர் கோர்வையாக கொண்டு போய்க் கொண்டுருக்கிறார். தொடர்ந்து வரும் மாவோரியர்கள் வரைக்கும் பல ஆதாரபூர்வ தகவல்களுடன் தொண்டையில் நழுவிக் கொண்டு செல்லும் பால் பாயசம் போல செல்கிறது. . இந்த தொடக்க கால பொறாமையில் உருவான நியூலாந்து நாட்டின் வளர்ச்சி இன்று எங்கே வந்து நிற்கிறது தெரியுமா?  

அதுக்கும் நாம பொறாமைபட்டுத்தான் ஆகனும்.  ஆமாம் உலகில் ஊழல் குறைந்த நாட்டின் தரவரிசையில் நியூசிலாந்து இருப்பது இரண்டாவது இடம்.  நியூக்ளியர் இல்லாத நாடு..  இன்னும் பலப்பல அதிர்ச்சிகள் இந்த நூல் முழுக்க இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் " சூரியன் மறையாத நாட்டை ஆண்டவர்கள் " என்று சரித்திரம் படிக்கிற அத்தனை பேர்களும் தெரிஞ்ச சமாச்சாரத்திற்கு முன்பு வேறொரு கதையும் உண்டு.  எல்லாமே வணிகம் சார்ந்த ஆசைகள். 

தொடக்கத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இருந்த வணிகர்களை பீதியை கிளப்ப வைத்தவர்கள் டச்சு மக்கள். ஆங்கிலேயர்களெல்லாம் சும்மா டம்மி.  இவங்க தான் சும்மா கில்லி மாதிரி ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் புகுந்து சுனாமி மாதிரி வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. இந்தியாவில் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு வந்த டச்சு மக்கள் சந்தைக்கு வருவது போல கப்பலில் வருவாங்க. சாமான்களை வாங்குவாங்க. ஒன்னுக்கு பத்தா குறைத்தும் கொடுப்பாங்க. இதுக்கு மேலே மதம் மாற வைப்பாங்க.  உச்சகட்டமாய் பெரிசா தர்றேன்னு சொல்லி நடுக்கடல்ல கொண்டு போய் தூக்கி எறிஞ்சுட்டு போயிடுவாங்க. டச்சு மக்களை பார்த்தாலே தொடக்க கால இந்தியாவில் டச்சு பண்ணக்கூடாதுன்னு ஓட்டமா ஓடியிருக்காங்க.  அந்த ஐயாமாருங்க தான் நியூசிக்குள்ளேயும் தங்கள் புனித காலை எடுத்து வச்சுருக்காங்க.

1642 ஆம் ஆண்டு ஏற்கனவே வியாபாரம் செய்துக்கிட்டுருந்த டச்ச மக்கள் ஜாவா (இந்தோனேசியா) வில் இருந்து கிளம்பி ஆறுமாசம் பிரயாணம் செய்து  நியூசிலாந்தின் உள்ளே வந்தா நம்ம இந்தியா மாதிரி வாங்க ராசா, வாங்க தொரைமாருங்களான்னு எவரும் வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடாம வேறொரு காரியம் செய்தாங்க.

கும்மாங்குத்து கேள்விபட்டுருக்கீங்களா?

வந்து இறங்கிய மாவோரியர்கர்கள் குத்தின குத்துல துண்டக் காணோம் துணியை காணோம்ன்னு ஓட்டம் பிடிக்க ஆரம்பிச்சாங்க. கப்பலை ஒவ்வொரு இடமா நகர்த்தி, அப்படியே எவ்னாவது இளிச்சவாயன் சிக்குவானான்னு பார்த்து பயத்தோடு இறங்கிய இடம் தான் STATEN LAND.

டச்சு மக்கள் வைத்த பெயர் தான் பிறகு ஐரோப்பாவில் நோவா ஸீலான்டியா என்று மாறியது. . ஏற்கனவே கூட வந்த நாலு பேரையும் இழந்து கஷ்டப்பட்டு வந்து இறங்கி பெயர் சூட்டும் விழாக்கூட வைக்காமல் திரும்பி போயிட்டாங்க. 

இதுவே தான் ஆங்கிலேயர் இங்கு வருவது வரைக்கும் நடந்துக்கிட்டு இருந்து இருக்கு. ஒவ்வொரு நாட்டிலும் இருந்து நியூசிக்கு வருவாங்க.  மாவோரிகளின் எதிர்ப்பு தாங்க முடியமா பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடிடுவாங்க.  இந்த எதிர்ப்பு எந்த அளவுக்கு இருந்துச்சு தெரியுமா?  1772 ல் உள்ளே வந்த .பிரஞ்சுகாரர் (MARION DU FRESNE)  உடன் வந்த 15 மாலூமிகளை கொன்றதோடு மட்டுமல்லாமல் மசாலா எதுவும் சேர்க்காமல் மொத்த மக்களையும் அப்படியே சாப்பிட்ட பிறகு தான் மாவேரிகளுக்கு கோபம் அடங்கியது.

ஆனால் நம்ம ஆங்கிலேயே பகவான் எப்பவும் கொஞ்சம் வித்யாசமானவங்க தானே?

ஒரு நாட்டுக்குள் உள்ளே நுழைய அவர்களின் மதம் முதலில் உள்ளே வரும்.  அப்புறம் மக்களும் மதம் பிடிக்க வச்சுடுவாங்க. இதைப் போலத்தான் இங்கு உள்ள வந்த (1814) மிஷனரி சார்பாக வந்தவர் பெயர் சாமுவேல் மார்ஸ்டன். ஆனால் இந்தியா போல அவ்வளவு சீக்கிரம் இவங்க பப்பு மாவோரிகளிடம் வேகவில்லை.

கிட்டத்தட்ட 11 வருசம் மாறி மாறி ஒவ்வொரு பாதிரிமாருகளும் உள்ளே வந்து பாதிதான் கரைக்க முடிந்தது. எழுத படிக்க கற்றுக் கொடுத்தது எப்படி தெரியுமா?  நாங்க சொல்றத கேட்டா ஆளுக்கு ஒரு துப்பாக்கி இனாம்ன்னு கூவிக்கூட
பார்த்துருக்காங்கன்னா பாத்துக்கங்களேன்.

துப்பாக்கி கையில வாங்கினவுங்க என்ன செய்வாங்க?. ஒவ்வொரு குழுவும் அடுத்த குழுவோட மோத ஆரம்பித்த நிலமெல்லாம் ரத்தம் தான்.  நல்லவேளை ஆங்கிலேயர்கள் துப்பாக்கியை அறிமுகம் செய்யாமல் இருந்து இருந்தால் இவங்களும் மாவேரியர்களுக்கு மசாலா சோக்காத இறைச்சியா மாறிப் போயிருப்பாங்க.

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம்

பெரிதான வியாதிகள் இல்லாமல் வாழ்ந்த மாவோரியர்களின் வாழ்க்கையில் இந்த ஆங்கிலேயர்கள் உள்ளே வந்த போது இலவச இணைப்பாக வேறொரு விசயமும் உள்ளே வந்தது.?
அம்மை தொடங்கி சளி நோய்கள் கண்டகருமாந்திர நோய்கள் வரைக்கும் அத்தனையும் உள்ளே வந்து விட அதில் இறந்த மாவோரியர்கள் அநேகம்.

அப்புறமென்ன?  ஏற்கனவே வியாபாரத்தின் மூலம் வளங்களை கடத்த தொடங் கிய மாதிரி மாவேரிகளின் கட்டமைப்பு சிதைய ஆரம்பித்தது.  மெதுவா அவங்க மதமான கிறிஸ்துவம் பரவ ஆரம்பிக்க இப்ப பண்ட மாற்று முறை மாறி காசு பணமெல்லாம் புழங்க......................

ஆட்டம் பாட்டம் தான்.

மாவோரிகள் மேட் இன் ஆங்கிலேயர்களாக மாறிப்போன காலமிது. 

ஆங்கிலேயர்கள் உள்ளே இருந்தாலும் மாவோரியர்கள் குழுபோல் தான் உள்ளே தீவு முழுக்க பரவியிருந்தாங்க.  இப்படித்தான் 1833 ல் மாட்சிமை தாங்கிய மகாராணியின் ஆளுமைக்குள் உள்ள நாடுன்னு இந்த தொடக்க கால நியூசிலாந்தை மாற்ற வைக்க ஏற்பாடு நடந்தது. . 

இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னன்னா மாவோரிகளின் வாழ்க்கையில் உள்ள பழக்க வழக்கங்களும் இந்தியப் பழக்கவழக்களும் பல இடங்களில் ஓரே மாதிரித்தான் இருக்கு.  ஒரே ஒரு பெரிய வித்யாசம் மட்டும் உண்டு.  

நாம் எப்போதும் மத்தவங்களை வந்து முதுகு மேலேயும் உட்கார்ந்துக் கப்பான்னு சொல்லுவோம். ஆனால் மாவோரியர் அந்த விசயத்தில மட்டும் ரொம்பவே வித்யாசமா இருக்காங்க.  முதுகு மட்டுமல்ல உள்ளே வந்த மற்ற நாட்டு மக்களின் முட்டிக்காலையும் சேர்த்து சூப்பு வச்சு குடிச்சுருக்காங்க.

1975 ல் கடன் வாங்கி கல்யாணம் மாதிரி சுயதேவைகள் பூர்த்தி செய்ய கடன் வாங்கித் தான் நாட்டை மேலே கொண்டு வந்துருக்காங்க. தொடக்கத்தில் இது அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்தாலும் தம் கட்டி கொஞ்ச கொஞ்சமா மேலே வரத் தொடங்க நம் கண்களுக்குத் தெரிவது தான் நியூசிலாந்து நாட்டின் இன்றைய வளர்ச்சி. 

ஆனால் நம்ம தலைவர்கள் மக்கள் நலம் என்பதை தன் குடும்ப நலம் என்று நினைத்துக் கொண்டவர்கள்.  நியூசிலாந்து தலைவர்கள் பொது மக்கள் நலம் என்று பார்க்க இன்றைக்கு இந்தியாவின் கடவுச்சீட்டை காகித தாள் போல மற்ற நாடுங்க பார்க்கின்ற நிலைமை.

நியூசிலாந்தில் வெள்ளையர்கள் மட்டுமே குடியுரிமை பெற தகுதியுடைவர்கள் என்கிற நிலைமையை உடைத்த இந்தியர்கள் யார் தெரியுமா? நம்ம குஜராத் மக்கள்.

உள்ளே நுழைந்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் வைத்து தங்களை வளர்த்துக் கொண்டது முதல் காரமான சமோசா சாப்பிடுவது வரைக்கும் மக்கள் சும்மா ஜம்முன்னு தங்களை ஆழ அகல நிலைநிறுத்திக்கிட்டாங்க. 

இப்பக்கூட பாருங்க.  ஆஸ்திரேலியாவில் ஒரு குஜராத் மாணவன் அடி வாங்கி னான் என்றால் எப்படி பொங்குறாங்க?  ஆனால் நம்ம தமிழர்கள் எங்கேயாவது அடிவாங்கினா நம்மாளுங்க கடிதப் போக்குவரத்தை ஆரம்பிச்சுடுறாங்க?
என்ன செய்வது. நம்ம தமிழர்கள் போற இடத்தில் சொத்துக்களை சேர்க்கிறதும் இல்லை.  சொகமான வாழ்க்கையையும் எதிர்பார்க்கிறதும் இல்லை.                       

" இன்றைக்கு செத்தா நாளைக்கு பால்ன்னு " நடிகர் விவேக் சொன்ன தத்துவத்தை கெட்டியா பிடிச்சுக்கிட்டு வாழ்ந்து செத்தும் போயிடுறாங்க.

1987 பிஜீத் திவில் ராணுவப் புரட்சி நடக்க உள்ளேயிருந்த 51 சதவிகித இந்தியர் கள் கனடா இங்கிலாந்து ஆஸ்திரேலியா முதல் இந்த நியூசிலாந்து வரைக்கும் புலம் பெயர ஆரம்பித்தனர். யாரு வேண்டுமானாலும் உள்ளே வாங்க ஆனால் ஒரே ஒரு நிபந்தனை? .  உள்ளே வந்தா கையில் 250 000 டாலர் உங்க கையில வச்சுருக்கனும்ன்னு நியூசி அரசாங்கம் அறிவிப்பு செய்ய வேறு யாருக்கிட்ட காசு இருக்கும்., 

குஜராத் மக்கள் குஜாலா செட்டிலாக ஆரம்பிச்சாங்க.

1997 ஹாங்காங் சீனா கைக்கு போன போது அரை மில்லியன் டாலர் முதலீடு செய்யத் தயாராய் இருக்குறவுங்க இங்கே வரலான்னு சொல்ல சப்பைக்கு பயந்த மக்கள் தட்டு முட்டு சாமானோடு நியூஸிக்கு வர ஆரம்பிக்க இன்னும் கொஞ்சம் ஜனத்தொகை கூட ஆரம்பித்தது.

இதைப் போலவே கொரியா ஜப்பான் என்று தொடங்கி சப்பை மூக்கு சீனா வரைக்கும் உள்ளே நுழைந்து இன்றைக்கு உலக முக்கிய மொத்த தொழில் துறைகளையும் சப்பையாகவே நசுக்கி விட்டுட்டாங்க..


இந்த நாட்டுல வடக்கு தெற்குன்னு ரெண்டு தீவு உண்டு.  

ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எந்திரப் படகுகள் மூலமாத்தான் பயணம் செய்யனும்.. விளையாட்டுல சுற்றுலாவுல , இயற்கையை நேசிக்க அதிக ஆர்வம் செலுத்துற நியூஸி மக்கள் நியூசிலாந்து என்ற சொர்க்கத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

தனி மனிதனும் தன்னை உணர்ந்து அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதும் ஒரு காரணம்.  தேர்ந்தெடுத்து வரும் தலைவர்களும் மக்களை ஏமாற்றாமல் நாட்டை முன்னெடுத்துச் செல்வதும் மற்றொரு காரணம்.

 டபுள் என்ஜின் படகு என்றாலே காற்றை கிழித்துக் கொண்டு தானே செல்லும்.  அது தான் நியூசிலாந்து இந்தியாவை விட பல மடங்கு வருடங்கள் முன்னால் சென்று கொண்டுருக்கிறது.

இந்த நியூசிலாந்து நாட்டில் நீங்க படகு மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போகும் போது உங்களோட இன்னோரு நண்பரும் கூடவே வருவாங்க. வேறு யாரு நாம் டால்பின் பங்களாளிங்க தான். 

தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு நம்ம சரோஜாதேவியம்மா கண்க்கா பாட்டுபடிக்கிட்டு பக்கத்தில் தொடர்ந்து வரும் டால்பீன் மீனகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு போனா எப்படியிருக்கும்-

நினைச்சுப்பாருங்க. 

புத்தகத்தை ஒரு முறை படிச்சு பாத்துட்டு பொட்டி சட்டிகளை கட்டிகிட்டு புள்ளகுட்டிகள கூட்டிக்கிட்டு பொஞ்சாதியோட செல்வோமா??

விமர்சனம் முதல் பகுதி

நூலாசிரியர் வலைதளம்

சந்தியா பதிப்பகம் வலைதளம்

சந்தியா பதிப்பக முகவரி

சந்தியா பதிப்பகம்
ப,எண் 57 53வது தெரு,
9 வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
தொலைபேசி 044 24 89 69 79
விலை 200 ரூபாய்.
பக்கங்கள் 352

9 comments:

Chitra said...

இன்றைய நியூசிலாந்து சொர்க்கம் போல் இருக்கிறதே என்று அங்கலாய்ப்பவர்கள் இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் நம்ப முடியாத அளவிற்கு நமக்குத்தந்துள்ள இத்தனை வரலாற்றுத் தகவல்களை படிக்கும் போது "இந்த சொர்க்கம் சும்மா வரவில்லை" என்று நினைக்கத் தோன்றுகிறது.


....... எல்லா நாடுகளுக்கும் வரலாறு உண்டு..... வரலாற்றில் இருந்து எதை கற்று கொண்டு எப்படி வழி வகுத்து வந்து இருக்கிறார்கள் என்பதை பொறுத்து தற்போதைய நிலை உள்ளது....
God willing, I will be blessed to visit New Zealand sometime. :-)

ஹேமா said...

ஜோதிஜி...எப்ப்படித்தான் இப்படி விமர்சித்து நிறைய எழுதமுடிகிறது உங்களால் !

மதம்,இனம்,இரத்தம்,பொறாமை,துப்பாய்க்கி,
வியாதிகள் இப்படியே வாசிக்க வாசிக்க எனக்கு மனம் முழுதும் என் நாட்டுக்குள்ளேயே சுழன்று சுற்றுகிறது.என்ன அதிசயம் இது,என் நாட்டில் இல்லாததா.என் தேசத்தில் இன்று நடப்பது நியூசிலாந்தில் அன்றே நடந்திருக்கிறது ஒரு அலட்சியம்கூட வருகிறது.

புத்தகத்தை உடனடியாகத் தேடிவாங்கி வாசிக்கத்தூண்டும் விமர்சனம்.இது உங்கள் வெற்றி !

துளசி கோபால் said...

நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை, இப்படி ஒருத்தர் வரிவிடாமல் வாசிச்சு விமரிசனம் செய்வாருன்னு!!!!!

நன்றி ஜோதிஜி.

போற போக்கைப் பார்த்தால் ரெண்டாம் பதிப்பு வந்துரும்போல:-))))))

மீண்டும் நன்றி.

virutcham said...

ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. மாவோரிகளைப் பற்றி நிறைய சொல்லி இருக்கீங்க. ஆனால் அவங்க யாருன்னு சொன்னா மாதிரி தெரியலையே. பாலினீஷீயன்கள் தான் அவங்களா?. இல்லை சஸ்பென்ஸ் புக் படிச்சுதெரிஞ்சுக்கனுமா?

ஜோதிஜி said...

சித்ரா நீங்க நியூசிலாந்தில் இருப்பதாக நான் கனவு கண்டேன். கவலை வேண்டாம். உங்கள் ஆண்டவர் அருள் உங்களிடம் வரும். மகிழ்ச்சி தானே.

பொறுமையை ரொம்பவும் சோதித்து விட்டேனா ஹேமா? வேறு வழியில்லை இது போன்ற விசயங்கள் எப்பொழுதோ யாருக்கோ உதவக்கூடும். அதனால் சற்று பெரிய பதிவாக வந்து விட்டது.

டீச்சர் புதிய பாதை அப்படிங்ற பெயர் நடிகர் பார்த்திபன் வாழ்க்கையில எந்த அளவுக்கு முக்கியத்துவமே அது போல துளசி தளம் மற்றும் துளசி கோபால்ங்ற பெயர் என் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத மறக்க கூடாத பெயர். இது என் கடமை. எனக்கே நியூசிலாந்து மேல் ஒரு இனம் புரியாத ஆர்வம். நீங்க சொன்னது மாதிரி நியூசிலாந்திலும் இருப்பவர்கள் மனிதர்கள் தான். அங்கும் தவறுகளும் சகிக்கமுடியாத மனித பொறாமை விசயங்களும் உண்டு. ஆனால் ஓப்பீட்டளவில் மிக மிக குறைவு. சரிதானே?
விரைவில் பணிகள் முடிந்து நாட்டுக்குச் செல்ல வாழ்த்துகள்.

விருச்சிகன் மூன்று பதிவாக எழுதிய இந்த விமர்சனத்தில் வந்த கேள்விகளில் உங்கள் விமர்சனம் மிக பொக்கிஷமானது. தெளிவா உணர்ந்து படித்து இருக்கீங்க. உண்மைதானே? ஓரளவிற்கு சுட்டிக் காட்டும் போது இஇஇஇஇம்மமாம் பெரிய நீளமாக வந்து விட்டது. இன்னமும் ஒவ்வொன்றையும் சுட்டிக் காட்டிக் கொண்டு சென்றால் டீச்சர் கம்மை எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள் தானே?

நன்றி நண்பரே.

Thenammai Lakshmanan said...

நம்ம ஏழரை பகவான் ஆங்கிலே யர்கள் உள்ளே வருகிறார்கள். //

ஹாஹாஹா விமர்சனம் சூப்பர்.. சூப்பு போல சூடா இருக்கு ஜோதிஜி.. இதுதான் உங்க டச்..:))

Anonymous said...

சூப்பரா இருக்குங்க..இது மாதிரி தெளிவான நடையில வரலாறு படிக்கிறது அற்புத அனுபவம்

ப.கந்தசாமி said...

புத்தகத்தை தரவிறக்கி வைத்திருக்கிறேன். மெதுவாகப்படிக்கவேண்டும். ஆர்வத்தைத் தூண்டியதிற்கு நன்றி. உங்கள் விமர்சனம் சூப்பர்.

ப.கந்தசாமி said...

என்னுடைய கமென்ட் பதிவு மாறி விட்டது. நான் தரவிறக்கியது ஹாலிவுட் பாலாவின் ஈபுக் (கார்ட்டூன் பற்றியது). இன்று அதிகாலையிலேயே இந்த இன்டர்நெட் குளறுபடி பண்ணிவிட்டது.

அந்தக் குளறுபடியும் ஒரு நன்மையே பயந்துள்ளது. துளசி கோபால் அவர்களுடைய நியூஜிலாந்து புத்தக விமர்சனத்தைப்படிக்க வாய்ப்பு கிட்டியது என் அதிர்ஷ்டமே. புத்தகங்களை வாங்கும் ஆர்வம் குறைந்து விட்டது. காரணம் இடநெருக்கடி. இரண்டாவது புத்தகம்தான் இருக்கிறதே, சாவகாசமாகப் படித்துக்கொள்ளலாம் என்கிற மனப்பான்மையினால் பல புத்தகங்கள் அலமாரியில் அலங்காரமாக மட்டுமே இருக்கின்றன. அதுவும் இல்லாமல் ஆயுத பூஜைக்காக அவை எல்லாவற்றையும் எடுத்து துடைத்து மீண்டும் அடுக்கி வைக்கவேண்டும். நானாகச் செய்யமாட்டேன். அம்மையாரின் நச்சரிப்பு காலையில் எழுந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. அதனால்தான் இந்த வேலை.