Friday, March 12, 2010

வெறியின் வெற்றி சிதறிய ராஜீவ் காந்தி

சென்னையில் சிவராசன் விரும்பிக் கேட்ட இரண்டு சக்கர வாகனம் (காவாஸகி பஜாஜ்) உள்ளுர் இருந்தவர் பெயர் வைத்து வாங்கியாகி விட்டது.  இதன் மூலம் இரண்டு பலன்.  நினைத்த இடத்திற்கு விரைவாக செல்ல முடியும்.  மற்றொன்று தேவைப்படும் போது இதன் பேட்டரியை பல விதங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  இத்துடன் இலவச இணைப்பு போல் தனியாக வாங்கிய கார் பேட்டரி என்பது வயர்லெஸ் தொடர்பு இயக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.  மனதில் வைத்திருந்தபடியே மொத்த பூர்வாங்க ஏறபாடுகளையும் முடித்தாகி விட்டது.. இலங்கை என்றால் எதற்கும் ஒத்திகை தேவையில்லை.  வெடித்து சிதறும் காட்சி உறுதியாய் ஊடகத்தில் தெரியவரும்.  இது இந்தியா.  ஓத்திகை வேண்டும் என்ற நிணைத்த சிவராசன் நந்தனத்தில் விபி சிங் பேசிய பொதுக்கூட்டத்திற்கு மே 7 (1991) இந்த ஐவர் கூட்டணியுடன் சென்றார்.

சிவராசன் எப்போதும் போல குர்தா உடையில் பத்திரிக்கையாளர் வரிசையில் அமர்ந்து இருந்தார். இதற்கென்று ஏற்கனவே நகலாக உருவாக்கப்பட்ட பல ஆங்கில தமிழ் பத்திரிக்கைகளின் முகவரி ஒட்டிய அடையாள அட்டை பையில் தயாராக இருக்கும். ஏற்கனவே பேசி வைத்திருந்த திட்டப்படி சுபா, தணு இருவரும் விபி சிங் அருகே சென்று கொண்டு போயிருந்த மாலையைப் போட வேண்டும்.  இதை நளினி புகைப்படமாக எடுக்கப்படவேண்டும்.  ஆனால் கூட்ட நெரிசலில் இருவரும் விபி சிங் அருகே மிக அருகே செல்ல முடிந்த போதிலும் அதை நளினியால் புகைப்படமாக எடுக்க முடியவில்லை.  ஆனால் அப்போது சிவராசன் நளினி மூலம் உணர்ந்து கொண்டது தமிழ்நாட்டில் எந்த பொதுக் கூட்டத்திற்கும் வரும் தலைவர்கள் அருகில் செல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி உழைப்பும் உள்ளுர் சாமிகளை கவனித்தும் இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டார்,  இப்போது வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும்.  ஆனால் அன்றே அவர்களுக்கு உறுதியாய் தெரிந்து விட்டது.  நாம் போகும் பாதை வெற்றிப்பாதை தான்.  சந்தேகம் என்பதே வேண்டாம்.  கம்பியில்லா தகவல் தொடர்பில் ஒத்திகையின் வெற்றியை உடனடியாக சம்மந்தவர்களுக்குக்கூட தெரிவித்தாகி விட்டது.

அவர்கள் அப்போது யாழ்பாணத்தில் சொன்னது ஈழத்தவராக இல்லாவிட்டாலும் ஆபிஸர் பெண்மணி (நளினி) ஒத்துழைப்பு மிக அற்புதம் என்ற செய்தியை கடத்தியிருந்தார்கள். இனி என்ன?  நேரிடையாக மே 21 செல்ல வேண்டியது தான். மே 20 சிவராசன் சம்மந்தபட்ட மொத்த கூட்டணியினரையும் பாக்யநாதன் வீட்டுக்கு வரவழைத்து சிறிய கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார்.  என்ன செய்ய வேண்டும்?  என்ன செய்யக்கூடாது? என்பதை தெளிவாக விளக்கிவிட கூட்டம் இனிதே கலைந்து விட்டது.

இந்த இடத்தில் நளினியைப் பற்றி நாம் புரிந்து கொள்ளவேண்டும்.  காரணம் நளினியை புலனாய்வு குழுவினர் கைது செய்த போது இரண்டு மாத கர்ப்பவதி. சிறையிலேயே பிறந்த குழந்தை, பின்னால் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருந்தவர்கள் மூலம் வெளிநாட்டுக்கு குழந்தை வளர அனுப்பப்பட்டது. வளர்ந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாமல் சிறைக்கூடத்தில் வாடிக்கொண்டுருப்பவர். அந்த குழந்தைக்காகவே தன்னுடைய மீதி நாட்கள் நன்றாக அமையவேண்டும் என்று தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஒரு மனித வாழ்வில் பாதி நாட்களை சிறையிலேயே கழித்தவர். தமிழ்நாட்டில் நடந்த வெடிகுண்டு வழக்குகளில் கூட எத்தனையோ அப்பாவி மக்களை கொன்றவர்கள் கூட அரசாங்க விடுமுறை முதல் மற்ற அத்தனை சலுகைகளையும் கணக்கில் கொண்டு 9 முதல் 10 வருடங்களில் வெளியே வந்துள்ளனர்.  ஆனால் இவர் இன்னமும் வெளியே வர முடியவில்லை.

வெளியே கொண்டு வர வாய்ப்பு இருந்தும், இவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றிய கருணை கூட இவரின் கண்ணீர் வாழ்க்கையை முடிவுக்கு இன்னமும் கொண்டு வரமுடியவில்லை.  இவர் விசயத்தில் தான் வெட்டி விளக்கெணய்கள் வீரவேசமான அறிக்கை என்ற அக்கப்போர்கள் நடத்திக்கொண்டு நாங்களும் ராஜீவ் விசுவாசி, இந்திய தீவிரவாதம் என்று பொரியல் வழித் தோன்றலாக தங்களைக் காட்டிக்கொண்டுருக்கிறார்கள். முடிவு எடுக்க வேண்டியவர்கள், முடியும் என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் கூட கருப்பு மறுபடியும் பிடித்து விடுமோ என்ற     " ராங் சென்டிமெண்ட்" வைத்துக்கொண்டு முடிவெடுக்காமல் "தேமே" என்று வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இவர் செய்த வேலையென்பது முருகனுடன் உருவான காதல் காரணமாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.  தெரிந்து அவர்களுடன் உடந்தையாக இருந்தாரே தவிர உண்மையான குற்றவாளி அல்ல.  இவர் கைதுக்குப் பிறகு தான் திட்டத்தின் அடித்தளமே புலனாய்வு குழுவினருக்கு புரிந்தது.  மேலும் பிடிபட்டவர்கள் ஒவ்வொருவரும் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல வாக்கு மூலம் கொடுத்தார்களே தவிர நளினி அளவிற்கு முழுமையாக ஒப்புவித்தவர் எவருமில்லை. அப்படியே இபிகோ சொல்லும் உடந்தைக்கு உண்டான தண்டணை என்பதை சட்டம் நிர்ணயித்ததைவிட அதிகப்படியாகவே பெற்றும் விட்டவர்.  பகலில் பட்டாசு வெடித்து கொண்டாடி காசாப்பு கடை கசாப்புக்கு கூட பாதுகாப்புக்கு என்று 33 கோடி செலவழித்துள்ளார்கள். ஆனால் இன்னமும் உள்ளே அமைதியாக வாழ்ந்து நம்பிக்கையை மட்டும் சுமந்து கொண்டு நெருப்பு நாட்களை கழித்துக்கொண்டுருப்பவர்.. தனக்கு கிடைத்த தண்டனைக் காலத்தைக்கூட வீணாக்காமல் பல பட்டய மற்றும் பட்டப்படிப்புகளை படித்து முடித்து சாதனை புரிந்தவர்.
நளினி செய்த முதல் பாவம் முருகனிடம் மனதை பறிகொடுத்தது.  முருகனால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்.  தாயிடம் இருந்து வெளியே வந்தவர் தேடிய அன்பு முருகன் மூலம் கிடைத்ததால் தன்னை மறந்தவர்.  முருகன் மேல் உருவான காதலால் சிவராசன், சுபா, தணுவுடன் பழகியவர்.  இந்த மூளைச்சலவை தான் மே 21 அன்று சிவராசன் " நீங்கள் இன்று உங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு வந்து விடுங்கள் " என்றதும் அதே போல் அரை நாள் அலுவலக விடுமுறை எடுக்க வைத்தது.  இவரின் அம்மா பத்மா செவிலியராக (NURSE) வேலைப்பார்த்தவர்.  பணிபுரிந்த மருத்துவ மனையில் புகைப்பட நிறுவனம் நடத்திக் கொண்டுருக்கும் சுபா சுந்தரம் என்ற இதில் பின்னால் வரப்போகும் பிரபல்யத்தின் மனைவி குழந்தைபேறுக்காக வந்த போது பழகிய நளினியின் அம்மா, அந்த தொடர்பு மூலம் தன்னுடைய மகன் பாக்யநாதனை 1987 தொடக்கத்தில் சுபா சுந்தரம் நிறுவனத்தில் சேர்த்து விட்டார்.  சுபா சுந்தரம் விடுதலைப்புலிகளின் ஆதரவு என்பது அணைவருக்கும் தெரிந்த ஒன்று.

அங்கு பாக்யநாதனுக்கு உருவான விடுதலைப்புலிகளின் வரிசையான தொடர்பு கடைசியில் தனியாக பிரிந்து வாழ்ந்து கொண்டுருந்த நளினி விடு வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது.  விடுதலைப்புலி இயக்க தொடர்புகளை உருவாக்கியவர் சகோதரர் பாக்யநாதன்.  அதன் மூலம் நளினியின் வீட்டுக்கு உள்ளே வந்தவர் முருகன். விடுதலைப்புலிகளின் இயக்க உளவுத்துறை வேலைக்காக இலங்கையில் இருந்து வந்தவர்.  இந்த முருகன் நளினி காதல் சிவராசனுக்கு பலவிதங்களிலும் உதவியதும் உண்மை. ஸ்ரீ பெரும்புதூருக்கு நளினியை உடன் கூட்டிச் செல்லவேண்டும் என்பது சிவராசனின் பல்வேறு திட்டமிடுதலின் அடிப்படையில் கூட இருக்கலாம்.  திட்டத்தை முழுமையாக தெரிந்தவர் காரியம் முடியும் தருணத்தில் வெளியில் இருந்தால் தவறாக முடியலாம் என்ற எண்ணமாகவோ, அவர்களின் மொத்த திட்டத்தின்படி எவரையோ ஒருவர் மாட்டிக்கொள்ள வைக்க என்பதாகவும் இருக்கலாம்.  ஆனால் தொடக்கம் முதல் நளினியிடம் சிவராசன் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்று தான்.  சுபா, தணு இருவரும் திட்டம் முடியும் வரைக்கும் எவருடனும் பேசிவிடக்கூடாது.  பேசினால் அவர்களின் தமிழ்மொழி காட்டிக் கொடுத்துவிடும்.  திடீர் என்று கூட்டத்தில் எவராவது பேசும்பட்சத்தில் நளினியை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்பதாகத்தான் இருந்தது. .
                                                            நளினி மகள் அரித்ரா
மே 21 இரவு, பாக்யநாதன் அன்று இரண்டாம் ஆட்ட திரைப்படத்திற்கு சென்று விட்டார்.  முருகன் இரவு சாப்பாடு முடித்து உறங்கப் போய் விட்டார்.  ஆனால் நளினியின் விதி சுபா வாயால் பேச வைத்தது. "துரோகி ராஜீவை கொன்று இன்று தணு புதிய சரித்திரம் படைக்கப் போகிறார். நீங்களும் வாருங்களேன் " என்று சுபா அழைத்தும் சற்று கூட யோசிக்காமல் அவர்களுடன் கிளம்பினார்.  ஆனால் கிளம்புவதற்கு முன் சுபா மாட்டிவிட்ட தணுவின் உடையில் உள்ளே இருந்த புதிய வித்யாசமான ஆடைகளை பார்த்தவர். அதன் முழு வீர்யம் அப்போது உணர்ந்தாரா என்பதும்,  அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் யோசிக்காமல் கிளம்பினார். இளங்கன்று பயமறியாது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு காதலுக்கு கண் இல்லை என்பதும் இந்த துக்க சரித்திரத்தின் தொடக்கமாக போய்விட்டது.

நளினி வில்லிவாக்கம் வீட்டில் இருந்து குழுவினர் கிளம்பிய நேரம் பிற்பகல் 3 மணி. நால்வரும் பாரிமுனைக்கு வந்த நேரம் 4.30,  அங்கு இவர்கள் வருகைக்காக காத்துருந்த புகைப்படம் எடுக்க தயாராய் இருந்த ஹரிபாபு பூம்புகார் கடையில் வாங்கிய சந்தன மாலையுடன் ஸ்ரீபெரும்புதூர் வந்து இறங்கிய போது நேரம் ஏறக்குறைய 7.30 (?).  ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அத்துவான பொட்டல்காடு.  செங்கல்பட்டு மாவட்டம் முதல் காஞ்சிபுரம் வரைக்கும் இன்று பரவியுள்ள வெளிநாட்டு வணிகத் தொடர்பு நிறுவனங்கள் எதுவும் வராத காலம். இவர்கள் வந்து இறங்கிய போது ஏறக்குறைய இருட்டாகத் தான் இருந்துருக்கும். கூட்டம் வந்து சேராதா என்று காத்துக் கொண்டுருப்பவர்களுக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் சந்தோஷமளிப்பவர்கள் தானே. வந்த இந்த ஐவர் கூட்டணியினரை அங்கேயிருந்தவர்கள் கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை..  அரை குறை இருட்டும் அப்போது இவர்களுக்கு சாதகமாகவே இருந்துருக்கும். இதற்கெல்லாம் மேல் பல தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அங்கு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சமாச்சாரங்கள் அத்தனையும் நகைச்சுவை போலத்தான் இருந்தது.  முள்ளிவாய்க்கால் இறுதி கட்ட போருக்கு தன்னால் ஆன முழு ஒத்துழைப்பையும் வழங்கி தன்னுடைய பங்களிப்பையும் அளித்த அப்போதைய ஐ.பி உயர் அதிகாரி நாராயணன் துறை மூலம் வழங்கப்பட்ட ரகசிய அறிக்கையில் விடுதலைப்புலிகள் குறித்து எந்த புரிந்துணர்வும் உருவாக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். உள்ளே வந்ததும் தணு,சுபா,நளினி மூவரும் முதலில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்றார்கள். சிவராசன், ஹரிபாபு வேறு பக்கம் பிரிந்து போய் விட்டனர்.

ராஜீவ்காந்தி பயணித்த விமானம் சென்னை மீனப்பாக்கம் விமான நிலையத்தை வந்து அடைந்த நேரம் 8.20,  ராஜீவ் காந்தியுடன் குண்டு துளைக்காத (?) கார்,  மீனம்பாக்கத்தை விட்டு வெளியே வந்து ராஜீவ் பயணித்த காரில் பயணம் செய்தவர்கள், வாழப்பாடி ராமமூர்த்தி, வேட்பாளர் மரகதம் சந்திரசேகர் பிரத்யோக பாதுகாப்பு அதிகாரி இவர்களுடன் பேட்டி கேட்டுருந்த கல்ப் நியூஸ், நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர்கள்.

ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்து மொத்த பொறுப்பையும் ஏற்றுருந்தவர் மரகதம் சந்திரசேகரின் பிரத்யோக உதவியாளர் ஏ.கே.தாஸ்.  எவரெல்லாம் ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி, நடந்து வரும் போது அவருடன் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர்கள், மாலை போட அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் என்பது வரைக்கும் மிகவும் பரபரப்பாக பட்டியல் தயாரித்து அலைந்து கொண்டுருந்தார். அதற்கும் மேலே அங்கு சேர்ந்து இருந்த கூட்டத்தை நிலை நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுருந்த சங்கர் கணேஷ் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டுருந்தது.

ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் வந்து இறங்கியதும் திட்டமிட்டபடி சாலையின் தொடக்கத்தில் இருந்த இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட வேண்டும்.  அதனைத் தொடர்ந்து நடந்து வந்து தரையில் போட்டுருந்த சிவப்பு கம்பளம் வழியே நடந்து மேடைக்குச் செல்ல வேண்டும்.  செல்லும் போது கம்பளத்தின் ஓரத்தில் நின்று கொண்டுருக்கும் முக்கியமானவர்களை சந்திப்பதும், அவர்கள் அணிவிக்கும் மாலை மரியாதை ஏற்றுக்கொண்டு பொதுக்கூட்ட மேடையை அடையவேண்டும்.  ஓரமாக போட்டுருந்த தடுப்பு கட்டைகளுக்குப் பின்னால் பொதுமக்கள் கூட்டம்.

வேட்பாளர் மரகதம் சந்திரசேகரரின் மகள் லதா பிரியகுமார்.  இவர் உதவியாளர் பெயர் லதா கண்ணன். லதா கண்ணனின் அப்பா ஒரு கவிதை எழுதி அதனை ஹிந்தியில் மொழிபெயர்த்து வைத்திருந்ததை மகள் கோகிலா மூலம் வரும் ராஜீவ் காந்தியிடம் வாசித்துக்காட்ட சிறப்பு அனுமதி பெற்று வரிசையில் காத்து இருந்தார்கள். காத்திருந்த மொத்த 23 பேர்களில் இந்த கோகிலா தவிர மற்ற அணைவரும் ஆண்கள்.  தணு இப்போது இந்த கூட்டத்தில் இல்லை.  இந்த 23 பேர்களில் மூவர் மட்டும் மாலை போட அனுமதி பெற்றவர்கள். மற்றவர்கள் அனைவரும் உரையாடலுக்கு அனுமதி பெற்றவர்கள்.  இந்த சடங்குகளை முடித்து விட்டு ராஜீவ் காந்தி நேரிடையாக மேடைக்குச் செல்ல வேண்டும்.

உள்ளே பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு காவல் துறை தலைமை அதிகாரி ராகவனுக்கோ எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டுருந்தது.  பாதுகாப்புக்காக ஈடுபட்டுருந்த காவல்துறையினரின் எண்ணிக்கை வெறும் 300 மட்டுமே.  அத்துவான காட்டில் அப்போது உருவாக்கியிருந்த திடீர் வெளிச்சம் மட்டுமே உறுதுணையாய் இருந்தது. இதுவும் திடீர் என்று நின்று போனால் கும்மிருட்டு தான்.  இதற்கிடையே தொண்டர்கள் என்ற பெயரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை குளறுபடி செய்து கொண்டுருந்தனர்.  எவரையும் திருப்திபடுத்த முடியவில்லை.  அங்கிருந்த எவருமே காவல்துறையினர் சொல்வதை கேட்கும் நிலையிலும் உத்தரவுகளுக்கு கீழ்படியும் சூழ்நிலையும் அங்கு நிலவவில்லை.

சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா தலைமைப்பொறுப்பில் பணியில் இருந்தவர். இவருக்கு மேல் அதிகாரி ராஜேந்திரன். ராஜீவ் காந்தியை சந்திக்கும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி சந்திப்பை முடித்து வைக்க வேண்டும்.  அவருக்கு அணிவிக்கும் மாலைகளை துண்டுகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட வேண்டும்.  முறைப்படி முழுமையாக அதுவும் நடக்கவில்லை.  வரிசையில் நிற்பவர்களின் பெயர்கள் சோதிக்கப்பட்டு ஆவணமாக செய்துருக்க வேண்டும். இதுவும் செய்தபாடில்லை. ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் வந்து இறங்கிய நேரம் இரவு 10.10

உள்ளே நடந்து வந்து தொடக்கத்தில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை போட்டு முடிப்பதற்குள் ஓரளவிற்கு ஓழுங்கு படுத்தியிருந்த கூட்டமும் மொத்தமும் கலைந்து அவரவர் முண்டியடித்துக் கொண்டு ராஜீவ் காந்தியை நோக்கி முன்னேறினர். பொறுப்பில் இருந்த தாஸ் கொடுத்த பட்டியலை வைத்துக்கொண்டு ஒரு சிலரை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்தனர். ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டம் திமுதிமுமென்று திசைமாறி மொத்தமாக உருமாறியிருந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டு அப்போது கவிதை படிக்க காத்திருந்த கோகிலா பின்னால் வந்து தணு நின்று இருந்தார். இந்த சந்தோஷ தருணத்தில் இருந்த கோகிலாவோ அவர் அம்மாவோ அப்போது தணுவை கவனிக்கும் சூழ்நிலை இல்லை.  தணுவுக்கு மொத்தமும் சாதகமாகி விட்டது.   ராஜீவ் காந்தி தன் அருகே வருவதற்கு காத்துக்கொண்டுருந்தார் தணு. கவனிக்கும் தூரத்தில் சிவராசன். அதற்கும் சற்று தொலைவில் சுபா, நளினி. இவர்கள் அத்தனை பேர்களையும் வேறொருவரும் அங்கு கவனித்துக்கொண்டுருந்தார். அவரை சுபா, தணு,ஹரிபாபு எவருக்குமே தெரியாது.

உடன் வந்த அயல்நாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்து முடித்து விட்டு பயணித்து வந்த காரை விட்டு இறங்கிய ராஜீவ் காந்தி அவர்களை வேறொரு காரில் அனுப்பி விட்டு நடந்தார்.  உடன் வந்த வாழப்பாடி ராமமூர்த்தி மேடையை நோக்கி முன்னேறிச் சென்று விட்டார். வந்து இறங்கிய போது வரவேற்ற கருப்பையா மூப்பனார் இந்திரா காந்தி சிலைக்கு மாலையிட்ட நிகழ்ச்சி முடிந்ததும்,  ராஜீவ் காந்தியை மரகதம் சந்திரகேசரருடன் அனுப்பி விட்டு மெதுவாக நடந்து வந்து கொண்டுருந்தார்.

ராஜீவ் காந்தியுடன் வந்து கொண்டுருந்த மரகதம் சந்திரசேகர் வரிசையில் நின்று கொண்டுந்த ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொண்டு வந்தார். சால்வை போட்ட தொண்டர் ஒருவர் ராஜீவ் காந்தி கையை பலமாக பற்றிக்கொண்டு விட மறுக்க அப்போதைய அந்த சூழ்நிலை சற்று தர்மசங்கடத்தை உருவாக்கியது.  அங்கிருந்த வீடியோ புகைப்படக் காரர்களுக்கு தேவைப்படும் மின்சாரம் மேடையில் இருந்து வந்து கொண்டுருந்ததால், மின்சாரம் இல்லாத சூழ்நிலையில் எவரும் இந்த நிகழ்வுகளை புகைப்படம் எடுக்க முடியாமல் கருவிகளை நிறுத்தி விட்டு அமைதியாக இருந்தனர்.

ஆண்கள் பகுதியின் அறிமுகம் முடிந்ததும் இப்போது ராஜீவ் காந்தியை பெண்கள் வரிசையாக நின்று கொண்டுருக்கும் பகுதிக்கு மரகதம் சந்திரகேசர் அழைத்து வந்து அறிமுகத்தை தொடங்கியிருந்தார்.  அப்போது நடந்த சில வித்யாசமான சம்பவம் (?) ராஜீவ் காந்தி உடன் நடந்து வந்துகொண்டுருந்த மரகதம் சந்திரசேகர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு (?) மேடையை நோக்கி முன்னேறிக்கொண்டுந்தார்.  கவிதையை வாசித்து முடித்த கோகிலாவை தாண்டிய ராஜீவ் காந்தி தணுவை நெருங்கியிருந்தார்.  அப்போது தான் பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா தணுவைப் பார்க்க, பட்டியலில் இல்லாத இவரை ஒதுக்கித்தள்ள முன்னால் வர பாதி நீட்டிய சந்தனமாலையுடன் நின்ற தணுவை ஒதுக்க வேண்டாம் என்ற சாடையால் காட்டிவிட்டு அவர் போட்ட சந்தணமாலையை கழுத்தில் வாங்கிக்கொண்டார்.  அப்போது பார்க்கும் தொலைவில் நின்று கொண்டுருந்த சிவராசனை கண் ஜாடையால் நகரச் சொல்லிவிட்டு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டில் உள்ள முதல் பொத்தனை அமுக்கிவிட்டு ராஜீவ் காந்தியை வணங்குவதுபோல் குனிய இரண்டாவது பொத்தானும் அமுக்கப்பட்டது.

நடந்த நிகழ்வுகளை படங்களாக எடுத்த ஹரிபாபு கடைசியாக எதிர்பார்த்துக் கொண்டுருந்த இந்த படத்தை எடுக்க தயாராய் பார்வையை புகைப்படக்கருவி வழியே கூர்மைப்படுத்தினார். கூட்ட நெரிசலில் சரியாக எடுக்கப்படாமல் போய்விடுமோ என்ற அச்சம் உந்திந்தள்ள இன்னும் முன்னேறி உள்ளே வர அந்த அத்துவானக்காட்டு கருமையான இருட்டு திடீர் என்று உருவான தீப்பிழம்பையும், மனித கதறல்களையும் மௌனமாக உள்வாங்கி மீண்டும் அமைதியானது. 
கத்திய கதறல்களும்,  அலங்கோலமும், சிதைந்த உடல்களும், கருகிய வாசனையும், உருக்குலைந்த சடலங்களுக்கும் இடையே ராஜீவ் காந்தி எங்கே? என்று மேடையில் இருந்த வாழப்பாடியும், நடந்து வந்து கொண்டுருந்த மூப்பனாரும் கதறிக்கொண்டு வந்து தேடத் தொடங்கினர்.

10 comments:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

Great going...
best wishes...

Unknown said...

இது வெற்றியின் வெற்றி அல்ல இதுதான் தமிழருக்கு அட்டைப் புலிகளால் அடிக்கப்பட்ட சாவு மானி இவைகள் ஈன செயல்கள் செய்ய துடக்கும் மனித மிருகங்களின் சிந்தனைகளுக்கு சாவு மனி அடிக்கும். பதில் விடுதலைப் புலிகளுக்கு சாவு மனி அடித்து தமிழர்கள் நிம்மதியாக வாழவழி வகுத்த ராஜபக்சேக்கு நற்றி
mullaimukaam.blogspot.com

geethappriyan said...

மிகவும் அருமையாக எழுதப்பட்ட வரலாற்று நிகழ்வு.
அங்கு பணியில் இருந்த பல்லாவரம் இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் இறந்துவிட்டார்.
-------------
உங்கள் கட்டுரைகள் என்று வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் படித்து தெளிவு பெற மிக்க உபயோகமாயிருக்கும்

Thenammai Lakshmanan said...

எப்படி நிகழ்ந்தது என்று சிந்தித்திக்கொண்டே இருப்பேன் ஜோதிஜி இப்படி ஒரு கொடூர நிகழ்வு ...

இப்போது உங்கள் இடுகையின் மூலம் அங்கே இருந்தது போன்ற ஒரு அமானுஷ்ய உணர்வு..

யார் அந்த மற்றொருவர் ..?

திரு ஏஸ் said...

ரகோத்மனின் ராஜீவ்காந்தி கொலை புத்தகத்திலிருந்து அப்படியே காப்பி அடித்துள்ளீர்கள் , வாழ்க

சுடுதண்ணி said...

சம்பவத்தின் போது அங்கிருந்த உணர்வையும், பரபரப்பையும் உங்கள் எழுத்துக்கள் மனதில் உருவாக்குகிறது. அந்த மற்றொருவர் யார்னு சீக்கிரம் சொல்லுங்க....

ஜோதிஜி said...

ரகோத்மனின் ராஜீவ்காந்தி கொலை புத்தகத்திலிருந்து அப்படியே காப்பி அடித்துள்ளீர்கள் , வாழ்க.

இதைக்கூட ஒளிந்து கொண்டு தான் சொல்ல வேண்டுமா? தலைமை புலனாய்வு அதிகாரி திரு கார்த்திகேயன் (வாய்மையே வெல்லும்) எழுதிய புத்தகத்தை முக்கிய பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரகோத்தமன் பார்வைக்கும் கார்த்திகேயன் பார்வைக்கும் வித்யாசங்கள் வேறு. ஒரு மொத்த பார்வையிலும், மற்றொருவர் புலனாய்வு கோணத்திலும் சொல்லி இருக்கிறார்கள்.

நன்றி தமிழ், தேனம்மை, அறிவுத்தேடல், திருநாவுக்கரசு.

JKR உங்கள் பார்வையின் விமர்சனத்திற்கு நன்றி.

Guna said...

Hi, i donot know what you try to achieve from this story..! Please dont tell one side story being a common man we should see the same side justice..iam not justify anything here but i dnot like to appreciate this kind of one side support..Guna..

ஜோதிஜி said...

குணா நீங்கள் மொத்தமாக படிக்கும் போது பக்கச் சார்பா இல்லை வேறு ஏதுவுமா? என்று புரியலாம்?

Anonymous said...

அரித்ராவிற்காக வருந்துகிறேன். குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். =((

//இவர்கள் அத்தனை பேர்களையும் வேறொருவரும் அங்கு கவனித்துக்கொண்டுருந்தார். //
யாரவர்? தனு (ணு அல்ல) ஐ தடுக்க வந்த பொலீஸா?

//ராஜீவ் காந்தி உடன் நடந்து வந்துகொண்டுருந்த மரகதம் சந்திரசேகர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு (?) மேடையை நோக்கி முன்னேறிக்கொண்டுந்தார். //
கொஞ்சமல்ல ரொம்பவே ஃபிஷ்ஷியாக இருக்கு? மரகதம் சந்திரசேகர் மேல் ரொம்பவே சந்தேகம் வருகிறது.

மேலோட்டமாக வாசித்த போது ராஜீவின் கொலையை தர்ப்பரூபமாக நீங்கள் வடித்து அவருக்கான இரங்கல் போல குணாவுக்கு தோன்றி இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதை விட சில பின்னூட்டங்களும் ராஜிவ் கொலைக்கு வருந்துவதாகவே வந்திருக்கிறது. ராஜிவ் கொலை நடந்ததைப் பற்றிய விபரணமே இது. இதில் நடந்ததைத் தான் சொல்லமுடியும் என்பது புரியாமல் இல்லை. தொடருங்கள்.