Thursday, November 12, 2009

அய்யாவுக்கு அடிவாங்கும் தமிழன் எழுதுவது

வணக்கமய்யா,

நீங்க சொகமா?

நானா?  சொகமில்லாத சொங்கித்தமிழன் எழுதுவது.

சதிராடும் கூட்டத்தில் புதிதாக வந்தீர்கள்.  மனம் எதிர்பார்த்த மழை வந்தது போல் உங்கள் எழுத்துக்கள் கண்டு எங்கள் உள்ளம் உவகை அடைந்தது. உங்களின் விரல்களின் வழியே வந்து விழுந்த வார்த்தைகள், எங்களை பரவசப்படுத்தியது.  நவசர உள்ளத்தை பெற்று தமிழன் நாட்டியக் கலையாய் நயம் கொள்ள வைத்தது. எங்களின் வாழ்க்கையையும் மாற்றியது. வாழ வந்த உங்களை ஆளவும் செய்ய வைத்தது.
                                             
வார்த்தைகளா அது?

மொத்த தமிழின தலைமுறைக்கும் புதிய பூபாள பாதை அல்லவா?  தமிழர்களின் வாழ்வியலை மாற்றிய வரிகள் தந்த கரங்களை வலிக்கும் வரைக்கும் முத்தமிட ஆசை.   ஆனால் அதே கரங்கள் எழுதும் இன்றைய விடுகதை வரிகள், விடையில்லா நடைகள் புதிராக தெரிகிறதே?

பொழுது புலர்கிறதோ இல்லையோ, உடன்பிறப்பே என்று வந்து வீட்டில் வந்து ஏட்டின் மூலம் வந்து விழும் வார்த்தைகள் எங்கள் அத்தனை விவேகத்தையும் தின்று ஏப்பம் விட்டது. புரிந்து விழித்த போது மொத்தமும் பறிபோனது.  ஏன் அய்யா?

உங்கள் கால்கள் பயணித்த பாதையெல்லாம் பாட்டுகள் பாடிய குயில்கள் இல்லை. சினம் கொண்ட பாம்புகளும் சீற்றம் தந்த பாம்பின் படமும் ஆடி நின்று தான் உங்களை வரவேற்றது. புயலுக்கு அஞ்சி நிற்காமல்,செங்கதிர்கள் உதிக்கின்றதோ இல்லையோ எந்நாளும் எங்கள் கதிரவன் நீங்கள் தான் அய்யா

அன்றாடம் கதிர்களின் வெளிச்சம் பரவுவது போல கட்டியம் கூறும் உங்கள் வார்த்தைகள் காதில் வந்து விழும்.  கருத்தை வந்து நிறைக்கும்.  ஆனால் அதுவே எங்களின் வாழ் நாள் காலத்தில் காலனின் பாசக்கயிறாக பயமுறுத்தி விடுகின்றதே ஏன்ய்யா?

அது எங்களுக்கு காலன்.  அதுவே உங்களுக்கு பொற் "காலம்".

எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் எப்போதும் உங்கள் கடமையைத்தான்  செய்தீர்கள். மாற்றுக்கருத்து இருந்தாலும் கட்டுபாட்டை வளர்த்தீர்கள்.
ஆனால் எண்ணிப்பார்க்கின்றேன் இப்போது தமிழன் வாழ்ந்து கொண்டுருக்கும் கண்ணிய வாழ்க்கையை?

உழைக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணும் போது உங்கள் நினைவு தான் வருகிறது அய்யா?  துடிப்பு என்ற செயலாக்கமும்,துள்ளி வா என்று நீங்கள் அழைக்கும் வாஞ்சையும், எப்போதும் எங்களுக்குள் உருவாகும் உன்னத லட்சிய வேட்கையும் நீங்கள் தந்தது தானே அய்யா.

மொத்தத்தையும் நினைக்கும் போதும் நீங்கள் தான் வருகிறீர்கள்.  "நிச்சயம்
வெல்வோம்" என்ற சக்திக்கும் "நீடித்த புகழ் கொண்ட தமிழன் வாழ்க்கை " என்ற மொத்த தமிழன வாழ்க்கைக்கும் சகாவரம் படைத்த காப்பியங்கள் அத்தனையும் உங்களுடைய படைப்புகளும் தானே?

நீங்கள், நீங்கள் தான்.  சமகாலத்தில் வேறு எவர் இருக்கிறார்கள்.  வைத்தாலும் தட்டின் முள் தரை தட்டி விடாதா?  ஆனால் அத்தனைக்குள்ளும் ஆச்சரியக்குறியும், கேள்விக்குறியும் அமைந்து போன அவலம் தான் எங்களுக்கு ஆதங்கமாய் இருக்கிறது அய்யா.

நீங்கள் கத்திய நடு இரவு கத்தல் எங்கள் காதில் ஒலித்த போது வீட்டுச் சாவு போல ஒப்பாறி வைத்தோம்.  நீ எல்லாம் இறைவனா? என்று ஏகடியம் பேசினோம். தூரத்தில் வைத்து எடுக்கப்பட்ட அந்த அதிகாலை புகைப்படம் அக்கிரமத்தின் சாட்சியாய் கணக்கில் வைத்தோம்.  வளர்த்தவரை வாழ்விப்பது தானே முறை என்று முறையிட்டோம்.  தரையில் அமர்ந்து உள்ளே போகாமல் நீங்கள் அமர்ந்த காட்சி எங்களுக்கு மொத்த தமிழனின் சிம்மாசனம் போல் தெரிந்தது.  ஆனால் இன்று நீங்கள் "சும்மா சனமே கத்தாதீர்கள்" என்பது போல் அமைதி காத்துக்கொண்டு இருக்கீறீர்களே? ஏன் அய்யா?

"நம் குலம் நம் இனம் நம் மொழி"  என்று இனமான தலைவராக நீங்கள் ஊற்றி வளர்த்த பால் இன்று திரிந்து உங்கள் ஊடகப் பாலாக எங்களை உறங்க வைத்துக்கொண்டுருக்கிதே?

இன உணர்வு என்பது இன்னமும் எங்களிடம் இருக்கிறதா? என்று நீங்கள் கேட்பது போல் தெரிகிறதே அய்யா?

பாடசாலை தேவையில்லை.  பட்டங்கள் தேவையில்லை.  பார் புகழும் பல்லாக்கில் பவனி வந்தீர்கள். வர வேண்டிய தகுதிகளுக்கு உரியவர் நீங்கள் தான்,   ஊர் முழுக்க திட்டினாலும் உள்ளுற விருப்பம் தான்.  உங்களால் முடியாதது என்ன?  மூச்சு உள்ள வரைக்கும் உங்கள் கரகரத்த பேச்சு இருக்கும்.  அத்துடன் கத்த முடியாமல் வாழ்ந்த இவர்களின் வாழ்க்கையும் இருக்கும்.

எத்தனையோ எங்களுக்கு கற்றுக்கொடுத்தீர்கள். பிராமணியத்திற்கு ஒரு புது விளக்கம்.  பாட்டாளிக்கு ஒரு விளக்கம். தோற்ற போது ஒரு விளக்கம்.  ஆனால் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் உங்கள அகவையும் குறைந்து விடுகிறேதே எப்படி அய்யா?

உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஏற்றமாகவே எடுத்துக்கொண்டீர்கள். பேச கற்றுக்கொடுத்த நீங்கள்,  இன்று பேசா மடந்தையாய் நின்று விட்டீர்களே அய்யா?

உங்கள் மனதில் எப்போதுமிருக்கும் துவேசம் என்பது துணியா?  போட்டுக் கிழிந்ததும் மாற்றிக்கொள்வதற்கு?  ஆனால் அங்கு மாற்றுத் துணி கூட இல்லாமல் மறுகிக்கொண்டுருப்பது உங்களுக்கு தெரியவில்லையா அய்யா?  மாற்றிக் கொள்ளாத உங்கள் உள் மன எண்ணங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு பாதுகாத்து பயணிக்கப் போகிறீர்கள்?  எய்தவன் எவரோ?  கொண்டவர்கள் இவர்கள்?  நாதியில்லை நாதியில்லை என்று சொல்லி நாற்றம் பிடித்த வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கியதில் உங்களின் பங்கு எத்தனை சதவிகிதம் அய்யா?

கற்றாரை கற்றாரே காமுறுவர்? உங்களை வெறுப்பவர்கள் குறித்து எங்களுக்கொன்றும் அச்சமில்லை.  நாங்கள் உங்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளோம்?

புத்திக்கும் சக்திக்கும் இடையே புகுந்து புல் பூண்டாக மாறப்போகும் இந்த இனமான வரலாற்றை உங்கள் நெஞ்சுக்கு நீதியில் எவ்வாறு உரைக்கப் போகிறீர்கள்?

திரையை உரையாக மாற்றியவர் நீங்கள்?  தீந்தமிழை தமிழனின் நெஞ்சுக்கு தீயாக மாற்றும் எண்ணமுண்டா? லட்சியத்தை மட்டும் வாழ்க்கையில் கொண்டு வேங்கையாய் வெறிபிடித்து அலைந்தவர் மத்தியில் புத்தியைக் கொண்டு புது உலகைக் கண்டவர் நீங்கள்?   ஆனால் வாய்ப்பு இருந்தும்  நீங்கள் அவர்களுக்கு வழி காட்டாமல் இன்றும் திரைக்கு உரை எழுதுவது முறையா அய்யா?

வள்ளுவன் வந்தாலும் உங்களை வாயாற பாராட்டி உளம் மகிழ்வான்? அண்ணா வந்தாலும் அச்சமில்லாமல் ஆரத் தழுவார்.  பெரியார் வந்தாலும் பெரு உவகை கொள்வார்?  இந்த இலங்கை தமிழர்கள் உங்கள் இல்லத்திற்கு வந்தால் உள்ளத்தில் உள்ளதை ஒழிக்காமல் உரைத்தால் உங்கள் உள்ளம் ஏற்றுக்கொள்ளுமா?  இல்லை நெஞ்சில் குத்தாமல் முதுகில் குத்தினான் என்பீர்களா?

பட்டம் பெற்றவர்கள் அத்தனை பேர்களையும் விட்டம் பார்க்க வைத்தவர் நீங்கள்?  உங்களை பாராட்ட வேண்டும் என்று நினைத்தால் பாராட்டு என்ற வார்த்தைகளே கிழடாக போயிருக்கும். ஆனால் வயதான காலத்திலும் வாலிபன் போல் வாய் திறந்து பார்த்துக்கொண்டுருக்கிறீர்கள்?

ஆளுமை, அதிகாரப்பற்று, ஞாபக சக்தி என்பதையும் (உங்களுக்கு பிடித்த மூன்று எழுத்து)நீங்கள் தானே எங்களுக்கு வழங்கி வழிகாட்டியாய் இருக்கிறீர்கள்?  ஆனால் இவர்களின் இன்னல்களும் இருண்டு போன வழித்தடங்களும் உங்களுக்கு கண்ணீர் வரவழைக்காதது எங்களுக்கு பெரிய ஆச்சரியம் தான் அய்யா?

இலங்கை பிரச்சனையில் உங்களைச்சுற்றி பிணியாய் சூழ்ந்த சூழ்ச்சிக்கூட்டங்கள் எங்களுக்கு செய்தியாய் இருக்கலாம்?  நாங்கள் படித்து விட்டு அடுத்த செய்திகளுக்கு போய் விடுவோம்.  நீங்கள் தானே புறநானூறு அகநானூறு கலிங்கத்து பரணி என்று போர் பரணியாய் பாடி வந்தவர்.  எங்களை விட தமிழனின் வீரத்தை நன்றாக தெரிந்தவரும், அவனின் விவேகமற்ற செயல்களை அறிந்தவரும் நீங்கள் தானே அய்யா?

 மறப்போம்.  மன்னிப்போம் என்று சொல்லிக் கொடுத்தவர் நீங்கள். ஆனால் இன்று கண்ணி வெடி காரணம் காட்டி கதறடித்த இனத்தை நீங்கள் கை கழுவ தகுமா?  முறையா?

புரிந்த காரணத்தை புதையல் போல் வைத்துக்கொண்டு இன்று வார்த்தைகளால் வசந்தம் வீச முற்படுகின்றீர்கள்?  ஏன் அய்யா?

அய்யனின் குறள் மறந்து விட்டதா?   இல்லை தினந்தோறும் அருந்தும் மருந்தாக மாறிவிட்டதா?  சங்கதமிழ் வளர்த்த பரம்பரைகளின் வழித்தோன்றல்கள் இன்று சாக்கடை புழு போல் வாழ்க்கை வாழ்கிறதே?  உங்களுக்கு சம்மதமா அய்யா?

அய்யகோ தமிழா? மடத்தமிழா?  பாராய் எழுவாய் உயிர்பிப்பாய், உணர்வு பெறுவாய்?  என்று எத்தனை கடிதங்கள் எழுதியிருப்பீர்கள்.   ஆனால் இன்று கூட நீங்கள் அன்னை கொண்ட அரசியலில், கடித அரசியல் மூலம் தான் இவர்கள் கணக்கை வரவு வைக்கப் பார்க்கிறீர்கள்?  ஏன் அய்யா?

நீங்கள் வாங்கிய ஏச்சுகளை எண்ணிப் பார்க்கின்றேன்.  நீங்கள் ஏகடியம் பேசும் வார்த்தைகளையும் இடையில் வைத்துக்கொள்கிறேன்.   உங்கள் இன்றைய வாழ்க்கையை எண்ணிப் பார்க்கின்றேன்.  தவறில்லை அய்யா.
காமராஜர், கக்கன் வாழ்க்கை என்பது இந்த நன்றி மறந்த தமிழர்கள் கொடுத்த பரிசு.  அது உங்களைப் போன்றவர்களுக்கு தேவையில்லை.  தேவைக்கு அதிகமானது வந்தாலும் வாலிபன் போல் உங்கள் உழைப்பு தான் எங்களைப் போன்றவர்களுக்கு உன்னத பரிசு.

காரணங்கள் தேவையில்லை அய்யா.  சிறுநரிகள் கூட்டம் உண்டு.  மறுப்பதற்கு இல்லை.  சிங்கார நடை அழகில் சீறிப்பாய்ந்த உங்கள் வைர வரிகள் அத்தனை தமிழர்களையும் சீற்றம் கொள்ள வைத்ததே?  சீற்றம் என்பது உருவாக்குவது மட்டும் தானா?  உள்வாங்கத் தேவையில்லையா?

உங்கள் வயதுக்கு வணங்கத் தோன்றுகிறது? உங்களின் உழைப்பு உன்னதம் என்ற வார்த்தைகளுக்குள் அடக்கக் கூடியதா?  உங்கள் வாழ்க்கை அடைந்த வசதிகளைப் பார்த்து பிரமிக்க தோன்றுகிறது?  ஆனால் அக்கரையில் உள்ளவர்களின் வாழ்க்கையை நீங்கள் அக்கறை படாமல் ஓதுங்கி இருப்பதை பார்க்கும் போது?

காரணங்கள் தேவையில்லை.  தொடக்கத்தில் உருவாகாமல் போன "புரிந்துணர்வு"  இறுதியில் முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்கால் போக ஆகிவிட்டதே?

நாங்கள், அவர்களின் மொத்த வாழ்வியலை சோகத்திற்குள் புதைத்த புதைகுழிகளைப் பார்த்து புரிந்து கொண்டோம்.  பங்கருக்குள் ஒழிந்து கத்திய கத்தலில் அறிந்து கொண்டோம்.  நீங்கள் நம்பாத நாங்கள் நம்பும் "கடவுள் ஏன் கல்லானான்?"

அவர்கள் உங்களிடம் கேட்பது உங்கள் பெயரிலேயே இருக்கும் கருணையை மட்டும் தான்.நீங்கள் எப்போதும் விரும்பும்.  நிதி ஏதும் கேட்கவில்லை.  உடுத்த துணியே இல்லாத போது இனி எங்கு போய் வங்கிக் கணக்கை உருவாக்க முடியும்? ஜாமின் போட ஆளும் இல்லை. என் சாதி சனம் என்று கொஞ்ச இருந்த கொஞ்ச பேருமில்லை.

ஒரு வேளை உயிருடன் மிஞ்சி எஞ்சி வந்தால் அவர்களின் வழித்தோன்றல்கள் வந்து பார்ப்பார்கள். ஆமாம், உங்கள் வழித்தோன்றல்கள் உருவாக்கும், உருவாக்கிக்கொண்டு காப்பிய படங்களை கண்டு களிப்பார்கள்.  அவர்களின் உணர்வும் சுண்டிப் போயிருக்கும்.  உள்ளமும் மொத்தமும் மாறிப்போயிருக்கும்.

உங்கள் பட வரிசை பத்து போல முதல் பத்து காரணங்களில் நீங்களும் ஒருவராக இருக்கீறீர்கள்.  ஆனால் நீங்களே முழு முதல் காரணம் அல்ல.
உங்கள் மானாட மயிலாட போல ஆடிய நர்த்தன ஆட்டங்கள் தந்த போனஸ் பரிசு தான் நவீன விஞ்ஞானத்தால் எறித்து துடைக்கப்பட்ட சாம்பல் மேடுக் குவியல்.

மேடோ? பள்ளமோ?  ஆனால் உங்கள் கடைசி காலத்தின் எச்சமும் மிச்சமுமாய் வாழும் உங்கள் உள்ளத்தில் உண்மையாகவே (?) அத்தனையையும் இந்த தமிழன உலகம் பார்க்கும் அளவிற்கு பரிதாபமாய் வாழ்ந்து விட்டீர்களோ என்ற ஆதங்கம் எங்களுக்குள் அதிகம் இருக்கிறது என்பதை உணர்வீர்களா அய்யா?

ஆனால் உலக தமிழனத்தில் உங்களுக்கென்று ஒரு புகழ் உண்டு அய்யா. எவருமே மறுக்காவே மாட்டார்கள், ஆனால் மங்கிப்போன புகழிடம் தேடி அலையும் இந்த சின்னக்கூட்டம் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லையா?

உங்கள் புகழ் இன்று சற்று ஓளி இழந்த தங்கமாய் எங்களையும் தடுமாற வைத்து விட்டது.  உங்கள் பழக்கூடையில் வைத்திருந்த அத்தனை எண்ணிக்கையையும் உண்க, உறவாக்கிக்கொள்ள அத்தனை பேரும் அகமும் புறமும் உங்கள் கோபாலபுரத்திற்க்குத் தானே நேராக வந்தார்கள்.

சிம்மமாய் உங்கள் அகத்தில் இருந்தே மொத்த இந்திய ஆட்சியாளர்களையும் அச்சப்பட வைத்தீர்கள். புரிந்து கொள்ள முடியாமல் புழுங்கியும் தவித்தார்கள். ஆனால் புரிந்துணர்வு முடிந்ததும் "மொத்தத்தையும்" முடித்தும் விட்டீர்கள்.

முப்பாலூக்கும் உரை எழுதியவர் நீங்கள்.  இந்த முடிந்த பயலுகளுக்கும் உங்க நடையில ஒரு ஒர எழுதியிருங்கய்யா?

அய்யா உங்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான்.  நீங்க கடைசிய இந்த தமிழனத்திற்கு செய்ய வேண்டியதும் அது மட்டுந்தாய்யா?

இலங்கை அதிபர் ரொம்ப நல்லவரு?  சீனாகாரரு தங்கமானவருன்னு ஒருத்தர் உள்ளுக்குள்ள உலாவிக்கிட்டு இருக்காரு அவரத் தெரியுங்களா?  நீங்க உருவாக்கிய பாலத்துக்கு சட்டத்தின் சந்து பொந்துக்குள் நுழைந்து மணல் மூடி மங்களம் பாடை வைத்தாரே?  அவரத் தெரியாதுங்களா? இதோ பாரு பயாஸ் கோப்பு.  அங்க பாரு புலின்னு அல்டாப்போட திரிவாரே?  அவரத் தெரியாதுங்களா?   அடப்போங்கய்யா?  மகளிர் அணி கோர்ட்டில் "காட்டி" வரவேற்பு கொடுத்த மறந்து போயீட்டிங்களா?

ஆமாம் அய்யா,  அவர எப்படியாவது உங்கள் இனமான காவலர் பட்டத்தை உங்களுக்கு பின்னால் கொடுத்துடுங்க.  மாச மாசம் வட்டி கட்டி சாகிறத விட மொத்தமாய் ஏலம் விட்டாச்சுன்னா எல்லாருக்கும் நிம்மதிங்கய்யா.  அதச் செய்யச் தெரிஞ்ச என்க்குத் தெரிஞ்ச உண்மைத்தமிழன் அவர் மட்டுந்தாய்யா.

நீங்களாவது அடுத்த தேர்தலுக்கு எதை கடிதம் மூலம் எழுதுவது மண்டையில இருக்கிற நாலு முடியையும் பிச்சுக்கிட்டு இருப்பீங்க.

அவரு கொஞ்சம் கூட யோசிக்கமா உலகவங்கி காரவுகள உள்ளாற கூட்டி வந்து மொத்தத்துக்கும் நல்லது பண்ணிருவாரு. கலங்கமில்லா கல்வி கற்ற  மேதை.  கண்ட கலவியில் பிறந்த மணிமனிதன். ராஜிவ் காந்தி இறந்தத பத்து நிமிடத்தில் கண்டுணர்ந்து ஊருக்கே உரைத்த உத்தமரு.  அத்தனை "நல்ல தொடர்புகள்" உள்ளவருங்கய்யா அவரு.

அவர தலவராக்கிட்டு, நம்ம 74 வயசுலேயும் இருட்டு உலகத்த தமிழநாட்டுக்கே  காட்டிக்கிட்டுருக்கிற எங்க மாமா பொதுச் செயலாளர் ஆக்கிட்டீங்கண்ணா அக்கடான்னு நாங்க பாட்டுக்கும் போக வேண்டிய இடத்துக்கு சீக்கீரம் போயிருவோமய்யா,

படகுல போறதுக்கு காசு இருக்கான்னு கேட்க மாட்டீங்க. ஏன்னா உங்க தராள குணம் எங்களுக்கு தெரியுமய்யா.

நாங்க வர்றவரைக்கும் நீங்க எப்போதும் பாத்துக்ற மாதிரி எங்களுகளையும் பத்தரமா பாத்துக்கிடுவீங்கன்னு நம்பி நட்டாத்துல எறங்குறோமய்யா?

இப்படிக்கு

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்

உண்மைத்தமிழன்.
அப்பா பெயர்/உறங்கும் தமிழன்.
மண்டையோட்டுத் தெரு
மயான நகர்.
திருட்டூர்.

அய்யா சூடு வச்ச ஆட்டோவெல்லாம் வேண்டாமய்யா? அறிமுகபடுத்துனவுங்க அக்கடான்னு குளு குளுன்னு  ஓய்வெடுத்துக்கிட்டுருக்காங்க. உண்ட களைப்பு அவங்க தொண்டணுக்கும் மட்டும் தானா?  அவங்களுக்கும் இருக்கும் தானே?  

இந்த தூக்கத்துல இருந்து நாங்களே சீக்கிரம் எழுந்துடுவோமய்யா? எந்திரிக்கிற அன்னைக்கு நாங்கள் கேப்டன் நடித்த வல்லரசு படத்தை பார்த்து இந்தியா ஒரு வல்லரசுன்னு புரிஞ்சுக்கிடுவோம்.  உங்களுக்கு அடுத்த கடிதம் எழுதுற வேலையிருக்கும்.

நான் பெரிசா எழுதிய இந்த கடிதத்தை மறக்காம படிச்சவுடன் கிழிச்சு போட்டுருங்கய்யா.  ஆவண காப்பகம் வேண்டாமய்யா.  இல்லாவிட்டால் அச்சப்பட்ட தமிழனின் அவசர கடிதம் பாகம் இரண்டுன்னு எழுத வேண்டியிருக்கும்.

17 comments:

vasu balaji said...

ஜோதிஜி! எவ்வளவு நக்கலும் நையாண்டியுமா புட்டு புட்டு வைக்கிறீங்க. அருமை அருமை.

கலகலப்ரியா said...

வாக்கு போட்டாச்சு... அப்புறம் வந்து படிக்கறேன்..

இராகவன் நைஜிரியா said...

சொல்வதற்கு ஒன்றுமில்லை. வயது ஆகிவிட்டது... சூப்பர் இடுகை... கீப் இட் அப்.

ஜோதிஜி said...

ஐயா, இந்த இடுகை குறித்து என்னுடைய கருத்துக்கள், விருப்பங்கள், மொத்த விசயங்களையும் இறுதியில் கடைசி விமர்சனத்திற்கு பிறகு எழுத ஆசை.

மேம்பட்ட விசயங்கள் அதன் மூலம் அனைவருக்கும் புரியும்.

வனம் said...

வணக்கம் ஜோதிஜி

ம்ம்ம் கொஞ்சம் நக்கல் அதிகம்தான் இருந்தாலும்

இத்தனை வருடமா இங்கு இருக்கும் தமிழ் அகதிகள் கதறியும், அவர்களின் தொலைக்காட்சியிலேயே வந்து அழுதும், இப்படிக்கு ரோஸில் கூட்டமாய் வந்து சொன்னபோதும் தெரியாதது இப்போது இந்தியா டுடே பார்த்தவுடன் தெரிந்துவிட்டது என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கின்றது.

இதில் வேறு எதுவோ இருக்கு.

இராஜராஜன்

அம்பாள்முத்து said...

மிக அருமை ஜோதிஜி அவர்களே
வஞ்சபுகழ்ச்சி அணியால் வாட்டிய அதே நேரம் உண்மைத்தமிழன் ஒவ்வொருவரின் உணர்வையும் பிரதிபலித்த உங்களின் திறமைக்கு என் பாராட்டுக்கள்.
T.S.Muthu

அம்பாள்முத்து said...

மிக அருமை ஜோதிஜி அவர்களே
வஞ்சபுகழ்ச்சி அணியால் வாட்டிய அதே நேரம் உண்மைத்தமிழன் ஒவ்வொருவரின் உணர்வையும் பிரதிபலித்த உங்களின் திறமைக்கு என் பாராட்டுக்கள்.
T.S.Muthu

தமிழ் உதயம் said...

சரியாக ஆறு மாதங்கள் ஆக போகிறது. முள்ளிவாயக்கால் பயங்கரம் அரங்கேறி. இப்போதும் தூக்கத்தில் திடீர் என்று விழிப்பு வந்து அந்த ஞாபகங்கள் மனத்திரையில் வந்து போகும். காரணம் நாம் சாமான்யர்கள். நம்மால் எதுவும் செய்ய முடியாது. அய்யா பழ.நெடுமாறன் கூட்டத்திற்கு போவோம். நம்மால் அவ்வளவு தான் முடியும். நம்மால் கையை விரிக்கத்தான் முடியும். ஆனால் எல்லாமே செய்யக் கூடிய இடத்தில் இருந்து கொண்டு கை விரித்தல் என்ன மாதிரியான மனோபாவம். அது தான் பிறவிக்குணம். ஆனால் அப்படிப்பட்ட பிறவியை அதிசய தமிழ்ப்பிறவியாய் பார்த்தது நம் குற்றமே ஒழிய அவர் குற்றம் இல்லை. தினமணியில் COMMENTSல் ஒரு திமுக அனுதாபி இப்படி கேட்டான். "எங்க தலைவர ஏன்டா குறை சொல்றீங்க. அவரா துப்பாக்கி எடுத்து சண்டை போட சொன்னார்" என்று. அந்த கீழ்மட்ட அனுதாபியின் மனோபாவமே டி.ஆர்.பாலுவிடமும் இருந்தது.(யாழ் நகருக்கு சென்று அங்கிருந்த அகதிகளிடம் சிடுசிடுவென்று விழுந்ததை அறிந்து இருப்பீர்கள்) திமுகாவின் தலைமை பிடத்திடமும் அந்த மனோபாவம் இருந்தது.

அஹோரி said...

இன்னுமா உலகம் அவர நம்புது. விதி ...

கலகலப்ரியா said...

வழக்கம் போல அருமை..! நச் நச் .. பட்டு பட்டுன்னு கேக்குறீங்க...!

Thenammai Lakshmanan said...

மிகச் சிறப்பான உணர்வுகளின் வெளிப்பாடு

ஒவ்வொரு தமிழனும் சொல்ல விரும்புவது இதைதான் ஜோதிஜி

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

ஜோதிஜி said...

இந்த கட்டுரையில் எந்த இடத்திலும் ஓட்டு போட்டு நகர்த்துங்கள் என்று கேட்கவில்லை. ஆனால் தொடக்கத்தில் வந்தவர்கள் அத்தனை பேர்களும் விமர்சனம் ஏதும் இல்லாமல் கும்மாங்குத்து குத்திவிட்டார்கள்.

தமிழன் வாழ்வியலில் வயது முதிர்ந்தோர்களையும், இறந்தவர்களையும் வசை பாடுவது அநாகரீகம். ஆனால் ஆற்றாமையில் வந்து தொலைப்பதை தடுக்க வழி(லி) தெரியவில்லை.

இலங்கை வாழ், வாழ்ந்த, புலம் பெயர்ந்த அத்தனை தமிழர்களும் இவர் மேல் எத்தனை கோப தாபங்கள், மாச்சரியங்கள் இருந்தாலும் அத்தனை பேர்களும் ஒருவருக்கு காலம் முழுக்க நன்றி கடன் பட்டவர்கள். ஆமாம் இவர் மகள் திருமதி கனிமொழி அவர்களுக்கு.

தெரியாத,புரியாத, வெளிவராத அத்தனை நல்ல காரியங்களும் செய்தவர். ஓரு வேளை அந்தரத்தில் ஆத்மா உலாவிக்கொண்டுருக்கும் அந்த வெள்ளைக்கொடி ஏந்திச் சென்ற போராளிகளுக்கு தெரியும்.

கலைஞரின் சிந்தனைகள் அத்தனையும் அவருக்கே அறிக்கை எழுதும் வரையில் தெரியாது. அப்புறம் எப்படி மற்றவர்களுக்கு புரியும்.
சர்வதேச அரசியல் புரிந்து கொள்ள முடியாமல், இந்திய அரசியலில் சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒரு சாட்சியாக காட்சியாகவும் வாழ்ந்துகொண்டுருப்பவர். சில சமயம் அவர் நம்பாத விதியே இவரை கதாநாயகன் போலவும் மாற்றி விடுகின்றது.

பிரபாகரன் தொடக்கம் முதல் எம்.ஜி.ஆர் என்பவரை அவர் விரும்பிய ஆண்டன் பாலசிங்கம் போல பார்த்த பார்வையை விட இவரை சரியாக பார்த்து இருந்தால் மொத்த அரசியல் ஞானம் அவருக்கு தெரிந்து இருக்கும்.

இவர் ஒரு புத்தகம் அல்ல. படித்தவுடன் கரைத்து குடித்து விட்டோம் என்ற நினைவு வருவதற்கு. அதற்கு மேலும்.

அதனால் தான் சூப்பர் முதல் சுப்ரீம் வரைக்கும் திசை தெரியாத காட்டில் திக்கு தெரியாத பறவைகள் போல். அதுவே பலம். அது தான் முக்கிய பலவீனம்.

பூஜ்யம் முதல் ராஜ்யம் வரைக்கும் என்று நிணைவில் வருவர்கள் மூன்று பேர்கள். ஆனால் இவர்கள் மூன்று பேருமே தனது உழைப்பால், புத்தியால், சக்தியால் மட்டுமே வளர்ந்தவர்கள்.

கலைஞர், முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம், கே,ஆர்,நாராயணன்.

அரசியலுக்கான அரசியல்வாதிகள்
அரசியலில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கும் அரசியல்வாதிகள்.

மற்றவைகள் அவரவர் இறப்பு சமயத்தில் உறுதிபடுத்தும். வழித்தோன்றல்களை நெறிப்படுத்தும். உயர்சக்தி உலகில் நிச்சயம் உண்டு என்று வாழும் மனிதர்களுக்கு. நம்பிக்கை தான் வாழ்க்கை. அது விஞ்ஞானமாக இருந்தாலும் மெய்ஞான வழியாக இருந்தாலும் வாழ்க்கை வசதியை உருவாக்கும். ஆனால்?

பகிர்ந்து கொண்டு அத்தனை பேர்களுக்கும் நன்றி.

வலைதள உலகில் அதிகம் பயணிக்காத , முடியாத சூழ்நிலையில் இருக்கும் என்னை பொருத்து அருள்க நண்பர்களே..........

செந்தில் வேலன் சொன்னதைப் போல யாரும் தொட அஞ்சும் தலைப்பை தொட்டு இருக்கும் காரணத்தால். உணர்வா? உணர்ச்சியா? நெகிழ்ச்சியா? வாய்ப்பு இருக்கும் போது வந்து உணர்த்தி நகர்த்துங்கள்.

லெமூரியன்... said...

அருமையைச் சொல்லிருக்கீங்க...!

Jeyapalan said...

//இலங்கை வாழ், வாழ்ந்த, புலம் பெயர்ந்த அத்தனை தமிழர்களும் இவர் மேல் எத்தனை கோப தாபங்கள், மாச்சரியங்கள் இருந்தாலும் அத்தனை பேர்களும் ஒருவருக்கு காலம் முழுக்க நன்றி கடன் பட்டவர்கள். ஆமாம் இவர் மகள் திருமதி கனிமொழி அவர்களுக்கு.//
எதுக்கு என்று தனியாக அஞ்சலில் சொல்லுவீர்களா?

ஜோதிஜி said...

செயபால் தாமதம் ஆகி விட்டது. மின் அஞ்சல் தெரிவிக்க. உங்கள் தளம் அனுமதி மறுக்கப்படுகிறது?

அனைவருக்கும் அன்பு  said...

தன்மான தமிழனின் ஆழ்மன படபிடிப்பு அருமை .................