Monday, November 23, 2009

பாதையின் முடிவு வதை

இலங்கைக்கு உள்ளே வந்த டச்சு,போர்த்துகீசியர்,ஆங்கிலேயர்களுக்கு வாய்ப்புகள் என்பது ஒரு முறை தான் வந்தது.  அல்லது உருவாக்கிக் கொண்டார்கள்.  . ஆனால் உள்ளே வந்த அத்தனை பேர்களும் தொடக்கம் முதல் தீர்க்கதரிசன பார்வைகள்.

அமைதியாக உள்ளே நுழைதல், வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்து இருந்தல், தவற விடாத வாய்ப்புகள், ஆளுமை,மதமாற்றம்,சுரண்டல்.

வந்தார்கள்.  வென்றார்கள்.  சென்றார்கள்.

அதிலும் ஆங்கிலேயர்கள் உலகமெங்கும் தான் பிடித்து வைத்திருந்த நாடுகளில் இருந்து வெளியேறிய போது உருவாக்கி விட்டுச் சென்ற வலை பின்னல்களை அத்தனையும் நம் மூளையில் உள்ள ந்யூரான்களின் வலைபின்னலை விட மொத்தத்திலும் சிறப்பானது.

இன்று வரையிலும் நம்மால் நீக்க முடியாமல் அல்லது நம்முடைய சுயநல அரசியல் வியாதிகள் தீர்கக விரும்பாமல் நம்முடன் நீக்கமற நிறைந்து இருப்பது.  அது தான் இன்றுவரையிலும் மொத்த அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வறுமைக்கோட்டுக்கு கீழே வைத்துள்ளது.

தொடக்க இந்திய சுதந்திர சரித்திரத்தில் பார்த்தீர்கள் என்றால் மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு என்று பிரிக்கப்படாமல் இருந்த போதிலும் கூட, முன்னால் வாழ்ந்த, உள்ளே இருந்த தமிழ் தலைவர்களாக இருந்தவர்கள், (மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன், தந்தை பெரியார், ராஜாஜி இன்னும் பல பேர்கள்) தமிழருக்காக, தமிழ் மக்களின் உரிமைக்காக என்று எத்தனை தான் தங்களுடைய பங்களிப்புகளை அளித்துக்கொண்டு இருந்தாலும் மொத்த இந்திய அளவில் எவருமே பெரும் புகழ் அடைந்ததாக சரித்திரம் ஏதும் சொல்லவில்லை.  இருந்தாலும்,  மிக குறைவான சதவிகிதம்.

அன்று முதல் இன்று வரையிலும் வடக்கு தலைவர்களின் உற்பத்தி தொழிற்கூடம்.  இன்று அவவ்வப்போது தலை காட்டினால் ஒரே அமுக்.

அதற்கென்று காரணம் அவர்களுக்கு கிடைக்காமலா இருக்கிறது? நம்மவர்களும் கால்குலேட்டர் எண்ணிக்கையில் கவனமாக இருக்கும் போது?

மகாத்மா காந்தி, நேரு முதல் இன்று வரையிலும் மொத்த இந்தியாவை வழி நடத்தியவர்கள் என்றவர்களும் சரி, இன்று வரையிலும் ஆண்டு கொண்டுருக்கும் அத்தனை பெரும்பான்மையான தலைவர்களை,  அவர்களின் வாழ்க்கையை உற்று கவனித்துப் பாருங்கள்.  பத்தில் ஏழு பேர்களுக்கு மேல் நாட்டுக்கல்வி, மேல்தட்டு வர்க்கம்.  உலகலாளவிய சிந்தனைகள் என்ற பெயரில் உழுத்துப்போன கொள்கைகள்.

உள்ளே உள்ள மக்கள் எப்படி வாழ்க்கிறார்கள்?  என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்று தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத தலைவன் என்பவனுக்கு நோபல் பரிசாக இருக்கட்டும், உயர்ந்த ரத்னா பரிசாக இருக்கட்டும்.  அத்தனையும் வெறும் காகிதம் தான்.

பத்துப் பைசாவுக்கு பிரஜோனமில்லாதது அவர்கள் பட்டயம் மட்டுமல்ல, அவர்கள் கொள்கைகளும் சிந்தனைகளும் தான்.

இன்னும் தெளிவாக யோசித்துப் பாருங்கள்?

அன்று முதல் இன்று வரையிலும் "எனக்கு காந்தியை பிடிக்காது" என்று சொல்பவர்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.  ஆனால் அவர் தொடக்கம் முதல் சொன்ன முக்கிய ஒரு கொள்கை  "கசங்காத வெள்ளைச் சட்டை சேவகர்கள்" கடைபிடிக்க இன்று வரையிலும் மனதில் கூட நினைத்து கூட இல்லை.

ஆமாம்.

ஆட்சியில், கட்சியில் இருப்பவர்கள் "அவஸ்யம் கிராமத்தில் சில நாட்களாவது வாழ்ந்து விட்டு வரவேண்டும்.  அப்போது தான் நீங்கள் ஆட்சி புரிய வேண்டிய உண்மையான விசயங்கள் உங்களுக்கு புரியும்" என்றார்.

ஏன்?

தீர்ககதரிசிகளின் கருத்துக்கள் தொடக்கத்தில் நமக்கு திகட்டும்.  ஏன் திட்டும் அளவிற்குத் தான் இருக்கும்.  ஆனால் அதன்படி வாழ மறுத்தால் எதிர்கால சந்ததிகள் திருடனுக்குச் சமமாகத் தான் வாழப்போகிறார்கள் என்று அர்த்தம். (பார்க்க-தரமான பக்கவாட்டில் உள்ள இந்திய தாய் நாட்டின் இன்றைய  தரம்) .

இன்று இருக்கும் இந்த மொத்த " தரமான " இந்திய நிலைமைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் பின் ஒருவராக சிறிது சிறிதாக உருவாக்கி இன்று நாட்டையும் உருக்குலைத்து, வாழ வேண்டிய ஒரு இனத்தையும் உருக்குலைக்காமல் விட மாட்டோம் என்று புழுத்த சிந்தனைகள் கொண்டவர்களின் கைகளில் வந்து சிக்கி உள்ளது.

இதே போல்,  இலங்கையில் வாழ்ந்த தொடக்க தமிழ் தலைவர்களுக்கும் மிகப் பெரிதான வித்யாசங்கள் இல்லை.

ஒரே ஒரு வாய்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு இலங்கை என்ற சிறிய தீவுக்குள் மேலைநாட்டினர் சாதித்த சாதனைகளையும் நாம் பார்த்தோம். மலைகளை கூலி மூலம் பசுமையாக மாற்றினார்கள்.  எதிர்கால சிந்தனைகளை வைத்து தமிழர்கள் சிங்களர்கள் என்று அன்றே பிரித்தும் வைத்தார்கள்.

ஆனால் இலங்கையின் தொடக்க காலத்திலும் சரி, ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலும் சரி, அப்போது வாழ்ந்த தமிழ் தலைவர்களுக்கு வாய்ப்பு என்பது ஆயிரம் மடங்கு இருந்தது என்பது கூட பொய்.  எண்ணிக்கையில் அடக்க முடியாத அளவிற்கு தமிழர்களின் கை ஓங்கியிருந்தது. அறிவாலும், ஆளுமையாலும் தமிழ்நாட்டின் உள்ளே வாழ்ந்த தமிழ் தலைவர்களை விட, பல மடங்கு மிக சிறப்பாக தன்னை தரத்திலும் அறிவாற்றல் மூலமாகவும் மிக மிகச் சிறப்பாக வாழ்ந்து சிறந்து இருந்தனர்.

இன்று வரையிலும் சின்னத் தனமாக புத்தியை வைத்துக் கொண்டுருக்கும் சிங்களர்கள் அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கு கீழ் தான்.

என்ன தான் ஆங்கிலேயர்களின் மூலம் பௌத்த மதம், சிங்களர்களின் நாடு என்று எத்தனை தரங்கெட்ட உரிமைகளை குறுக்கு வழியில் சென்று சிங்களர்கள் வாங்கி வைத்து இருந்தாலும் அந்த வாய்ப்புகளால் அவர்களுக்கு சல்லிப் பைசாவுக்கு பிரயோஜனம்  இல்லை. பொருளாதாரத்திலும், சிந்தனைகளிலும், மொத்த வாழ்க்கையிலும் தரங்கெட்ட வாழ்க்கை தான் வாழ்ந்தார்கள்.

இது மிகைப்படுத்தல் அல்ல,  மூன்றில் இருபங்கு அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேர்களுமே தமிழர்கள். மேலும் பின்னால் வரப்போகும் பண்டார நாயகா வரைக்கும் அத்தனை சிங்கள தலைவர்களும் "உறுதிப்படுத்தப்பட்ட" தமிழர்களின் கலப்பில் தான் வந்தவர்கள் தான். இதுவே இன்று வரையிலும் உங்கள் கண் முன்னால் காட்ட உதவும் பல அசிங்க உதாரணங்கள் உண்டு.

பின்னால் வரப்போகும் அத்தனை சிங்கள தலைவர்களின் பெயர்களை நன்றாக உற்று கவனித்துப் பாருங்கள்.  ஒரு பெயர் மட்டும் தான் ஊடகத்தின் வழியாக பார்த்து தெரிந்து கொண்டுருப்பீர்கள்.  ஒரு முழம் நீளத்திற்கு இருக்கும் அத்தனை பேர்களும் கிறிஸ்துவ பெயர்கள்.  யோசித்துப் பாருங்கள்.  மூலம் தமிழ். இடையில் கிறிஸ்துவம்.  இன்று சிங்கள பௌத்தம்.

இவர்கள் தான் சிங்களர்கள் தேர்ந்து எடுத்த தலைவர்கள்?  இன்று வரையிலும்.
" ஆசையே அழிவுக்கு காரணம்"  என்ற கொள்கை ஏன் பின்பற்ற முடியாமல் போனது?  உண்மையிலேயே கலப்பில்லாமல் வந்து இருந்தால் தானே முழுமையான மூலம் புரிந்து இருக்கும்.  அதனால் தான் பதவி ஆசையை மட்டும் எதிர்பார்த்து எதிர்பார்த்து இன்று ஒரு இனத்தையே நிர்மூலமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அன்று சிங்களர்கள் தமிழர்களுக்கு பல படி கீழே தான் வாழ்ந்தனர். இல்லையில்லை..  அவர்கள் வாழ்க்கை என்பது இயல்பாகவே அப்படித்தான் இருந்தது.  இது கூட சரியான வாசகம் அல்ல. அவர்களுக்கு இருந்த திறமைகள் அந்த அளவிற்குத் தான் அவர்களை உருவாக்கி இருந்தது. அன்றைய தமிழர்கள் அடைந்த பதவிகள் எதுவுமே குறுக்கு வழியில் சென்று அடைந்தது இல்லை.

பயணித்த பாதை முழுக்க பரவசம் தான். ஆனால் அவர்களால் போடப்பட்ட இறுதி லட்சியம் என்பது லட்சக்கணக்கான தமிழ் மக்களின் சாம்பல் மேட்டில் வந்து முடிந்துள்ளது.  

இறுதி என்பது வதையில் முடிந்துள்ளதை நிணைக்கும் போது தான் அவர்களின் மொத்த தராதரமும் நமக்கு பல விசயங்களை உணர்த்துகிறது.

கீழே உள்ள பட்டியலை படிக்கல் போல் கவனமாக பார்த்து தாண்டி வாருங்கள்.    காரணம் இவர்கள் அத்தனை பேர்களும் மெத்த படித்த அறிவாளிகள்,  மேல் தட்டு வர்க்கம்.  கோட்டு போன கணவான்கள்  தமிழன் என்ற பெயரில் ஆங்கிலேயர்களாக வாழ்ந்த அடிப்பொடிகள்.

அடிமை வேலையை மிக அக்கறையாகச் செய்து பெரு உவகை அடைந்து மேலே சென்றவர்கள்.

இன்றைய காலகட்டத்தில் "சிங்கள பேரினவாதம்" என்ற சொல் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது.  தொடக்கம் முதல் சிங்களர்கள் வாதம் செய்து எதையுமே சாதித்துக்கொண்டதே இல்லை.  எப்போதுமே வதம் தான்.  அது இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லை.  ஆனால் இன்றைய மூன்று சகோதர்களின் முன்னோர்கள் என்ற வரிசையில் சிங்களர்களின் உணர்ச்சிகளை மதம் என்ற பெயரில் தூண்டிவிட்ப்பட்டு அன்று தமிழர்கள் மேல் மொத்தமாய் அடக்கு முறையை ஏவி முதல் புண்ணியம் அடைந்தவர் (1910) பெயர் அனகரிகா தர்மபாலா.  

இதில் மற்றொரு பெரிய ஆச்சரியம் உள்ளது.  ஆமாம் இவர் மொத்த பிறப்பால் தமிழர்.    பௌத்த மதம் தழுவி தன்னை சிங்களராக மாற்றிக் கொண்டவர்.  இவரின் மற்றொரு சிறப்பு இன்றைய தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் உள்ள "வெடிகுண்டு சிறப்பு பேச்சாளர்கள்" போல் பல சிறப்புகளையும் பெற்றவர்.  சுருக்கமாகச் சொல்லப்போனால் இவர் பேசி முடிந்ததும் நான்கு உயிர்களின் ரத்தமாவது மண்ணில் சிந்தவில்லை என்றால்  சிறிய பேச்சாளர்களின் பட்டியலில் வந்து விடுவோம் என்று பயந்து இருப்பார் போல. அத்தனை சிறப்பாக சேவை செய்தவர்.

ஆனால்,  தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய "மக்கள் பிரதிநிதி" என்பது படித்தவர்கள் மட்டும் ஒட்டு போட்டு தேர்ந்து எடுக்கும் வழக்கமாக இருந்தது.  அன்றைய படித்த சிங்களர்களும் கூட ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுத்து பெரும்பான்மை பெற்றவர் (சர்.பொன்னம்பலம் இராமநான்) தமிழர் தான்.  ஓட்டு வித்யாசம் 664.

இதிலும் மற்றொரு சிறப்பு உண்டு.

ஓட்டு உரிமை பெற்ற படித்த தமிழர்களின் எண்ணிக்கை 1072.  சிங்களர்கள் 1659 பேர்கள்.

கடைசியாக முடியாட்சியுடன் இருந்த (தமிழர்) சிங்கள மன்னருக்கு (விக்ரம ராஜ சிங்கே) மூத்த மொழிபெயர்ப்பாளர் பொறுப்பில் இருந்த தமிழரின் பெயர் குமாரசாமி.

இவருடைய மகன் சர். முத்துகுமாரசாமி.  இவரும் தமிழர்களின் பிரதிநிதியாக இருந்தார்.  (இந்த சிறப்பான சர் என்ற பட்டத்தைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ள இந்திய சுதந்திர ரகஸ்யத்தில் காண்க) .

மற்றொரு ஆச்சரியம்.   இவர் அன்றைய விக்டோரியா மகாராணியை அடிக்கடி நேரில் சந்தித்து உரையாடும் உரிமை பெற்றவர்.  மேலும் ஒரு சிறப்பு அன்றைய பிரிட்டன் பிரதமர் (பெஞ்சமின் டிஸ்ரேலி) இவரை இங்கிலாந்திலேயே தங்கி, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அளவிற்கு ?

இவருடைய மகன் தான் சர்.பொன்னம்பலம் ராமநாதன்.

இவர் தான் மேலே பார்த்த சிங்களர்களின் ஓட்டுக்களையும் பெற்று ஜெயித்த சர். இராமநாதன்.

அன்று வெள்ளையர்கள் பணப்பயிர் பெரும் அளவில் பயிர்செய்வதற்காக கண்டியில் சிங்களர்கள் வாழ்ந்த பூமியை வலுக்கட்டாய்மாக பறித்தனர். அப்போது "வழிப்பறி கொள்ளையர்கள் போல வலுக்கட்டாயமாக கொள்ளை அடிப்பதா?" என்று சட்டசபையில் குரல் கொடுத்தவர் யார் தெரியுமா?

சர். பொன்னம்பலம் இராமநாதனின் மூத்த சகோதரர் சர்.பொன்னம்பலம் குமாரசாமி.  இதன் காரணமாக அடுத்த முறை ஆளுனரால் நியமிக்கப்படும் சட்டசபை உறுப்பினர் பதவி கிடைக்காமல் பதவி இழந்தார்.
ஈழத் தமிழர்களுக்காக "இலங்கை (சிலோன்) தேசிய காங்கிரஸ்" என்ற அமைப்பை (1919)உருவாக்கியவர் சர் பொன்னம்பலம் அருணாசலம்.இவர் தான் சிங்கள தமிழ் மாணவர்களுக்கு "பல்கலைகழகங்கள் வேண்டும்" என்று ஆங்கிலேயர்களிடம் போராடியவர்.  "பல்கலைகழக தந்தை" என்று அழைக்கப்படுபவர். இவர் தான் சர் பொன்னம்பலம் இராமநாதனின் இளைய சகோதரர்,

"சிங்கள மக்களாகிய நீங்கள் சிங்கள மொழியை பேசி எழுதா விட்டால்  வேறு யார் பேசப் போகிறார்கள்? எழுதப் போகிறார்கள்?  ஏன் ஆங்கிலேயர்களை ஆங்கிலத்தை உயர்வாக கருதுகிறீர்கள?"  என்று அன்று தாழ்ந்து இருந்த சிங்கள மக்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டி வளர்த்தவர் கலாயோகி ஆனந்த குமாரசாமி.
இவர் சர் பொன்னம்பலம் இராமநாதனின் தாய் மாமன்.

பல நாடுகளுக்கு கலாச்சார தூதுவராக பயணம் சென்றவர்.  இவர் உருவத்தை அமெரிக்கா, இலங்கை தபால்தலை மூலம் வெளியிட்டு சிறப்பித்தன. மேலும் இவர் தான் அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் அழிவில் இருந்த சிங்கள மத சின்னங்களை, சிங்களர்களின் வழிபாட்டு தலங்களை காப்பாற்றியவர்.

மேலே உள்ள அண்ணன், தம்பி, மாமன், மச்சான் அத்தனை பேர்களும் மேல்நாட்டுக்கல்வி, மேல்தட்டுவர்க்கம். இத்தனை சிறப்புகளையும் பெற்றவர்களைப்பற்றி இங்கு இந்த விசயத்தை தனியாக குறிப்பிடக் காரணம் பின்னால் வரும் தோட்டத் தொழிலாளர்களை தெருவுக்கு கொண்டு வந்து அனாதை ஆக்கிய ஒரு அற்புத மனிதர் குறித்தும் நாம் பார்க்கப் போகின்றோம். பார்க்க வேண்டும் (?).

இங்கு உள்ள பட்டியலில் அவர் இருந்தாலும் முதலில் வாங்க என்று அழைப்பது தான் தமிழனின் பண்பாடு.  உள்ளே வந்ததும் குத்துவதா, இல்லை செயலை நினைத்து குமுறிக்கொண்டு அழுவதா என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்வுகளை படிக்கும் போது இப்போது நடந்து கொண்டுருக்கும் வாரிசுக்குத் தான் பதவி என்பதை ஏன் எதிர்க்கிறீர்கள்?
எல்லோரிடமும் பதவி போய்விட்டால் நன்றாகவா இருக்கும்?

வரிசையில் இரண்டு, மூன்று என்றால் இறக்கும் வரைக்கும் அது தான்.  மூச்ச்ச்.........

குறிப்பிட்ட சில விசயங்களை மட்டுமே இங்கு கோடு போல காட்டியிருப்பதன் காரணம்,  மொத்தத்தையும் சுட்டிக்காட்டி எழுதினால் நீங்களே மொத்தத்தையும் ரோடு போல் போட்டு சுபம் போட்டு விடுவீர்கள்?

இவர்கள் அத்தனை பேர்களும் ஆயுதம் ஏந்தாதவர்கள்.  புத்தி தந்த சிந்தனைகளைக் கொண்டு கொள்கைகளை முன் எடுத்துச் சென்றவர்கள்.
ஆனால் இவர்கள் கொடுத்த சிந்தனைகள் ஏன் இன்று இத்தனை அவலங்களை உருவாக்கியது?  ஏன் இத்தனை சிறப்பான கல்விகளை கற்றவர்கள், சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அவர்களின் தீர்க்கதரிசமான கொள்கைகள் அத்தனையும் இன்று வாழ்ந்து கொண்டுருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் வந்து சேரவில்லை?

அஹிம்சை கொள்கைகளைக் கொண்டு ஆயுதம் தேவையில்லை என்ற காந்தியின் கொள்கைகளை நேரு எடுத்துக்கொண்டு நகர்ந்தார்.அதைத் தொடர்ந்து பலரும் அதே பாதையில் பயணித்தனர்.  எத்தனை பிரச்சனைகள் இந்தியாவிற்குள் உள்ளே இருந்தாலும் எந்த சமயத்திலும் இந்தியாவிற்குள் நீ வாழத் தகுதியற்றவன்.? உன் மொழி பேசத் தகுதியில்லை.?  நீங்கள் அத்தனை பேர்களும் எங்களுக்கு கீழே அடிபணிந்து தான் வாழ வேண்டும் ?  உன் மதத்தை விட என் மதம் தான் பெரிது?   என்று எந்த தொடக்க கால தலைவர்களும் இங்கு பிரிவினைவாதத்தை விதைக்க வில்லை.

உரிமைகள் மறுக்கப்படும் போது ஜனநாயகம் என்ற வசதியில் கிடைத்த பேச்சின் மூலம் முழுமையாக தீர்வு கிடைக்காமல் இருந்தாலும் அடிப்படை மனித, இனம், மொழி சார்ந்த உரிமைகள் எதுவும் இங்கு பறிபோகவில்லை.

இது தான் இந்தியா.  ஆனால் இலங்கையில் அன்றும் இன்றும் வாழ்ந்த சிங்கள தலைவர்களின் ஒரே எண்ணம்?   நீங்கள் அத்தனை பேருமே வாழத் தகுதியற்றவர்கள். ஓண்ட வந்தவர்கள் ஓடிப் போவது தானே முறை? என்று இன்று வரையிலும் முறைத்துக்கொண்டுருப்பவர்கள்?

ஆயுதங்களை எடுக்காமல் இருந்தாலும் இது தான்.
எடுக்காமல் இருந்தால் அடிமையாய் ஏற்றுக்கொண்டு நாயடி பேயடியுடன் அரைகுறை மனிதனாக வாழ்ந்து நொந்து இருக்கலாம்.  ஆயுதம் ஏந்தியவர்கள் இறுதியிலாவது "தீர்க்கதரிசன பார்வையுடன்" கொள்கைகளை முன் எடுத்து சென்று இருந்தால்?

மொத்த இலங்கையில் தொடக்க காலத்தில் வாழ்ந்த அத்தனை தமிழ் தலைவர்களையும் பார்த்தீர்களேயானால் சிறப்பு என்று சிந்திக்கத் தோன்றும். தீர்கக தரிசன பார்வையிலாமல் தங்களை மட்டும் காத்துக் கொண்டு வாழ்ந்த அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து, சினம் கொண்டு பின்னால் வரப்போகும் பிரபாகரன் செயல்களை ஆதரிக்க தோன்றும்.

சிங்கள இனவாதம் தொடங்கியது (1910). அப்போது ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்ததெடுக்கப்பட்ட முதல் பிரதம மந்திரி சேனநாயகா கூட வரவில்லை. பல ஆண்டுகள் கழித்து தான் வருகிறார்.

பிரபாகரன் பிறந்த ஆண்டு 1954.  விடுதலைப்புலிகள் இயக்கம் உருவான ஆண்டு 1976.    கால இடைவெளிகளையும், நடந்த நிகழ்வுகளையும் படிப்படியாக உள் வாங்கிக் கொள்ளுங்கள்.

ஹிம்சை என்பது கூடாது என்று சொன்ன மகாத்மா காந்தியடிகள் சொன்ன வாசகத்தையும் (16 டிசம்பர் 1938) நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

” கோழைத்தனத்திற்கும் வன்முறைக்கும் மத்தியில் ஒரு தெரிவு இருக்குமானால் நான் வன்முறையையே ஆதரிப்பேன்.  ஓர் இனம் முற்றாக நசுக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டுருப்பதை விட நான் ஆயிரம் தடவைகள் வன்முறையையே விரும்புவேன்.  அவமானத்தின் இழிவான சாட்சியாக இருப்பதைவிடக் கௌரவத்தைக் காப்பாற்ற நான் ஆயுதமேந்தவும் தயார் ”

உணர்வுகள் மீறி வருகிறதா?  உணர்ச்சிகள் மேலோங்கி வருகிறதா?

5 comments:

ஜோதிஜி said...

உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.

தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.

மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.

M.Thevesh said...

திரு ஜின்னாவுக்கிருந்த தீர்க்கதரிசனம் இலங்கைத்
தமிழ்தலைவர்களிடம் இருக்கவில்லை.ஒவ்வொரு
வரும் தனிப்பட்ட தங்கள் முன்னேற்றம் பற்றிச்
சிந்தித்தார்களே அல்லாமல் மொத்த சமுதாய
சிந்தனை எவரிடமும் இருக்கவில்லை.இதுதான்
இன்றைய நிலைக்குக்காரணம்

லெமூரியன்... said...

இடைப்பட்ட காலத்தில் ஏன் யாரும் தமிழர்களுக்கு தலைமையேற்று போராடவில்லை என்று முன்பே தோன்றியது...உங்கள் கட்டுரையை தொடர்ந்து படிக்கும் போது அதற்கான விடை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

geethappriyan said...

//அதிலும் ஆங்கிலேயர்கள் உலகமெங்கும் தான் பிடித்து வைத்திருந்த நாடுகளில் இருந்து வெளியேறிய போது உருவாக்கி விட்டுச் சென்ற வலை பின்னல்களை அத்தனையும் நம் மூளையில் உள்ள ந்யூரான்களின் வலைபின்னலை விட மொத்தத்திலும் சிறப்பானது. //

//பிரபாகரன் பிறந்த ஆண்டு 1954. விடுதலைப்புலிகள் இயக்கம் உருவான ஆண்டு 1976. கால இடைவெளிகளையும், நடந்த நிகழ்வுகளையும் படிப்படியாக உள் வாங்கிக் கொள்ளுங்கள்.//
இருபதே வயதில் என்னஒரு துடிப்பு?


உன்னதம். இடியாப்ப சிக்கலை விட மோசமான பின்னல்.


//ஹிம்சை என்பது கூடாது என்று சொன்ன மகாத்மா காந்தியடிகள் சொன்ன வாசகத்தையும் (16 டிசம்பர் 1938) நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். //
மறக்க முடியுமா?

உணர்வுகள் மீறி வருகிறதா? உணர்ச்சிகள் மேலோங்கி வருகிறதா?//
உங்கள் எழுத்துக்களை படித்தால் வராமலும் இருக்குமா?

அருமை ஜோதிஜி,
நேற்று தான் ஷண்முகப்ரியன் ஐயாவை அவரது இல்லத்தில் சந்தித்தேன், மிக அருமையான காணக்கிடைக்காத தங்கம். உங்களிடமும் பேசிவிட்டால், போதும். மிக அருமையான கட்டுரை.வீரியம்மிக்க எழுத்து, ஓட்டுக்கள் போட்டாச்சு

ஹேமா said...

கருத்துச் சொல்லவில்லை.தொடர்ந்தும் வாசிக்கிறேன் உங்கள் பதிவுகளை.