Sunday, October 16, 2016

கேள்விகளுக்கு இங்கே பதில் உண்டு?


சில மாதங்களுக்கு முன்பு அழைத்த நண்பரின் உரையாடலில் முக்கியக் கேள்வியைக் கேட்டு இருந்தார். நீங்கள் யார்? 

தமிழர் தேசியம் ஆதரவாளரா? 

ஹிந்து மத எதிர்ப்பாளரா? 

சாதியை மறைமுகமாக ஆதரிப்பவரா? 

இன்று மற்றொரு நண்பருடன் உரையாடும் போது எனக்குள் கேட்டுக் கொண்ட விடை தெரியாத கேள்விகளுக்குச் சில வெளிச்சம் உருவானது. 

மிழர்களுக்கான தேசியம் என்பது வெறும் வார்த்தைகளாகக் கடைசி வரை வாழும். அது எழுத்தாக, விமர்சனத்துக்குரியதாக, வார்த்தைகளாக மட்டுமே வாழும். காரணம் தகுதியான தலைமைப்பண்பு உள்ளவர்கள் இங்கே எவரும் இல்லை. எதிர்காலத்தில் உருவாகக்கூடுமா? என்பது பற்றி எனக்கு எவ்வித எண்ணமும் இல்லை. இனி வரும் காலங்களின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் களங்கள் செயல்பட வாய்ப்பில்லை. 

இதை வாசிக்கும் போது உங்களுக்குள் தோன்றும் எரிச்சலை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது நீங்களும் நானும் நினைத்தே பார்த்திராத அத்தனை தளங்களை உடைத்துக் கொண்டே வருகின்றது. என்னைப் பொறுத்தவரையிலும் தமிழ்நாடு என்பது இந்தியாவில் ஒட்ட வைக்கப்பட்டுள்ள ஒன்று. டெல்லியின் பார்வையில் தொடக்கம் முதல் இன்று வரையிலும் ஏன் நாளைக்குக்கூடக் கண்ணில் விழுந்த தூசி போல எரிச்சல் தரக்கூடிய சமாச்சாரம். 

எந்த உரிமையைப் பற்றிப் பேசக்கூடாது. பேசுபவர்களை அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அமைதியாக்கிவிடுவார்கள். அது தான் தொடக்கம் முதல் நடந்து வருகின்றது. காரணம் பணம் என்ற பலவீன அடிப்படையில் இங்கே எவரும் எதைப்பற்றியும் குரல் எழுப்பத் தகுதியில்லாதவர்களாக இருக்கும் வரையிலும் நாம் வாழும் வரையிலும் கற்பனைகளை மனதில் வைத்துக் கொண்டு நம் எல்லைக் கோடுகளைப் புரிந்து கொண்டு வாழ்ந்து இறந்து விடுவோம் என்பதே எதார்த்தம். 

மாற்றங்கள் உருவாகும். நாம் அப்போது இங்கே இருக்கப் போவதில்லை. காலம் தீர்மானித்துள்ள கணக்கு வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வர நாம் யார்? 

தம் என்பதனை முதலில் வெறுத்தேன். கால மாற்றத்தில் விரும்பினேன். மறுபடியும் மாற்றம் நிகழ்ந்தது. இப்போது வெறுக்கவும் இல்லை. விரும்பவும் இல்லை. அதனைப் பார்வையாளராகப் பார்க்கும் பக்குவம் வந்து விட்டது. 

எனக்கான அடையாளம் நான் உருவாக்கியது இல்லை. பிறக்கும் போது அது ஒட்டி வைக்கப்பட்டு இதுவே இன்று வரையிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. அதனை மாற்றவும் முடியாது. மாற்றவும் விரும்பவில்லை. அதனைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கான சமூக வாழ்க்கையில் என் தேடலில் மதம் சார்ந்த விசயங்கள் இல்லை என்பது தான் என் வளர்ச்சியின் அடையாளமாகக் கருதுகின்றேன். 

நான் பணிபுரியும் நிறுவன நிகழ்ச்சிகள், உறவுக்கூட்டங்களின் முக்கிய நிகழ்வுகள் போன்ற எல்லா நிகழ்வுகளில் பங்கேற்கும் போது ஒரு வேடிக்கையாளனாக என்னைக் கருதிக்கொள்கிறேன். 

என் புத்திக்கு அப்பாற்பட்டு, என் தனிப்பட்ட திறமைகளைத் தாண்டி கால மாற்றம் என்னை வேறு பாதைக்கு நகர்த்திச் செல்லும் போது, மன ஆறுதல் தேவைப்படும் போது தேவைப்படும் தெய்வ நம்பிக்கைகள் (அல்லது) பிரபஞ்ச சக்தி (அல்லது) ஏதோவொரு அப்பாற்பட்ட சக்தி ஏதோவொன்று நம்மை இயக்குகின்றது என்று உறுதியாக நம்புகிறேன். 

அதனை மதம் என்ற குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வர விரும்புவதில்லை. மதம் எனக்கு எதனையும் கற்றுத் தரவில்லை. அதில் இருந்து கற்றுக் கொள்ள ஒன்றுமே இல்லை என்பது தான் என் தனிப்பட்ட கருத்து. 

சமூகம் தான் என்னை வழிநடத்துகின்றது. நல்லது கெட்டதும் கலந்து நிறைந்த இந்த மனிதக்கூட்டம் தான் மாற்றத்தை உருவாக்குகின்றார்கள். பாடங்களை உள்ளே இருந்து எடுக்காமல் புராண, இதிகாசங்களை நோண்டி நொங்கெடுப்பது என்பது வாழ்வின் கடைசிக் காலகட்டத்தில் செயல்பட முடியுமால் இருக்கும் போது வேண்டுமென்றால் மன அமைதிக்கு எடுத்துக்கொள்ளலாமே என்பேன். 

செயல்பட வாய்ப்பு இருக்கும் அத்தனை தளங்களிலும் ஏன் நம்மால் செயல்பட முடிவதில்லை? நமக்கான சிந்தனை என்பது மாறிக் கொண்டே இருப்பது? அதனை ஏன் நாம் மாற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது? நாளைய நமது மாற்றத்தைப் பற்றி நாம் யோசிப்பதைப் விட இன்றைய ஒரு நாள் கடமையை நாம் சரியாகச் செய்துவிடலாமே? 

"மனிதன் என்பவன் மகத்தான சல்லிப்பயல்" என்பது அடிப்படை ஆதாரம். இவர்களைத்தான் நாம் கையாள வேண்டும். இவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் உருவாக்கும் மாயவலை தான் மதம் என்ற அடையாளத்தை உருவாக்குகின்றது. தேவைப்படும் நேரத்தில் தேவைப்படுகின்றதை எடுத்துக் கொள்வோம். அதற்காக அது தான் நம் முக்கியத் தேவை என்பதை முட்டாள்தனமாகக் கொள்கையை விட்டு வெளியே வந்து நின்று வாழ்ந்து பார்க்கலாமே? 

சாதீய அடையாளம் என்பது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் அழிந்து போய் விடும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உறுதியாக நம்பினேன். ஆனால் இன்று பிரமாண்டமாக விஸ்வரூபம் போல வளர்ந்து வருகின்றது. பலரும் அதனை வளர்க்கவே விரும்புகின்றார்கள். மகத்தான ஆச்சரியம் என்னவென்றால் உயர்கல்வி கற்றவர்கள், புலம் பெயர்ந்து பல இன மக்களுடன் வாழ்பவர்கள், அதீத திறமை கொண்டவர்கள் என்று அத்தனை பேர்களும் இதனை விட்டு வெளியே வர விரும்புவதில்லை என்பதனை கடந்த சில ஆண்டுகளாகக் கவனித்து வருகின்றேன். 

சற்றுப் பயமாக உள்ளது. நெருங்கிய நட்பு உடைபட்டு விடுமோ ? என்று யோசித்துள்ளேன். மாற்றுக் கருத்து என்பதனைக் கூடத் தனிப்பார்வையாகப் பார்க்க இங்கே யாரும் தயாராக இல்லை. இதற்குப் பின்னால் உரிமைகள் என்றொரு வார்த்தைகளைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள். நீ சாதியை வைத்துத் தானே உனக்கான உரிமையைப் பெற்றாய்? உன் குழந்தைகளும் அதன் வழியே தானே கல்லூரிக்குச் செல்லப் போகின்றார்கள்? அனுபவிக்கும் போது ஆரத்தழுவி விட்டு இப்போது அட அசிங்கமே? என்று ஏன் சொல்கிறாய்? இது போன்ற பல கேள்விகள் என்னைத் தாக்குகின்றது, 

சாதியப் பார்வையில் பிராமணர்களை மையப்படுத்தி வந்த ஒவ்வொரு கேள்விகளும் இன்று வலுவிழந்து போய்விட்டது. ஆனால் நம்மவர்கள் இன்னமும் அதனைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

இடை நிலை சாதி என்று ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்களோ அப்பொழுதே நியோ பிராமின் (நவ பார்ப்பனர்கள்) என்றொரு புதிய கூட்டம் உருவாக்க தொடங்கியது. இந்தக் கூட்டம் தான் இன்று சாதியை வளர்க்கின்றார்கள். வளர்க்க விரும்புகின்றார்கள். அதன் மூலம் கிடைக்க வேண்டிய ஆதாயத்தை அறுவடை செய்கின்றார்கள். அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம் என்று அத்தனை தளங்களிலும் இது தான் நடந்து கொண்டிருக்கின்றது. 

இது எப்போது மாறும் என்பதனை என்னால் யூகிக்க முடியவில்லை. 

ஆனால் தனக்கான ஒரு அடையாளம் என்பதனை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகமும் உருவாக்கி வந்தது. இன்று அதில் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது. இவர் ஆசிரியர், இவர் தலைவர், இவர் நடிகர், இவர் எழுத்தாளர் என்ற மாயப் பிம்பம் உடைபட்டு விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்தையும் உடைத்துப் போட்டு விட்டது. 

யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாகப் பலருக்கும் நடுக்கம் உருவாகின்றது. என் இடத்தை இவர் பிடித்து விடுவாரோ? என்ற இடைவிடாத போராட்டத்தில் சாதீயத்தை உள்ளே கொண்டு வருகின்றார்கள். அரசியலில் தொடங்கும் இந்த வெடிகுண்டு சமாச்சாரம் படிப்படியாகக் கோவில் வரைக்கும் வந்து நிற்கின்றது. 

எனக்கான தேவையை எந்தத் தெய்வங்களும் வந்து செய்யப் போவதில்லை. எனக்கான அங்கீகாரத்தை என் சாதி தரப்போவதில்லை. அப்படியே தொடக்கத்தில் தந்தாலும் அதைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடர்ந்து அந்தச் சாதிய அடையாளம் காப்பாற்றித் தரப் போவதில்லை. என் இருப்பு என்பதும் எனக்குத் தேவைப்படும்அங்கீகாரம் என்பது என் திறமைகளின் அடிப்படையில், நான் இந்த வாழ்க்கையைப் புரிந்து கொண்டு கையாள்வதன் அடிப்படையில் தான் உருவாகும். 

இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவன் எவனோ அவனுக்கு எந்த அடையாளமும் தேவைப்படாது. 

(இரண்டு படங்களும் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு கண்ணன் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி கண்ணன்.)